அல்லாஹ்வின் பெயரால்…..
இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!
(9)
அபூ
பௌஸீமா
ஊடகத்தின் பங்கு
இன்றைய போர்க்களத்தில் மட்டுமல்ல சமாதானச் சூழலிலும்கூட
ஊடகத்தின் பங்கு மிகப் பெரிய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்க
முடியாது.
உண்மைகளை மறைத்து சரித்திரம் எழுதப்படவும்
முடியாது. சரித்திர சம்பவங்கள் திரித்துக் கூறப்படும்போதும் மறைத்துவிட
எத்தனிப்புகள் நடக்கும் போதும் மறந்துவிட வேண்டும் என்று கேட்கப்படும் போதும் அதனதன்
நோக்கங்கள் தெளிவு படுத்த்ப்படல் வேண்டும்.
நமது தலைவர்கள் செய்தார்கள் என்பதற்காக
நடந்த உண்மைகளை முஸ்லிம்கள் மறைத்துவிட எத்தனிப்பது நமது எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாப்பில்லாத
ஒரு சூழலுக்குத் தள்ளுவதாகவே அமையும். நம் சமூகத்திலுள்ள நல்லறிஞர்கள், ஊடகவியலாளர்கள் இப்படிப்பட்ட பிழைகளைச் சுட்டிக் காட்டாமல் விடுவதால் சமூகத்திற்கும்
சர்வதேசரீதியில் உலக மாந்தர் அனைவருக்கும் இது ஓர் இழப்பாகத்தான் அமையும்.
எந்தச் சமூகத்தை எடுத்துக் கொண்டாலும்
பத்திரிகை வாசித்தல், வானொலி கேட்டல், தொலைக் காட்சிச்
செய்திகளைப் பார்த்தல் இன்னும் மற்றுமுண்டான ஊடகங்கள் மூலமாகச் செய்திகளை அறிதல் ஆகியவற்றை
மிகச் சிலரே செய்கிறார்கள். அதிகமானவர்கள் அடுத்தவர் சொல்வதைக் கேட்டுத்
தெரிந்து கொள்கிறார்கள்.
ஊடகங்களும், குறிப்பிட்ட
சிலவற்றைத் தவிர, அவற்றின் சொந்தக் காரர்களின் விருப்பு வெறுப்புக்கு
அமையத்தான் செய்திகளை வெளியிடுகின்றன. அப்படிச் செல்லும் வாய்ச் செய்திகளும்
பெரும்பாலான ஊடகங்களின் செய்திகளும் சொல்லக்கூடியவரின் சொந்தக் கருத்துக்களும் சேர்க்கப்பட்டுத்
திரிபடைந்துதான் சென்றடைகின்றன.
ஆகவே, இஸ்லாமிய அறிஞர்கள், சமூக நலன்விரும்பிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள்
ஆகிய அனைவரினதும் பங்கு இந்த விடயத்தில் மிகவும் சிலாகிக்கத் தக்கது.
கருத்துக்கள் வெளியிடப்படும்போது அவற்றிலே
பிழை வந்து விடும், அதன் பின்னால் விமர்சனம் வரும், என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட விடயங்களை அணுகாமலேயே சிலர் இருப்பதுண்டு!
தவறான கருத்துக்கள் தர்க்கரீதியாக அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்படும்போது அவற்றைப் பெருமனதோடு ஒத்துக் கொள்வதுதான்
சமூக சிந்தனையாளர்களுடைய அடிநாதமாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே நாம் நம்மைச்
சூழவுள்ள முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலே இஸ்லாம் காட்டும் மனித நேயத்தின் மகத்துவத்தை
எடுத்துக் காட்டக் கூடியவர்களாக இருப்போம். இஸ்லாமியர்கள் ‘பயங்கரவாதிகள்’ என்று கூக்குரலிடும் எதிரணி ஊடகங்களின் முகத்திரைகளைக்
கிழித்து அவர்களை உலகுக்கு இனம் காட்ட முடியும்.
நியாயமான சிந்தனையுள்ள ஊடகவியலாளர்கள்
தமது தவறான கருத்தை மாற்றிக் கொள்ள அது வழிவகுக்கும்.
எதிரிகளின் பிரச்சார பலத்தை மிகத் தெளிவாக
அறிந்திருந்தும் நமக்கென்று உலகளாவிய அளவில் ஓர் ஊடகத்துறை இருக்கிறதா?
ஊடகத்துறை முழுவதையும் அவர்கள் வசம். ‘இஸ்லாமியப் பயங்கரவாதிகள்’ ஒட்டுமொத்தமாக
அவர்களின் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிச்
சேவைகள், இணைய தளங்கள் என்பனவெல்லாம், இப்படித்தான்
முஸ்லிம்களை அறிமுகப்படுத்தி சாதாரண பொது மகனை மூளைச் சலவை செய்கின்றன.
முஸ்லிம்களால் நடத்தப்படக்கூடிய சில
பத்திரிகைகளில்கூட குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட செய்தித்தாபனத்தை மேற்கோள் காட்டி
அச்செய்திகளை அப்படியே, அவர்களுடைய சொற்பிரயோகங்களுடனேயே பிரசுரம்
செய்யப்படுகின்றமையைப் பார்க்கிறோம்.
நாம் என்ன சொல்கிறோம்? இரு நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைஅமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள
இஸ்லாம் காட்டும் வழிமுறை என்ன என்பது பற்றி மனிதவினத்திற்கு அறிவுறுத்த முயற்சி செய்கின்றோமா? அதற்குக்கூட நம் எதிரிகளைத்தான் நம்பியிருக்கின்றோம். அவர்கள் இருட்டடிப்புச்
செய்கிறார்கள், பொய்யான தகவல்களைக் கொடுக்கிறார்கள், முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிடுகின்றார்கள் என்று அங்கலாய்க்கின்றோம்.
யுத்தம் வெற்றியோ தோல்வியோ ஒரு முடிவுக்கு
வருகிறது அல்லது முடிந்துவிட்டது போல ஒரு நிலைப்பாடு களத்திலே இருக்கின்றது. பாடம் படிக்கின்றோமா? இந்த ஊடகத்துறையைப் பயன்படுத்தி நமது நிலையை
உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்கின்றோமா? இல்லை! ஏன்?
நாம்தான் கருத்து வேறுபாட்டிலேயே காலத்தைக்
கழித்துக் கொண்டிருக்கின்றோமே!
எந்தவொரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் நன்மையும்
தீமையும் ஒருங்கே உள்ளதுதான். மதுவும் சூதும் சில நன்மைகளும் பல தீமைகளும்
உள்ள காரணத்தினால் அவை தடை செய்யப்பட்டுள்ளதை ஆதாரமாகக் காட்டி தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றை ஹராம் என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள் அறிஞ்ர்கள் சிலர்.
ஆலிம்களிடம் மட்டுமே இஸ்லாத்தை ஒப்படைத்துள்ள
முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
அதன் பலன்தான், இன்று பொருளாதார வசதிகள் இருந்தும் இஸ்லாமியர்கள் ஒலி / ஒளிபரப்பு நிலையங்களை
ஆரம்பிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. முஸ்லிம் பெயர்தாங்கிகளின் ஒலி / ஒளிபரப்பு நிலையங்கள் இருக்கலாம். ஆனால், அவை யாவும் பணம் பண்ணுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்குபவை.
யுத்தம் ஆரம்பிப்பதற்குப் பல மாதங்களுக்கு
முன்பிருந்தே எதிரிகளின் ஊடகங்கள் முஸ்லிம்களைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டிப்
பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுகின்ற ஒரு நிலைமையைப் பார்க்கின்றோம். அவர்களுக்கு அவல் கொடுத்து மென்று மென்று இருக்கவே சில இஸலாமிய பெயர்தாங்கிக் குழுக்கள்
இயங்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் கூடும் இடங்களில், பள்ளிக் கூடங்களில், பேரூந்துகளில் குண்டுகளை வைத்து அப்பாவிகளைக்
கொன்று வீரம் பேசுகிறார்கள். இவர்கள் நிச்சயமாகப் பயங்கரவாதிகள்தான்!
மேல் குறிப்பிட்ட அல்குர்ஆனின் ஸூரா
அல்அன்ஃபால் 8:60வது வசனத்தில் அல்லாஹ் நமக்கிடும் கட்டளை இந்த
ஊடகத்துறை அமைப்பிற்கு, அதை வலிமைப் படுத்துவதற்கு ஆதாரமாகக் கொள்ளக்
முடியாதா?
ஆட்சியதிகாரம் தனக்குக் கிடைக்கும் வரை
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்கள் வாழ்ந்த
சூழலில் குடியிருந்த எவர் மீதும் சட்டவாதிக்கம் செலுத்தி தண்டனைகள் கொடுத்ததாக
(அதாவது குற்றவியல் சட்டம் அமுலுக்குக்
கொண்டு வந்ததாக) நான் எந்தச் சம்பவத்தையும் காணவில்லை.
அல்லாஹ்வின் ஏகத்துவத்தைப் போதித்து
அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்கும்படி உபதேசம் செய்தார்கள். ஆட்சியதிகாரம்
வந்ததன் பின்னர்தான் ஷரீஆ அந்த ஆளுமையின் கீழ் அமல் படுத்தப்பட்டது.
ஆகவே, முஸ்லிம்கள்
என்று தம்மைப் பிரகடனப் படுத்துபவர்கள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்று பரிபூரணமாக நம்பி
அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
எனவே, இஸ்லாமியச்
சகோதரர்களே! நாம் எந்த விடயமாக இருந்தாலும் அந்த விடயத்திலே அல்லாஹ்வின்
கட்டளையிலும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலிலும் தீர்வுகளைப்
பெற வேண்டும். அதுதான் நம்மை நரகத்திலிருந்து பாதுகாத்துக்
கொள்ள அல்லாஹ்வின் கருணையைப் பெற்றுதர ஒரு காரணியாக இருக்கும்.
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
(முற்றும்)
No comments:
Post a Comment