அல்லாஹ்வின்
பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (5)
அபூ ஃபௌஸீமா
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்
அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர
என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்றும்
சான்று பகர்கின்றேன்.
இத்தொடரின் ஐந்தாவது பகுதி இது.
இனி மார்க்கத்தில் புதியவை – பித் ஆ – எவ்வாறு வழிகேடாகும் என்பதைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மதீனா ஒரு
புனிதமான பிரதேசம். எனவே, யார் (மார்க்கத்தில்) புதுமையை
உண்டாக்கினாரோ அல்லது அவ்வாறு உண்டாக்கியவருக்கு அடைக்கலம் கொடுக்கிறாரோ அவர் மீது
அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், (சபிக்கத் தகுதி
பெற்ற) அனைத்து மனிதர்களுடைய சாபமும் உண்டாகட்டும். மறுமை நாளில்
அவனிடமிருந்து கடமையான அமல்களும் உபரியான அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.” (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் மார்க்கத்தில் புதியவைகளைப்
புகுத்துபவர்களும் அப்புதியவைகளை மார்க்கமென்று பிரசாரம் செய்பவர்களும் இவற்றைக்
கண்மூடிப் பின்பற்றுபவர்களும் மிகவும் கவனமாக நோக்க வேண்டிய ஓர் அறிவுரை இது.
பாவம் செய்தவர் அப்பாவத்திற்குப் பிராயச்சித்தம்
செய்து கொள்ளலாம்; அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு அந்தப்
பாவத்திலிருந்து மீண்டு விடலாம். அல்லாஹ் நாடியவர்களை அந்தப் பாவத்திலிருந்து விடுதலை
செய்வான். எந்தப் பாவத்தைச் செய்தவனாக இருந்தாலும் அவனுடைய
அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா என்ற நிலைக்கு ஆளாவதில்லை.
நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய செயல்களான
இணை வைப்பு, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை, கொலை செய்யப்பட
வேண்டுமென்ற காரணமின்றிக் கொலை செய்தல், வட்டி
சாப்பிடுதல் ஆகியவை அல்லாஹ்விடத்தில் பாவங்கள் என்று வரையறுக்கப்படவில்லை, மாறாக அவை பெரும் அநியாயங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதனால்தான் அல்லாஹ் அவற்றை அவனுக்கு எதிரான
அநியாயங்கள் என்று சுட்டிக் காட்டுகின்றான்.
நல்லதுதானே என்று புதிய புதிய நடைமுறைகளை மார்க்க
அந்தஸ்துக் கொடுத்து தமது நல்லமல்களை ஒன்றுமில்லாததாக ஆக்கிக் கொள்ள எந்த ஒரு
மனிதனும் நிச்சயமாக விரும்ப மாட்டான்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘எனது தடாகத்தின்(ஹவ்ஃதுல் கவ்ஃதர்) பக்கம் எனது தோழர்களில் சிலர் என்னிடம் வருவார்கள். அவர்கள் எனது
தோழர்கள் என்று நான் அறிந்து கொண்டதன் பின் அவர்கள் என்னிடமிருந்து (தூரமாக) அப்புறப்படுத்தப் படுவார்கள். அப்போது நான்
சொல்வேன், ‘என் தோழர்கள்!’ அப்போது, ‘உங்களுக்குப்
பின் மார்க்கத்தில் அவர்கள் என்ன புதுமைகளை (பித்ஆ) உண்டாக்கினார்கள்
என்பது உங்களுக்குத் தெரியாது.” (நூல்: புகாரி)
மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்கக் கூடியவர்கள்
எப்படிப்பட்ட அந்தஸ்த்தில் உள்ளவர்களாயிருந்தாலும் அவர்களின் மறுமை நிலைப்பாடு
வேதனைக்குரியது என்பதே இந்த அறிவிப்பின் எச்சரிக்கை! இன்று நம்மில்
பலர் ‘பித்ஆ’தானே என்று எடுத்தெறிந்து
அவற்றைப்பற்றிய எந்தவொரு கவனமும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கின்றோம்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அங்கு வந்தவர்களைத் தமது தோழர்கள் என்று அறிந்து அறியப்படுத்தியும் அவர்களுக்கு
ஹவ்ஃதுல் கவ்ஃதர் நீர் தடுக்கப்பட்டது என்றால் பித்ஆ (மார்க்கத்தில்
புதுமை) என்பது எவ்வளவு தூரமான வழிகேடு என்பதை உணர வேண்டும்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு
அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
தமது பிரசங்கத்தில் அல்லாஹ்வைப் புகழ்வார்கள் அவனுக்கே தகுதியான அடிப்படையில், அடுத்து அவர்கள்
சொல்வார்கள், ‘யாருக்கு அல்லாஹ் வழிகாட்டினானோ அவரை எவரும்
வழிகெடுக்க முடியாது, யாரை அல்லாஹ் வழிகேட்டிலாக்கினானோ அவரை எவராலும்
நேர்வழிப்படுத்த முடியாது. உண்மையான சொல் அல்லாஹ்வின் வேதப்புத்தகமாகும், சிறந்த
வழிகாட்டல் முஹம்மதுடைய வழிகாட்டலாகும். மிக மோசமானவை
எவையென்றால் (மார்க்கத்தில்) புதிதாக
உண்டாக்கப்பட்டவையாகும், ஒவ்வொரு புதிய விடயமும் (மார்க்கத்தில்) புதுமை (பித்ஆ) ஆகும், ஒவ்வொரு
புதுமையும் அனாச்சாரமாகும், ஒவ்வொரு அனாச்சாரமும் நரகில் கொண்டு சேர்க்கும்…” (நூல்: ஸுனன் அந்நஸயீ)
வஹீ (இறைச் செய்தி) தவிர்ந்த எந்த ஒரு செயலும் மார்க்கமாக முடியாது. யார் இறைச் செய்தியில் இல்லாத ஒன்றை நன்மையான செயல்
என்று மார்க்கத்திற்குள் புகுத்துகிறாரோ அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தில் தனது மனோ
இச்சையை அல்லாஹ்வாக்கி விட்டார். அல்லாஹ் நம்மை இந்த வழிகேட்டிலிருந்து காப்பானாக!
இந்த ஹதீஸ் வேறு விளக்கங்களின்றியே விளங்கிக் கொள்ளக்
கூடியது. மார்க்கத்தில் புதுமைகள் நரகத்தில் கொண்டு போய்ச்
சேர்க்கும் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்கத்தில் புதுமைகள்
எப்படிப்பட்ட வழிகேடு என்பது பற்றி அடுத்த பகுதியிலும் பார்ப்போம்.
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment