Thursday, December 4, 2014

இமாம்களை அவமதிப்பது யார்?

அல்லாஹ்வின் பெயரால்...
தஃலீம் ஓர் ஆய்வு (4)
இமாம்களை அவமதிப்பது யார்?

-    அபூ பௌஸீமா -



ஓர் இமாமின் கருத்தைக் காரண காரியங்களோடு ஒருவர் விமர்சிக்கும்போது, அவ்வாறானவர்களை ‘இமாம்களை அவமதிப்பவர்கள்’ என்று கூப்பாடு போடும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வேலையை அதிகமாக உலமாக்களே செய்து கொண்டிருக்கிறார்கள். கிடைத்திருக்கும் வெள்ளி மேடையைப் பயன்படுத்தி இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்துக்களை விதைக்கிறார்கள். தம் சகோதர இஸ்லாமியனை பாமரன் என்று பட்டம் சூட்டி குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் அவர்களைத் தூரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான பொய்யான செய்திகளை மக்களிடம் இவர்கள் கூறி மக்களை வழிகெடுக்கும்போது இவர்களிடம் மார்க்கமென்று வலம் வரும் ‘தஃலீம் கிதாபி’ல் ஒரு செய்தி எனக்கு வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தெளிவாக இந்தக் கதை இமாம்களை அவமதிக்கும் ஒரு கதையாகும். வாசகர்களின் கவனத்திற்கு முன் வைத்து எனது கருத்துக்களையும் எழுதுகிறேன்.

இதுதான் கதை:
அல்லாஹு தஆலாவுடைய தர்பாரில் நெருக்கம் பெறுவதற்குப் பரிசுத்தக் குர்ஆனைவிடச் சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை என்ற கருத்து பல ஹதீஸ்களின் மூலமாகக் கூறப்பட்டுள்ளது.

இமாம் அஹ்பது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அல்லாஹு தஆலாவைக் கனவில் தரிசித்து, ‘யா அல்லாஹ்! எதைக் கொண்டு உன்னுடைய சந்நிதானத்தை நெருங்க முடியும்?’ என்று கேட்டேன். அஹ்மதே! என்னுடைய வேதத்தை ஓதுவது கொண்டு, என அல்லாஹ் பதிலளித்தான். விளங்கியா? விளங்காமலா? என்று கேட்டேன். விளங்கி ஓதினாலும் விளங்காவிட்டாலும் இரண்டுமே நெருக்கத்திற்குக் காரணமாகும் என்று கூறினான்.”

கதை கேட்டீர்களா? ஹன்பலி இமாம் என்ன பாடுபடுகிறார் இந்த ஜக்கரிய்யா ஸாஹிபின் கிஸ்ஸாவில்!

தான் அல்லாஹ்வைக் கனவில் கண்டு அல்லாஹ்வோடு பேசிதாகவும், அதுவும் கேள்வி கேட்டுப் பதில் கிடைத்ததாகவும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுமுல்லாஹி அலைஹி (ஹன்பலி மஃத்ஹப் இவர் பெயரில்தான் பின்னால் வந்தவர்களால் உருவாக்கப்பட்டது.) மீது இவ்வளவு பெரிய அபாண்டத்தைச் சுமத்தி அவர்களைப்பற்றி அதுவும் இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணான செய்தியொன்றை அவர் சொன்னதாகச் சொல்லி அவதூறொன்றைச் சுமத்தியிருக்கிறார் இந்த தஃலீம் கிதாபின் ஆசிரியர் ஜக்கரிய்யா ஸாஹிப்.

ஹன்பலி இமாமின் பெயரைப் பயன்படுத்தி அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் கைங்கரியத்தை இக்கதையைப் புனைந்தவர் செய்கிறார். அல்லாஹ்வைக் கனவில் கண்டால் அந்த உருவத்தை அவர் கீறலாம்தானே!

அமல்களின் சிறப்புகள் என்ற இந்தப் புத்தகத்தில் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற பகுதியில் ஹதீஸ் 23: அல்லாஹ்வை நெருங்கச் சிறந்தது குர்ஆன்! என்ற தலைப்பின் கீழ் 213ம் பக்கத்தில் இச்செய்தி கிடைக்கிறது.

ஹன்பலி இமாமின் பெயரை விட்டடித்தால் தான் இந்த இணைவைத்தல்களை கண்மூடிப் பின்பற்றும் கூட்டத்திடம் விற்பனை செய்யலாம் என்பதை ஜக்கரிய்யா ஸாஹிப் நன்றாக அறிந்து வைத்துள்ளார்.

