Saturday, December 20, 2014

வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (6)

அல்லாஹ்வின் பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (6)

அபூ ஃபௌஸீமா

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.

இத்தொடரின் ஆறாவது பகுதி இது.

தொடர்ந்து பித்ஆ(மார்க்கத்தில் புதுமை)வினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நோக்குவோம்!

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்ல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மதீனா புனித நகரமாகும், அதில் யார் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஒன்றைப் புகுத்துகின்றாரோ அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றாரோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையும் மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.” (நூல்: முஸ்லிம்)

புதியவற்றை மார்க்கமென்று புகுத்துபவனுக்கும் அவனுக்கு அடைக்கலம் அளிப்பவனுக்கும் ஏற்படும் கைசேதம் மிகப் பாரதூரமானது என்பதை இந்த அறிவிப்பு தெளிவு படுத்துகிறது. பித்அத்வாதிகளின் பித்அத்களைப் பின்பற்றுவதும் அவற்றை நியாயப்படுத்துவதும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான் என்பதை நாம் விளங்க வேண்டும். எவனொருவன் செய்யக் கூடிய வழிகேட்டை நேர்வழி என்று இன்னொருவன் ஏற்றுக் கொள்வது அவனது வழிகேட்டில் தன்னையும் இணைத்துக் கொள்வதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.

புதியவற்றைப் புகுத்தியிருப்பவர் ஓர் உலகம் போற்றும் அறிஞர்; பார்வைக்கு அழகாக உடுத்து கம்பீரமாக இருப்பவர்; எல்லோருடைய மரியாதைக்குமுரியவர்; கராமத்துடையவர் என்றெல்லாம் பெரியவர்களாக்கி அவர்களைப் பின்பற்றுவது அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான்.

ஆகவே, பித்அத்துக்களை அரங்கேற்றுபவர்கள் தொழுகை நடத்துவார்களானால் அவர்களைப் பின் தொடர்ந்து தொழுவது அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான்.

தொழப்போய் அல்லாஹ்வின் சாபத்தையும், வானவர்களின் சாபத்தையும் சபிக்கத் தகுதி பெற்ற அனைத்து மனிதர்களின் சாபத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டுமா? நாம் செய்த கடமையான வழிபாடுகள், உபரியான வழிபாடுகள் யாவும் மறுமையில் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாத செயல்பாடுகளாக ஆக வேண்டுமா?

அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் புதியவற்றை உருவாக்குவதிலிருந்தும் அவ்வாறு உருவாக்கியவர்களைப் பின்பற்றுவதிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.

மார்க்கத்தில் புதியவைகளைப் புகுத்துபவர்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களும் அவற்றை சிலாகித்து அவற்றுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் அடையக்கூடிய கைசேதத்தை ஓரளவு பார்த்தோம். இனி பாவங்கள் என்பது என்ன என்பதும் அதன் விளைவுகள பித்அத்களோடு எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைப் பார்ப்போம்.

வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)

Monday, December 15, 2014

வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (5)

அல்லாஹ்வின் பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (5)

அபூ ஃபௌஸீமா

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.

இத்தொடரின் ஐந்தாவது பகுதி இது.

இனி மார்க்கத்தில் புதியவை – பித் ஆ – எவ்வாறு வழிகேடாகும் என்பதைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மதீனா ஒரு புனிதமான பிரதேசம். எனவே, யார் (மார்க்கத்தில்) புதுமையை உண்டாக்கினாரோ அல்லது அவ்வாறு உண்டாக்கியவருக்கு அடைக்கலம் கொடுக்கிறாரோ அவர் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், (சபிக்கத் தகுதி பெற்ற) அனைத்து மனிதர்களுடைய சாபமும் உண்டாகட்டும். மறுமை நாளில் அவனிடமிருந்து கடமையான அமல்களும் உபரியான அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.” (நூல்: முஸ்லிம்)

அல்லாஹ்வின் மார்க்கத்தில் புதியவைகளைப் புகுத்துபவர்களும் அப்புதியவைகளை மார்க்கமென்று பிரசாரம் செய்பவர்களும் இவற்றைக் கண்மூடிப் பின்பற்றுபவர்களும் மிகவும் கவனமாக நோக்க வேண்டிய ஓர் அறிவுரை இது.

பாவம் செய்தவர் அப்பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம்; அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு அந்தப் பாவத்திலிருந்து மீண்டு விடலாம். அல்லாஹ் நாடியவர்களை அந்தப் பாவத்திலிருந்து விடுதலை செய்வான். எந்தப் பாவத்தைச் செய்தவனாக இருந்தாலும் அவனுடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா என்ற நிலைக்கு ஆளாவதில்லை.

நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய செயல்களான இணை வைப்பு, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை, கொலை செய்யப்பட வேண்டுமென்ற காரணமின்றிக் கொலை செய்தல், வட்டி சாப்பிடுதல் ஆகியவை அல்லாஹ்விடத்தில் பாவங்கள் என்று வரையறுக்கப்படவில்லை, மாறாக அவை பெரும் அநியாயங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதனால்தான் அல்லாஹ் அவற்றை அவனுக்கு எதிரான அநியாயங்கள் என்று சுட்டிக் காட்டுகின்றான்.

