அல்லாஹ்வின் பெயரால்…..
இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!
(8)
அபூ
பௌஸீமா
போர்க்களத்தில்
நாட்டைக் காத்துக்கொள்ள படைபலமும் இல்லை. அரசியல் சாணக்கியமும் இல்லை. காலம் கடந்து ஜிஹாத் பிரகடனமும் பலனளிப்பதில்லை.
அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கையிலிருந்து அவன் காட்டிய
வழிமுறைப்படி ஆட்சி செய்திருந்தால்தானே வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரக்கூடியவை. உள்ளத்திலே இறையச்சம் இருந்தால்தான் மறுமையிலே வெற்றி.
ஸஅப் பின் ஜஸ்ஸாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கும்
ஒரு ஹதீஸ் இந்தக்காலக் கட்டத்தில் நடக்கக்கூடிய போர் விதிமுறைகளோடு ஒத்துப்
போகிறதைச் சிந்தனையுள்ளவர்கள் சிறப்பாக விளங்கிக் கொள்வார்கள்:
“அப்வா என்னுமிடத்தில் அல்லது
வத்தான் என்னுமிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடன் நடந்து
வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, “இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்)
சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல்
நடத்தலாமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர்களும்
(எதிரிகளான)
அவர்களைச் சேர்ந்தவர்களே,” என்று பதிலளித்தார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள், “(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனது
தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை,” என்று கூற
நான் கேட்டிருக்கிறேன்.” (நூல் : புகாரி)
இந்த ஹதீஸோடு கீழ்வரும் ஹதீஸையும் இணைத்து வாசித்தால் இதன்
சரியான விளக்கத்தைப் பெற முடியும் என்று கருதுகிறேன்.
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்து
கொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில்
கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக்
கண்டித்தார்கள்.” (நூல்: புகாரி)
முதலாவது ஹதீஸிலே கேட்கப்பட்ட கேள்வியில்
இரவு நேரத் தாக்குதலைப் பற்றித்தான் விசாரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விளங்குவதென்னவென்றால் அன்றிருந்த நபித்
தோழர்கள், பகலில்
போர்க்களங்களில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக் கூடாது என்று அறிந்து
வைத்திருந்தார்கள். அது
மட்டுமல்ல அக்காலத்தில் பகலில் மட்டுமே யுத்தம் நடக்கும். இரவில் இரு தரப்பினரும் யுத்தத்தில் ஈடுபடாதிருப்பார்கள்.
இருந்தாலும், மேற்கூறிய
ஹதீஸின் பிரகாரம் அந்தப் பெண்களும் குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தான்
என்ற ஒரு முடிவுக்கு எப்போது வரலாம் என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்
பட்டுள்ளோம். அப்படியொரு சந்தர்ப்பம்
எழாமலில்லை.
எதிரிப்படைகள் தங்களுக்கு ஓர் அரணாகப் பெண்களையும் சிறுவர்களையும்
ஆக்கிக் கொண்டு போர் புரிகிறார்களென்றால் அந்த இடத்திலே எதிரிகளோடு போர்
செய்யும்போது நடுவில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒரு
நிலைப்பாடு உருவாவதைத் தவிர்க்க முடியாது.
ஹிரோஷிமாவில் நடந்த அனர்த்தம், அநியாயம் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியதும்தான்.
ஹிரோஷிமாவையே சர்வ நாசம் பண்ணியதற்காக எங்கோ ஒரு மூலையில்
ஒரு சந்தையில், பேரூந்தில் அல்லது
கண்காட்சி மண்டபத்தில் குண்டொன்றை வெடிக்க வைத்துச் சிலரைக் கொன்று விட்டால் அது
தண்டனையாகுமா?
அணுகுண்டை ஒரு நாடு ஆயுதமாகப் பாவித்து, சொல்லப்பட்டதுபோல், தலை நகரங்கள் மீது அல்லது மக்கள் வாழக் கூடிய பகுதிகளில் அனர்த்தங்களை
விளைவிக்கின்ற ஒரு நாட்டுக்கும் அப்படியே அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு
தாக்கத்திற்குள்ளான நாடு தார்மீக உரிமை பெறுவதைத்தான் மேற்கூறிய ஹதீஸ் தெளிவு
படுத்துகிறது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
அண்மையில் சில நாடுகளில் நடந்த யுத்தங்களின்போது நாம்
காணக்கூடியதாக இருந்த ஒன்றுதான் தலைவர்கள் எதிரிப்படைகள் வந்தபோது மக்களோடு
மக்களாக ஒளிந்து கொண்டார்கள். மூன்றாம் நிலைப்
படைப்பிரிவினரை அறப்போர் செய்யும்படி ஏவிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறொம் என்று நினைத்துக் கொண்டு
வேறு நாடுகளில் தொழில் செய்வதற்காகச் சென்று தங்கியிருக்கக் கூடியவர்களின்
இல்லங்களில் தற்கொலை குண்டு வெடிப்புக்கள் வைத்துத் தானும் இறந்து
அங்கிருந்தவர்கள் பலரையும் கொன்றிருக்கிறார்கள். இதை, “ஜிஹாத்” என்று சிலர் முண்டியடித்துக் கொண்டு ஃபத்வா கொடுக்க முன்வருகிறார்கள்.
ஒரு நாட்டில் அதிதியாக வேலை பார்க்கும் எவரும் அந்த
நாட்டின் அமானிதம் என்பதை ஏன் இந்த அறிஞர்கள் உணர்கிறார்களில்லை!
சிலர் சொல்வதுபோல், இன்று போர்க்களம் என்பது ஒவ்வொரு நாட்டினதும் தலை நகரங்கள்தான் என்னும் வாதம்
ஏற்புடையதுதான். இல்லையென்று மறுதலிக்க
யாராலும் முடியாது. அண்மைக் காலங்களில் நவீன
யுத்த நுட்பங்கள் மூலம் நடத்தப்பட்ட யுத்தங்கள் யாவுமே தலை நகரங்கள் மட்டுமல்ல
முழு நாட்டையுமே களமாகக் கொண்டதைப் பார்த்தோம்.
இந்த அண்மைக் கால யுத்தங்கள்தாம் இப்படிப்பட்ட அழகான வாத
விவாதங்களை, தர்க்க விதர்க்கங்களை முஸ்லிம்கள்
மத்தியில் மட்டுமல்ல, முஸ்லிமல்லாதார்
மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளன.
திரும்பத் திரும்ப ஏன் முஸ்லிம்கள் மிகவும் தெளிவாகவும்
கவனமாகவும் இந்த விடயத்தில், இந்த விடயத்திலும், இருக்க வேண்டுமென்று கருதுகிறேன் என்றால், எங்களுக்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ள
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றும்படி அல்லாஹ்
நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான் என்பதனால்தான்!
முஸ்லிமல்லாதவர்களால் நாம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறோம். நம்மைச் சீண்டிவிட்டு நமது பொறுமையைச் சோதிக்கிறார்கள். நமது உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு ஏற்படக்கூடிய
வழுக்கல்களைக் காரணம் காட்டி நம்மைப்பற்றி மோசமான மக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்த
வியூகம் அமைக்கிறார்கள்.
அதற்கேற்றாற் போலவே நாமும் நடந்து கொள்கிறோம். நாடு நாடுகளில் இஸ்லாமியப் போராளிகள் என்று தம்மை வரித்துக்
கொண்டவர்களெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகளையும் கைக் குண்டுகளையும் சர்வ
சாதாரணமாகப் பாவிக்கிறதைப் பார்க்கிறோம்.
இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இலகுவாக இஸ்லாமியர்களைச்
சாடுவதற்கு இவர்கள் வழி சமைத்துக் கொடுக்கிறார்கள்!
(இன்ஷா அல்லாஹ்
தொடரும்)
No comments:
Post a Comment