அல்லாஹ்வை நம்பியவர்களை அறிஞர்களின் பெயரைக் கொண்டு ஷைத்தான் எப்படியெல்லாம் வழிகெடுக்கின்றான் என்பதை விசுவாசிகள் உணர வேண்டும்; சிந்திக்க வேண்டும்; கதைகளின் கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

சிந்தனைகளை, அல்குர்ஆனோடும் அல்ஹதீஸோடும் சீர்தூக்கிப் பார்த்தால்தான் வழிகேட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும், நாம் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு), மூஸா வந்து, அவருடைய இரட்சகனும் அவருடன் பேசியபொழுது, “என் இரட்சகனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! உன்பால் நான் பார்ப்பேன்,” என்று கூறினார்; (அதற்கு அல்லாஹ், “மூஸாவே!) நீர் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக; அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைக் காண்பீர்” என்று கூறினான்; ஆகவே, அவருடைய இரட்சகன் அம்மலைமீது வெளிப்பட்டபோது அ(வ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தை தூளாக்கிவிட்டது; இன்னும் மூஸா (திடுக்கிட்டு) மூர்ச்சையாகி விழுந்துவிட்டார்; பின்னர் அவர் தெளிவு பெற்றபோது (அல்லாஹ்விடம்) “நீ மிகப் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் பாவமீட்சி கோருகிறேன்; இன்னும், (உன்னை) விசுவாசிப்போரில் நான் முதன்மையானவன்” என்று கூறினார். (அல்குர்ஆன் ஸூரா அல்அஃராஃப் 7:143)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “வஹீயின் மூலமோ, அல்லது திரைக்கு அப்பாலிருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர எந்த மனிதருக்கும் அல்லாஹ் அவருடன் பேசுவது (சாத்தியம்) இல்லை; அவன் நாடியதை அவன் அனுமதி கொண்டு அவர் (அத்தூதர்) அறிவிப்பார்; நிச்சயமாக அவன், மிக உயர்ந்தவன், தீர்க்கமான அறிவுடையவன். (அல்குர்ஆன் ஸூரா அஷ்ஷுவரா 42:51)

மேற்கூறிய வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவாகச் சொல்லிக் காட்டுவது:
1.   அல்லாஹ்வை எவராலும் பார்க்க முடியாது.
2.   அல்லாஹ் அவனுடைய தூதுவர்களைத் தவிர வேறெந்த மனிதனுடனும் பேசுவதில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கவனியுங்கள்: “உங்கள் இறைவனை நீங்கள் பார்த்தீர்களா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘அவனோ ஒளியானவன்; எப்படி அவனை நான் காண முடியும்,’ என்று பதில் கூறினார்கள்,” என்று அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

நம்பிக்கையாளர்களைப்பற்றி அல்லாஹ் கூறும் இவ்வசனம் அல்லாஹ்வுடன் ஹன்பலி இமாம் அவர்கள் உரையாடியதாகச் சொல்லும் ஜக்கரிய்யா ஸாஹிபின் இந்த அபத்தத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அல்லாஹ்வின் கூற்றைப் பாருங்கள்:
“இன்னும் அவர்கள் தங்கள், இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழ மாட்டார்கள்.” (அல்குர்ஆன் அல்ஃபுர்கான் 25:73)

கடைசியாக, அல்லாஹ்வின் எச்சரிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி நிறைவு செய்கிறேன். உண்மையில் இன்று இமாம்களை அவமதிப்பவர்கள் யார் என்பதைத் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். பள்ளிகளை இன்று ஆக்கிரமித்திருப்பவர்கள் இவர்கள்தான்!

அல்லாஹ்வின் எச்சரிக்கை: “அவர்களுடைய இதயங்கள் மீதும், அவர்களுடைய செவிப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான்; இன்னும், அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிருக்கிறது; மேலும் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு.
இன்னும், ‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறோம்,’ எனக் கூறுவோர் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்; அவர்களோ விசுவாசம் கொண்டவர்களல்லர்.
அவர்கள் அல்லாஹ்வையும், விசுவாசம் கொண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர்; (இதனால்) அவர்கள் தங்களைத்தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை; (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய) நோயுள்ளது; ஆகவே, (அந்)நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்தி விட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லிக் கொண்டிருந்ததன் காரணமாக அவரகளுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.
மேலும், அவரகளிடம், ‘நீங்கள் பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்,’ என்று கூறப்பட்டால் அ(தற்க)வர்கள், ‘நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோர்தாம் (குழப்பவாதிகளல்ல.)’ எனக் கூறுகிறார்கள்.
தெரிந்து கொள்வீராக! நிச்சயமாக, அவர்கள்தாம் குழப்பம் செய்பவர்கள், எனினும், (இதை) அவர்கள் உணரமாட்டார்கள்.” (அல்குர் ஆன் ஸூரா பகரா 7-12)

ஆகவே, அவனுடைய எச்சரிக்கையை உணர்ந்து செயல்படுவதற்கு முஸ்லிம்களுக்கு தைரியத்தையும் நல்லறிவையும் அல்லாஹ் அருள்வானாக!

நரகத்திற்கென்றெ படைக்கப்பட்ட ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாத்து யார் யாருக்கெல்லாம் நேரான வழியைக் காட்டி வெற்றி பெற்றவர்கள் கூட்டத்தில் ஆக்கினானோ அவர்கள் கூட்டத்தில் எம்மையும் சேர்த்து அவனுடைய நேசத்திற்கு உள்ளானவர்களாக எம்மையும் பொருந்திக் கொள்வானாக!


வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment