அல்லாஹ்வின்
பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (1)
அபூ பௌஸீமா
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்
அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர
என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்றும்
சான்று பகர்கின்றேன்.
வழிகேடு என்பதன் அர்த்தம் நேர்வழி பிறழ்ந்து வேறுவழி செல்வதாகும். இந்தச் சொல் இன்று, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆகவே, வழிகேடு பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பது பற்றி ஒரு சிறிய ஆய்வை மேற்கொள்வது நமக்கெல்லாம் நேர்வழி எது என்பதைத் தெளிவாக்கிக் கொள்வதற்கு மிகவும் உதவியாகவிருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்று முஸ்லிம்கள் மத்தியில் வழிகேடு என்பதும் பாவம் என்பதும் ஒன்றே என்ற கருத்து மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே, வழிகேடு,பாவம் என்ற இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்பதை அறிய முயற்சிப்போம்.
வழிகேடு என்பது தெளிவாக நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று இஸ்லாம்
எச்சரிக்கிறது. அதற்கான ஆதாரங்கள் ஏராளம் அல்குர்ஆனிலும் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலிலும் காணக் கிடைக்கின்றன.
பாவம் என்பதைப் பற்றிப் பேசும் இஸ்லாம், நாடியவர்களுக்கு அல்லாஹ்
பாவங்களை மன்னிப்பான் என்ற செய்தியைத் தருகிறது.
ஆகவேதான் வழிகேடு வேறு, பாவம் வேறு என்று இனம் காண
முடிகிறது.
இனி இந்த வழிகேடு பற்றி முதலில் அல்குர்ஆன் என்ன சொல்கிறது
என்பதைப் பார்ப்போம்.
“மேலும், அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய
அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான்(நம்பிக்கை) கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான
வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:36)
இவ்வசனம் வழிகேடு எது என்பதுபற்றி மிகத் தெளிவாகவும்
எளிதாகவும் காட்டுகிறது. விளங்கக்கூடிய விதத்தில் மிக அழகாக ஒழுங்கு படுத்தி
மிகவும் பாரதூரமான எச்சரிக்கையையும் இவ்வசனத்திற்குள் அமைத்துள்ளான்.
பின்பற்றப்பட வேண்டியது வஹீயைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை இது காட்டுகிறது. அல்லாஹ் ஒரு விடயத்தில் ஒரு கட்டளையிட்டு விட்டால்
அல்லது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு விடயத்தில் ஒரு
கருத்துச் சொல்லி விட்டால் அந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அப்படிக் கருத்துச் சொல்லும் அதிகாரம் யாருக்குமே இல்லை! அப்படி யாரும் கருத்துச் சொல்ல முற்படுவாரேயானால்
அவர் தெளிவாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தை மறுப்பவராகும். இதுதான்
இவ்வசனத்தில் இருக்கக்கூடிய எச்சரிக்கை!
மார்க்க விடயத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக கருத்துச் சொல்வதற்கு
அல்லாஹ் அவனுடைய தூதர்களுக்குக்கூட அதிகாரமளிக்கவில்லை! அல்லாஹ்
கூறுகிறான்:
“அன்றியும், நம்மீது
சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய
வலக்கரத்தை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு, பின்னர், அவருடைய நாடி
நரம்பை நாம் தரித்திருப்போம்.”
(அல்குர்ஆன் ஸூரா அல்ஹாக்கா 69:44-46)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கே எவ்வாறான எச்சரிக்கையை இதன் மூலம் அவன் விடுக்கிறான் என்பதைச்
சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். அவ்வெச்சரிக்கைக்கு மாற்றமாக அகிலத்திற்கெல்லாம்
பெரும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களும் நடந்து கொள்ளவில்லை என்பதற்கு இதோ சான்று!
உன்னிப்பாக மிகக் கவனமாக இந்த ஹதீஸை வாசித்துச்
சிந்தியுங்கள். ஸஹீஹ் புகாரியில் 247வது ஹதீஸ்:
“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச்
செய்வது போல் வுளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து
படுத்துக் கொள். பின்னர், ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய
முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை
உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப்
பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு
ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய
உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்,’ என்ற பிரார்த்தனையை
நீ செய்து கொள். (இவ்வாறு சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ
இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப்
பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக
ஆக்கிக் கொள்,” என்று என்னிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
இந்தப் பிரார்த்தைனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய
உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸூலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இல்லை, நீ அனுப்பிய
உன்னுடைய நபியையும் நம்பினேன் என்று சொல்லும்,’ என எனக்குத்
திருத்திக் கொடுத்தார்கள்,” என பராவு இப்னு ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.”
இந்த ஹதீஸின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்ட அந்த
நபித்தோழர் மாற்றிச் சொன்ன சொல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லிவிடவில்லை. கருத்துச் சிதைவை உண்டாக்கி விடவுமில்லை. எனவே, அதை
அனுமதித்து விடலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
விட்டுவிடவுமில்லை. அதை உடனடியாகத் திருத்தி விட்டார்கள். இதிலிருந்து என்ன விளங்குகிறதென்றால் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக்கூட வஹீயில்
மாற்றம் செய்வதற்கு உரிமையோ அதிகாரமோ இல்லை! அது ஒரே
பொருளைத் தரக்கூடிய ஒரு சொல்லாக இருந்தாலும் சரியே!
ஆனால், இன்று
இஸ்லாமிய அறிஞர்கள் பலர் என்ன சொல்கிறார்கள் என்று கொஞ்சம் சிந்தித்துப்
பார்ப்போமானால் எவ்வாறான வழிகேடுகள் நம்மத்தியில் அரங்கேறி அமல் படுத்தப் பட்டுக்
கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும்.
ஆரம்பத்திலேயே மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறும்
ஒரு முக்கியமான எச்சரிக்கையைப் பாருங்கள்:
“இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்
கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கொழைகாளாகி
விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக
அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அன்ஃபால் 8:46)
மீண்டும் அல்லாஹ் மனிதர்களுக்கு விடுக்கும் கட்டளை
என்ன? மனிதர்கள் கட்டுப்பட
வேண்டியது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே என்பதுதான்! இந்தக் கட்டளையில் கருத்து வேறுபாடு கொள்பவர்களின்
நிலையை அவன் தெளிவு படுத்துகிறான். கோழைகளாகிப்
பலம் குன்றிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதுதான்
அது.
சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் கட்டளைக்குக்
கீழ்படியும் ஒருவனுக்கு துன்பங்கள், கஷ்டங்கள்
வரலாம்; அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவன் பொறுமை காக்க
வேண்டும் என்று அறிவுரை கூறுகிறான். அவ்வாறானவர்கள்
அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதற்கும் உத்தரவாதம் கொடுக்கின்றான்.
மற்றுமொரு வசனத்தில் அவன் விடுக்கும் எச்சரிக்கையைப்
புரிந்து கொண்டால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமாக புதுப்புது
விடயங்களை மார்க்கத்தில் புகுத்துபவர்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களும் தமது தவறை
திருத்திக் கொள்ளப் போதுமானது. சிந்தியுங்கள்:
“(நபியே! இன்னும்) நீர் கூறும், “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்,” ஆனால், அவர்கள்
புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக
அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.” (அல்குர்ஆன் ஸூரா ஆலஇம்ரான் 3:32)
அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணிப்பதும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களைப்
புறந்தள்ளுவதும் நிராகரிப்பு என்று அல்லாஹ்வே சொல்கின்றான். இந்தக் குர்ஆனிய வசனத்தோடு கீழ்வரும் ஹதீஸைக் கொஞ்சம்
சிந்தித்துப் பார்த்தால் மேலும் விளக்கம் கிடைக்கும்.
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) உணவு(தானிய)க் குவியல்
ஒன்றைக் கடந்து சென்றபோது, அந்தக் குவியலுக்குள் தமது கையை நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில்
இருந்த) ஈரம் அவர்களது விரல்களில் பட்டது. உடனே அவர்கள், “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் (மழைச் சாரல் பட்டு) வானம் தீங்கிழைத்து விட்டது அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், “ஈரமான(தானியத்தை)தை மக்கள் பார்க்கும் விதமாக மேலே வைத்திருக்கக்
கூடாதா?” என்று கேட்டு விட்டு, “மோசடி செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்,” என்று கூறினார்கள்.”
(அறிவிப்பவர்: அபூஹுரைரா
ரளியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் 147)
இஸ்லாம் வியாபார ஒழுங்குகளைப் பேசும்போது அதற்கான
வழிகாட்டல்களை வகுக்கும்போது எவ்வாறான சிறப்புமிகு சட்டங்களை வகுத்துள்ளது
என்பதற்கு இது ஒரு நிதர்சனமான சாட்சி!
இதில் கருத்து வேறுபாடு கொண்டு வியாபாரிகளான தாங்கள்
நஷ்டமடைய முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டு இவ்வாறான நடவடிக்கைகளை யாரேனும்
நியாயப்படுத்த முற்படுவாரேயானால் அவர் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி
விட்டார்கள் ஏமாற்றி வியாபாரம் செய்பவர் அவரைச் சார்ந்தவர் இல்லை என்று! அவ்வாறு கூறி அவரது உறவு முறைகள் முறிந்து விட்டன
என்று சொன்னார்களா? நிச்சயமாக இல்லை! அவ்வாறானவர்கள்
முஸ்லிம் இல்லை என்றுதான் பிரகடனம் செய்துள்ளார்கள். அல்லாஹ்
நம்மனைவரையும் காப்பாற்றுவானாக! இதற்கு வேறு விளக்கம் தேவையில்லை!
வ ஆகிர் தஃவானா
அனில்ஹம்துலில்லாஹ்!
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
No comments:
Post a Comment