நல்லதுதானே என்று புதிய புதிய நடைமுறைகளை மார்க்க அந்தஸ்துக் கொடுத்து தமது நல்லமல்களை ஒன்றுமில்லாததாக ஆக்கிக் கொள்ள எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக விரும்ப மாட்டான்.

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘எனது தடாகத்தின்(ஹவ்ஃதுல் கவ்ஃதர்) பக்கம் எனது தோழர்களில் சிலர் என்னிடம் வருவார்கள். அவர்கள் எனது தோழர்கள் என்று நான் அறிந்து கொண்டதன் பின் அவர்கள் என்னிடமிருந்து (தூரமாக) அப்புறப்படுத்தப் படுவார்கள். அப்போது நான் சொல்வேன், ‘என் தோழர்கள்!’ அப்போது, ‘உங்களுக்குப் பின் மார்க்கத்தில் அவர்கள் என்ன புதுமைகளை (பித்ஆ) உண்டாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.” (நூல்: புகாரி)

மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்கக் கூடியவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்த்தில் உள்ளவர்களாயிருந்தாலும் அவர்களின் மறுமை நிலைப்பாடு வேதனைக்குரியது என்பதே இந்த அறிவிப்பின் எச்சரிக்கை! இன்று நம்மில் பலர் ‘பித்ஆ’தானே என்று எடுத்தெறிந்து அவற்றைப்பற்றிய எந்தவொரு கவனமும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கின்றோம்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்தவர்களைத் தமது தோழர்கள் என்று அறிந்து அறியப்படுத்தியும் அவர்களுக்கு ஹவ்ஃதுல் கவ்ஃதர் நீர் தடுக்கப்பட்டது என்றால் பித்ஆ (மார்க்கத்தில் புதுமை) என்பது எவ்வளவு தூரமான வழிகேடு என்பதை உணர வேண்டும்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிரசங்கத்தில் அல்லாஹ்வைப் புகழ்வார்கள் அவனுக்கே தகுதியான அடிப்படையில், அடுத்து அவர்கள் சொல்வார்கள், ‘யாருக்கு அல்லாஹ் வழிகாட்டினானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது, யாரை அல்லாஹ் வழிகேட்டிலாக்கினானோ அவரை எவராலும் நேர்வழிப்படுத்த முடியாது. உண்மையான சொல் அல்லாஹ்வின் வேதப்புத்தகமாகும், சிறந்த வழிகாட்டல் முஹம்மதுடைய வழிகாட்டலாகும். மிக மோசமானவை எவையென்றால் (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்பட்டவையாகும், ஒவ்வொரு புதிய விடயமும் (மார்க்கத்தில்) புதுமை (பித்ஆ) ஆகும், ஒவ்வொரு புதுமையும் அனாச்சாரமாகும், ஒவ்வொரு அனாச்சாரமும் நரகில் கொண்டு சேர்க்கும்…” (நூல்: ஸுனன் அந்நஸயீ)

வஹீ (இறைச் செய்தி) தவிர்ந்த எந்த ஒரு செயலும் மார்க்கமாக முடியாது. யார் இறைச் செய்தியில் இல்லாத ஒன்றை நன்மையான செயல் என்று மார்க்கத்திற்குள் புகுத்துகிறாரோ அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தில் தனது மனோ இச்சையை அல்லாஹ்வாக்கி விட்டார். அல்லாஹ் நம்மை இந்த வழிகேட்டிலிருந்து காப்பானாக!

இந்த ஹதீஸ் வேறு விளக்கங்களின்றியே விளங்கிக் கொள்ளக் கூடியது. மார்க்கத்தில் புதுமைகள் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மார்க்கத்தில் புதுமைகள் எப்படிப்பட்ட வழிகேடு என்பது பற்றி அடுத்த பகுதியிலும் பார்ப்போம்.

வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)

Friday, December 12, 2014

வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (4)

அல்லாஹ்வின் பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (4)

அபூ ஃபௌஸீமா

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.

இத்தொடரின் நான்காவது பகுதி இது.

குர்ஆனுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாகக் கருத்துக்களை முன்வைத்து அவை மார்க்கமென்று முன்வைத்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றலாமா, அந்தக் கருத்துக்களின் உண்மைத் தன்மையைத்  தீர விசாரிக்க வேண்டுமே என்று ஏன் நாம் சிந்திக்கின்றோமில்லை?

மார்க்கமென்ற பெயரில் பொய்யான செய்திகளைக் கொண்டு வந்த தீயவர்கள் குற்றம் செய்யாத சமூகத்துக்கு அநியாயம் செய்து விட்டார்களே என்பது வெள்ளிடைமலை.

ஆக, அல்லாஹ்வின் வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்: “இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் ஸூரா அல்பகரா 2:176)

கருத்து வேறுபாடு முஸ்லிம்களுக்கு ஓர் அருட்கொடை என்று பிரசாரம் செய்யும் வழிகெட்ட அறிஞர்களும் நம்மிடையே இல்லாமலில்லை. தமது மனோ இச்சைப்படி மார்க்க விளக்கங்கள் கொடுத்து கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பெரும் பிளவிலேயே இருப்பது கண்கூடு.

அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கருத்துச் சொல்லிவிட்டபின் மாற்றுக் கருத்துக் கொண்டு அதை மக்கள் மத்தியில் வைத்தவர்களின் நிலை என்னவென்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இருக்கும் பிரகடனத்தைப் பாருங்கள்! சிந்தியுங்கள்! வழிகேடு எது, பாவம் எது என்று தெளிவாகும்: “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.” (அல்குர்ஆன் ஸூரா அல்மாஇதா 5:3ல் ஒரு பகுதி)

அல்லாஹ்வை நம்பியவர்கள், மறுமையை நம்பியவர்கள், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பி அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் இப்பிரகடனத்தைப் பரிபூரணமாக விளங்கியும் வழிகேடுகளை – பித்அத்துக்களை – அரங்கேற்றுகிறார்களே; இவர்கள் அறியாதவர்களா?

நிச்சயமாக இல்லை! இவர்கள் மனமுரண்டாகவே வரம்பு மீறுபவர்கள். இப்படிப் பட்டவர்களிடமிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கக் கடமைப் பட்டுள்ளோம். அவ்வாறு நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்காதிருந்து மரணித்து விட்டால் நமக்கு ஏற்படக்கூடிய கதியை அல்லாஹ் தெளிவாக விளக்குகின்றான்: “நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ! கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:66)

மீண்டு வர முடியாத நிலையை உணர்கிறார்கள்; காலம் கடந்து விட்டது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. புலம்புவதைத் தவிர வேறு எதைத்தான் செய்ய முடியும்! அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எச்சரித்த அந்த நரக நெருப்பில் வேகும்போதுதான் நினைவு வருகிறது: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள், என்றும் அவர்கள் கூறுவார்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:67)

கண்மூடிப் பின்பற்றாதீர்கள் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்க தலைவர்களையும், பெரியவர்களையும், முன்னோர்களையும், ஷைகுகள் என்றும் அமீர்கள் என்றும் பின்பற்றியபோது அப்பின்பற்றல் நிரந்தர நரகத்தில் சேர்த்துவிடும் என்று சொன்னவர்களைக் கல்லாலும் பொல்லாலும் சொல்லாலும் அடித்ததெல்லாம் ஞாபகத்தில் வரும். புலம்புவதைத் தவிர வேறொன்றும் அவர்களுக்கிருக்காது!

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக, என்பர்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:68)

இவ்வுலகிலே வாழ்ந்தபோது நேர்வழியைக் காட்டி இதில் உள்ளபடி வாழ்ந்தால் கைசேதப்பட மாட்டீர்கள் என்று திரும்பத் திரும்ப அல்லாஹ் சொல்லிக் காட்டினான். என்னிடமே நீ கேள், தருவதற்கு நான் தயாராயிருக்கின்றேன் என்று மிகப் பெரிய கருணையாளன் மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டினான். ஆனால், இந்த மனிதன் அவனை விட்டுவிட்டு பெரியார்களிடமும், நல்லடியார்களென்று அவன் நம்பியவர்களிடமும் தஞ்சம் கோரினான். தனக்கு விடுதலையே இல்லை என்று தெரிந்த பிறகு அல்லாஹ்விடம் நேரடியாக முதன் முதலில் கேட்கிறான் அவனை வழிகெடுத்தவர்களைச் சபிக்குமாறு! என்னே மனிதனின் கைசேதம்! அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம் 146)

அதாவது முஸ்லிம்களுக்கெதிராக ஆயுதமேந்தியவர், முஸ்லிம்களை வஞ்சித்தவர் முஸ்லிமல்ல என்பதைத் தெளிவாக இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.

இன்று முஸ்லிம்கள் மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன, செய்த, அங்கீகரித்தவற்றைப் பின்னால் வந்த அறிஞர்கள் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்து மாற்றியிருக்கின்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அபரிமிதமான மரியாதையும் கௌரவமும் அவர்களின் கண்களை மூடி இதயங்களுக்குத் திரையிட்டு விட்டன.

அதனால் இவ்வாறு மாற்றியவற்றை மார்க்கமாக்கி நபிவழியிலிருந்து மக்களைத் திசை திருப்பி வழிகேட்டின்பால் அழைத்துச் சென்றார்கள். தீர விசாரிக்காமல் சமூகத்தில் பெரும்பாலானோர் நேர்வழி பிறழ்ந்து விட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்று சொல்லியிருக்க வேறு விளக்கம் கொடுப்பவர்கள் அவர்களின் வழிகாட்டலில் வஞ்சனை செய்து விட்டார்கள். இவர்களெல்லாம் இந்த ஹதீஸின் படிப்பினையை உணர்ந்து அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்வழிப்படுவார்களாக!

ஆகவே, வழிகேடு எது என்பதைச் சரிவர விளங்கி நரகத்திற்கு இட்டுச் செல்லும் இவ்வனாச்சாரத்திலிருந்து அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!

வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!


(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)