அல்லாஹ்வின்
பெயரால்…
வழிகேடும் பாவமும்! ஒரு கண்ணோட்டம்! (4)
அபூ ஃபௌஸீமா
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மீதும் அவரை தூய்மையாகப் பின்பற்றுபவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும்
உண்டாவதாக!
வணக்குத்துக்குத் தகுதியானவன் யாருமில்லை,
அல்லாஹ்வைத் தவிர என்று சாட்சி பகர்கின்றேன்; முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும்
அடியாருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.
இத்தொடரின் நான்காவது பகுதி இது.
குர்ஆனுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாகக் கருத்துக்களை முன்வைத்து அவை
மார்க்கமென்று முன்வைத்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றலாமா, அந்தக் கருத்துக்களின் உண்மைத்
தன்மையைத் தீர விசாரிக்க வேண்டுமே என்று
ஏன் நாம் சிந்திக்கின்றோமில்லை?
மார்க்கமென்ற பெயரில் பொய்யான
செய்திகளைக் கொண்டு வந்த தீயவர்கள் குற்றம் செய்யாத சமூகத்துக்கு அநியாயம் செய்து
விட்டார்களே என்பது வெள்ளிடைமலை.
ஆக, அல்லாஹ்வின் வேதத்தில் கருத்து
வேறுபாடு கொண்டவர்கள் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்: “இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை
உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு
கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே
இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் ஸூரா அல்பகரா 2:176)
கருத்து வேறுபாடு
முஸ்லிம்களுக்கு ஓர் அருட்கொடை என்று பிரசாரம் செய்யும் வழிகெட்ட அறிஞர்களும் நம்மிடையே
இல்லாமலில்லை. தமது மனோ இச்சைப்படி மார்க்க
விளக்கங்கள் கொடுத்து கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பெரும் பிளவிலேயே இருப்பது
கண்கூடு.
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கருத்துச் சொல்லிவிட்டபின் மாற்றுக் கருத்துக்
கொண்டு அதை மக்கள் மத்தியில் வைத்தவர்களின் நிலை என்னவென்பதை நாம் சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய்
இருக்கும் பிரகடனத்தைப் பாருங்கள்! சிந்தியுங்கள்! வழிகேடு எது, பாவம் எது என்று தெளிவாகும்: “இன்றைய தினம் உங்களுக்காக
உங்கள் மார்க்கத்தைப் பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என்
அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.” (அல்குர்ஆன் ஸூரா அல்மாஇதா 5:3ல் ஒரு பகுதி)
அல்லாஹ்வை நம்பியவர்கள், மறுமையை நம்பியவர்கள், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பி அவரைத் தலைவராக ஏற்றுக்
கொண்டவர்கள் இப்பிரகடனத்தைப் பரிபூரணமாக விளங்கியும் வழிகேடுகளை – பித்அத்துக்களை – அரங்கேற்றுகிறார்களே; இவர்கள் அறியாதவர்களா?
நிச்சயமாக இல்லை! இவர்கள் மனமுரண்டாகவே வரம்பு
மீறுபவர்கள். இப்படிப் பட்டவர்களிடமிருந்து
நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கக் கடமைப் பட்டுள்ளோம். அவ்வாறு நாம் நம்மைப்
பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்காதிருந்து மரணித்து விட்டால் நமக்கு ஏற்படக்கூடிய
கதியை அல்லாஹ் தெளிவாக விளக்குகின்றான்: “நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ! கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள்
வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:66)
மீண்டு வர முடியாத நிலையை
உணர்கிறார்கள்; காலம் கடந்து விட்டது என்பது
அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. புலம்புவதைத் தவிர வேறு எதைத்தான் செய்ய முடியும்! அல்லாஹ்வும் அவனது தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எச்சரித்த அந்த நரக நெருப்பில் வேகும்போதுதான்
நினைவு வருகிறது: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள்
தலைவர்களுக்கும், எங்கள்
பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள், என்றும் அவர்கள் கூறுவார்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:67)
கண்மூடிப் பின்பற்றாதீர்கள்
என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்க தலைவர்களையும், பெரியவர்களையும், முன்னோர்களையும், ஷைகுகள் என்றும் அமீர்கள்
என்றும் பின்பற்றியபோது அப்பின்பற்றல் நிரந்தர நரகத்தில் சேர்த்துவிடும் என்று
சொன்னவர்களைக் கல்லாலும் பொல்லாலும் சொல்லாலும் அடித்ததெல்லாம் ஞாபகத்தில் வரும். புலம்புவதைத் தவிர வேறொன்றும்
அவர்களுக்கிருக்காது!
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு
வேதனையைத் தருவாயாக, அவர்களைப்
பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக, என்பர்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:68)
இவ்வுலகிலே வாழ்ந்தபோது
நேர்வழியைக் காட்டி இதில் உள்ளபடி வாழ்ந்தால் கைசேதப்பட மாட்டீர்கள் என்று
திரும்பத் திரும்ப அல்லாஹ் சொல்லிக் காட்டினான். என்னிடமே நீ கேள், தருவதற்கு நான்
தயாராயிருக்கின்றேன் என்று மிகப் பெரிய கருணையாளன் மீண்டும் மீண்டும்
ஞாபகமூட்டினான். ஆனால், இந்த மனிதன் அவனை விட்டுவிட்டு
பெரியார்களிடமும், நல்லடியார்களென்று
அவன் நம்பியவர்களிடமும் தஞ்சம் கோரினான். தனக்கு விடுதலையே இல்லை என்று தெரிந்த பிறகு அல்லாஹ்விடம்
நேரடியாக முதன் முதலில் கேட்கிறான் அவனை வழிகெடுத்தவர்களைச் சபிக்குமாறு! என்னே மனிதனின் கைசேதம்! அல்லாஹ் நம்மைக்
காப்பாற்றுவானாக!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச்
சார்ந்தவர் அல்லர்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம் 146)
அதாவது முஸ்லிம்களுக்கெதிராக
ஆயுதமேந்தியவர், முஸ்லிம்களை வஞ்சித்தவர்
முஸ்லிமல்ல என்பதைத் தெளிவாக இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.
இன்று முஸ்லிம்கள் மத்தியில்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன, செய்த, அங்கீகரித்தவற்றைப் பின்னால்
வந்த அறிஞர்கள் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்து மாற்றியிருக்கின்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட
அபரிமிதமான மரியாதையும் கௌரவமும் அவர்களின் கண்களை மூடி இதயங்களுக்குத் திரையிட்டு
விட்டன.
அதனால் இவ்வாறு மாற்றியவற்றை
மார்க்கமாக்கி நபிவழியிலிருந்து மக்களைத் திசை திருப்பி வழிகேட்டின்பால் அழைத்துச்
சென்றார்கள். தீர விசாரிக்காமல் சமூகத்தில்
பெரும்பாலானோர் நேர்வழி பிறழ்ந்து விட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஒன்று சொல்லியிருக்க வேறு விளக்கம் கொடுப்பவர்கள் அவர்களின் வழிகாட்டலில் வஞ்சனை
செய்து விட்டார்கள். இவர்களெல்லாம் இந்த ஹதீஸின் படிப்பினையை உணர்ந்து
அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்வழிப்படுவார்களாக!
ஆகவே, வழிகேடு எது என்பதைச் சரிவர
விளங்கி நரகத்திற்கு இட்டுச் செல்லும் இவ்வனாச்சாரத்திலிருந்து அல்லாஹ்
நம்மனைவரையும் காப்பானாக!
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
No comments:
Post a Comment