அல்லாஹ்வின்
பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (2)
அபூ பௌஸீமா
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்
அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர
என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்றும்
சான்று பகர்கின்றேன்.
இத்தொடரின் இரண்டாவது பகுதி இது.
மனோ இச்சைகளைப் பின்பற்றி மார்க்கத்தில்தான்
விரும்பியவற்றையும் தனது அறிவுக்கு எட்டிய மட்டில் இது நல்லதுதானே என்று
வாதிட்டுத் தர்க்கிப்பவர்களின் மனோ நிலையை இங்கு மிகத் தெளிவாக எடுத்துக் காட்டும்
ஒரு குர்ஆனிய வசனத்தைப் பாருங்கள்.
“அவர்களுக்கு (மார்க்க
விடயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும்
அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம்
கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம்
கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.” (அல்குர்ஆன் ஸூரா அல்ஜாஃதியா 45:17)
இக்குர்ஆனிய வசனத்தைக் கீழ்வரும் ஹதீஸின் உதவியுடன்
தெளிவாகப் புரிந்து கொண்டால் நல்லோருக்கு மிகப் பெரிய படிப்பினை இருக்கிறது. அல்லாஹ் தான் அனுப்பிய கட்டளைகளைப் பற்றிக்
குறிப்பிடுகின்றான். அவன் மனிதனுக்குக் கொடுத்த மார்க்க அறிவைப் பற்றியும்
சொல்லிக் காட்டுகின்றான்.
“அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும்
அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும்
இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களின்
பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு
இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தன் மார்க்கத்திற்கும் தன் மானம்
மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில்
விழுகிறவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர்
வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு
மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம்
அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத்
துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று
விடும். அது சீர் குலைந்து விட்டால் முழு உடலும் சீர்
குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’ என்று இறைத்தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,” என் நுஃமான் இப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு
அறிவித்தார்.” (நூல்: ஸஹீஹ் புகாரி 52)
இஸ்லாத்திலே அனுமதிக்கப் பட்டவையும் தடுக்கப்
பட்டவையும் தெளிவானவை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படிச்
சொல்லியிருக்க, இல்லை, அது தவறு, மக்ரூஹ் என்றொரு நிலைப்பாடு இருக்கின்றது; இஜ்மாஃஉ -ஒன்றிணைந்த முடிவு- என்றொரு நிலைப்பாடு இருக்கின்றது என்று சொல்கிற
அறிஞர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் தங்களின் இவ்வாறான கருத்துக்களுக்கு எதை
ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள் என்று அவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். அவ்வாறானவர்களுக்கான எச்சரிக்கை மிகத் தெளிவானது, மிகப் பாரதூரமானது. சிந்தனை
சீர்கெட்டு விட்டால் மனித மாக்களாகத்தான் மனிதன் ஆகி விடுவான். அவனுக்கு மீட்சியே இல்லை!
இவ்வாறான மனிதர்களைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப்
பாருங்கள்:
“நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே,” என்று கூறுகின்றான்.” (அல்குர்ஆன் ஸூரா அல்முதஃப்ஃபிஃபீன் 83:13)
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து -அதாவது, அல்குர்ஆனிலிருந்தும்
ஆதாரபூர்வமான ஹதீஸிலிருந்தும்- சத்தியம் எடுத்துக் காட்டப்பட்டால் அதை ஏற்றுக்
கொள்ளாமல் இவர்கள், பின்னால் உருவாக்கிய பொய்களை, அனாச்சரங்களை
மேம்படுத்தி வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
குர்ஆனிய வசனங்கள் இவ்வாறான வழிகேடுகளைச்
சுட்டிக்காட்டும் போதெல்லாம் அந்த வசனம் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு வந்ததல்ல மாறாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
காலத்தவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு குர்ஆன் வசனமும் எம்மைப்பார்த்து ஒரு
வழிகாட்டலை, ஒரு கட்டளையை, ஓர்
எச்சரிக்கையை விடுக்கிறது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். அல்லாஹ்வின்
இந்த எச்சரிக்கையைப் பாருங்கள்:
“தூர் மலையை உங்கள் மேல்
உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த(தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்
கொள்ளுங்கள் என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள்
செவியேற்றோம்; மேலும் (அதற்கு) மாறு செய்தோம்
என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள்
இதயங்களில் காளைக் கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள்
முஃமின்களா(நம்பிக்கையாளர்)க இருந்தால்
உங்களுடைய ஈமான்(நம்பிக்கை) எதைக் கட்டளையிடுகிறதோ அது
மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.” (அல்குர் ஆன் ஸூரா அல்பகரா 2:93)
முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?
“அஷ்ஹது அ(ன்)ல்லாஹ் இலாஹ
இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹி,” –“வணங்கத் தகுதி பெற்றவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர
என்று சாட்சி பகர்கின்றேன்; இன்னும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி
பகர்கின்றேன்,”- என்று
யாரெல்லாம் பிரகடனம் செய்து அல்லாஹ்விடம் முழுமையாகச் சரணடைகிறார்களோ அவர்கள்தாம்
முஸ்லிம்கள்.
அவர்கள் கொடுத்த அவ்வாக்குறுதிக்கு மாற்றம் செய்து
அல்லாஹ் அல்லாதவர்களிடம் தம் தேவைகளைக் கேட்டு அவர்களிடம் சரணடைபவர்கள் இந்தக்
குர்ஆனிய வசனத்தை பச்சையாக மறுக்கிறார்கள். அல்லாஹ்வை
விலக்கி விட்டு மரணித்தவர்கள், பெரியார்கள், மகான்கள், நல்லடியார்கள், இமாம்கள், உலமா சபை, அந்த இயக்கம், இந்த இயக்கம் தாமாக தீர்மானம் செய்து ஒவ்வொரு பக்கம்
அவர்களின் இதயங்களில் பக்தி புகட்டப் பட்டுள்ளது கண்கூடு.
அல்லாஹ்வின் எந்தவொரு சொல்லும் தேவையில்லாமல்
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்திற்கு
இறக்கி வைக்கப்படவில்லை.
இவ்வாறு மூன்றாமவருக்கு வழிப்படுபவர்கள் நஷ்டவாளிகளே
என்று அல்லாஹ் குறிப்பிடுவதைப் பாருங்கள்: “எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள்
கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!” (அல்குர்ஆன் ஸூரா அல்முஃமினூன் 23:34)
அல்லாஹ்வே நஷ்டவாளிகள் என்று குறிப்பிட்டு விட்டால்
அதன் பாரதூரம் இவர்களுக்கு விளங்க வேண்டாமா? அல்லாஹ்வுக்கு
முன்னால் இவர்கள் என்ன கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள்? இதயங்களைப் பூட்டி வைத்துக் கொள்வதனால் நஷ்டமடையப்
போகிறவர்கள் இவர்களே!
மூன்றாமவரைப் பின்பற்றுபவரின் நிலைப்பாடு எவ்வாறானது
என்பதை அல்லாஹ் ஓர் உதாரணத்துடன் விளக்குகிறான்: “அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர்
கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம்
செய்யும்) ஒரு மனிதனும் ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும்
இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ்
– எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும்
அவர்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அஸ்ஸுமர் 39:29)
பாமரன் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு
மனிதனுக்கும்கூட இந்த உதாரணத்தை விளங்கிக் கொள்ள வேறு எவரது உதவியும் தேவையில்லை! தொடர்ந்தும் கண்மூடிப் பின்பற்றி அல்லாஹ்வின்
தண்டனைக்கு ஆளாகுவதில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள விளைபவர்கள்
அல்லாஹ்வின் பக்கமும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கமும்
உடனடியாக வர வேண்டும்!
அல்லாஹ்வின் வழிகாட்டல் மிகத் தெளிவானது: “(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே
கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ், (நல்லோருக்கு) நன்மாராயம்
கூறுவோராகவும் (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன்
மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன்
உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம்
கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான
பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள்
மாறுபட்டுப் புறகணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு நம்பிக்கை
கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். அவ்வாறே, அல்லாஹ் தான்
நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.” (அல்குர் ஆன் ஸூரா அல்பகரா 2:213)
கருத்து வேறுபாடுகள் கொள்வதற்கு ஒரு முக்கியமான
காரணம் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. மனிதர்கள் வழிகெட்டு விடாமல்
தூதர்களையும் வேதத்தையும் காலத்துக்குக் காலம் அனுப்பினாலும் அவர்களிடையே
ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டதன் காரணத்தினால் அல்லாஹ்வின் வேதத்தை மறுத்தார்கள். “நான்” என்ற மமதை வந்துவிட்டபின் அல்லாஹ்வின் கட்டளைகள்
அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை! மார்க்கத் தீர்ப்பு அளிக்கத் தகுதி பெற்றவன் தானேதான்
என்று தன்னைதானே அறிமுகம் செய்து கொண்டு அல்லாஹ்வின் வசனங்களுக்கு மனோ இச்சைப்படி
விளக்கமளிக்கத் தலைப்பட்டார்கள்.
இன்றும் அவ்வாறானவர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். எந்தெந்த அரபிப் பாடசாலையில் படித்து வெளியாகிறார்களோ
அக்கல்விக் கூடத்தை அறிந்து கொள்வதற்காக உலமாக்களின் பெயர்களுக்குப் பின்னால்
குறிப்பிடப்படும் அறிமுகத்தை அவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஓர் அளவு கோளாக
இன்று மக்கள் மன்றத்திலே போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அவ்வாறான ஒரு கல்விக்கூடம் “முஃப்தி” என்று அதில் படித்தவர்களை அறிமுகப் படுத்துகிறது. அங்கிருந்து வெளியாகிய இவர்கள், “முஃப்தி” என்றால் “ஃபத்வா” – மார்க்கத்
தீர்ப்பு – கொடுப்பவர் என்று மக்களிடம் சொல்லித் தாமே மார்க்கத்
தீர்ப்புக் கொடுக்கத் தகுதியானவர்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனோ அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களோ இவர்களின் தீர்ப்புக்களுக்கு ஆதாரமில்லை! அல்லாஹ்
எங்களை இவ்வாறான வழிகேட்டிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக!
வழிகேடுகளைப் பற்றிப் பேசுவதானால் ஒவ்வொரு குர்ஆனிய
வசனமும் ஒவ்வொரு ஹதீஸும் ஆதாரமாக அமையும்!
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
No comments:
Post a Comment