அல்லாஹ்வின்
பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (3)
அபூ ஃபௌஸீமா
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மீதும் அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும்
உண்டாவதாக!
வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை,
அல்லாஹ்வைத் தவிர என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும்
அடியாருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.
இத்தொடரின் மூன்றாவது பகுதி இது.
இந்தக் குர்ஆனிய வசனத்தை
அவதானமாக மிகக் கவனமாகச் சிந்தித்தால் வழிகேட்டின் பக்கம் தலை நிமிர்ந்தும்
பார்க்க எண்ணம் வராது.
“அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப்
பார்த்து; ‘நீங்கள் நம்பிக்கை கொண்ட பின் (நிராகரித்து) காஃபிர்கள்(நிராகரிப்பாளர்கள்) ஆகி விட்டீர்களா? (அப்படியானால்) நீங்கள் நிராகரித்ததற்காக
வேதனையைச் சுவையுங்கள்,’ (என்று கூறப்படும்.)”
(அல்குர் ஆன் ஸூரா ஆலுஇம்ரான் 3:106)
கருத்த முகத்துடன் இருப்பவர்கள்
எவ்வளவு பயந்து முக்கிப் போயிருக்கிறாகளென்று சிந்தியுங்கள்! நம்பிக்கை கொண்டதன் பின்னர்
நிராகரித்து விட்டவர்கள்தான் கருத்த முகத்துடன் இருப்பார்கள். எப்படி இவர்கள்
நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள் என்று தேடிப்பார்த்தால் நிச்சயமாக
அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வழிப்படுவதினின்றும்
மாறுபட்டு வழிகேட்டிலாகி விடுவதினால்தான் என்பது விளங்கும்.
ஆகவேதான் அல்லாஹ் தெளிவாக
நம்பிக்கை கொண்டோருக்கு ஒரு கட்டளையை ஆணித்தரமாக விடுக்கின்றான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய
முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிப்பட்ட) முஸ்லிம்களாகவன்றி நீங்கள்
மரிக்காதீர்கள்.” (அல்குர்ஆன் ஸூரா ஆலுஇம்ரான் 3:102)
அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய
முறைப்படி அஞ்சுவது எவ்வாறு?
அவனை நேரடியாக இந்தப் பாவிகளான
நாம் தொடர்பு கொள்ள முடியாது என்றும், அவன் எம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் பேச மாட்டான் என்றும், அவனை அணுக நமக்கு அருகதை இல்லை
என்றும் நம்மிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவனை அணுக இடைத் தரகர்களை
வக்கீல்களாக அமர்த்த வேண்டுமென்றும் கூறி வைத்திருக்கிறார்கள். இவர்களைக் கண்மூடிப்
பின்பற்றியதன் பலனாக, “உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம்,” என்ற பிரகடனத்திற்கு மாறு
செய்கின்றோம். அவ்வாறு மாறு செய்யும்போது
தூரமான வழிகேட்டிலாகி விட்டோம் என்பது நமக்கே புரிகிறது. ஆதலால்தான், அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில்
முஸ்லிம்களாகவேயன்றி மரணிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறான்.
ஒரு பாரதூரமான விடயத்தைக் கூறி
அவன் விடுக்கும் எச்சரிக்கை சிந்தித்து நேர்வழிப் படுவதற்குப் போதுமானது: “முஃமிங்களே! (விசுவாசிகளே!) ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு
செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள்
தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக
(கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்ஹுஜுராத் 49:6)
பொய்யான ஒரு செய்தியைக் கொண்டு
வருபவன் தீயவன் என்றே அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான். அவ்வாறு அவன் கொண்டு வரும்
பொய்யைத் தீர விசாரிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்பவன் தீங்கு செய்ய முற்படுவான்
என்பதையும் விளக்குகின்றான். இந்த வசனம் ஊரிலும், ஊடகங்களிலும் வரும் செய்திகள்
பற்றித் தெரிவிப்பது போல் தெரிகிறது. ஆனால், அதில் கூறப்படும் விடயம் அதற்கும் அப்பால் செல்லக்கூடியது.
மார்க்கத்தில் உள்ளது என்று
ஒருவன் ஒரு விடயத்தைச் சொல்லிவிட்டால் அந்த விடயம் தீர விசாரிக்கப்பட்டுத்தான்
ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், நாம் நேர்வழியைப் பின்பற்றுவதிலிருந்து பிறழ்ந்து
வழிகேட்டிலாகி விடுவோம். தீர விசாரிக்காத காரணத்தினால்தான் இன்று நம்மத்தியிலே பல
பாதைகள் (மஃத்ஹப்) வந்து வழிகேட்டை
மார்க்கமாக்கியிருக்கின்றன.
No comments:
Post a Comment