Sunday, November 30, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 8

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

                                  (8)


அபூ பௌஸீமா

போர்க்களத்தில்

நாட்டைக் காத்துக்கொள்ள படைபலமும் இல்லை. அரசியல் சாணக்கியமும் இல்லை. காலம் கடந்து ஜிஹாத் பிரகடனமும் பலனளிப்பதில்லை.

அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கையிலிருந்து அவன் காட்டிய வழிமுறைப்படி ஆட்சி செய்திருந்தால்தானே வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரக்கூடியவை. உள்ளத்திலே இறையச்சம் இருந்தால்தான் மறுமையிலே வெற்றி.

ஸஅப் பின் ஜஸ்ஸாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கும் ஒரு ஹதீஸ் இந்தக்காலக் கட்டத்தில் நடக்கக்கூடிய போர் விதிமுறைகளோடு ஒத்துப் போகிறதைச் சிந்தனையுள்ளவர்கள் சிறப்பாக விளங்கிக் கொள்வார்கள்:
“அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, “இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே,” என்று பதிலளித்தார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை,” என்று கூற நான் கேட்டிருக்கிறேன்.” (நூல் : புகாரி)

இந்த ஹதீஸோடு கீழ்வரும் ஹதீஸையும் இணைத்து வாசித்தால் இதன் சரியான விளக்கத்தைப் பெற முடியும் என்று கருதுகிறேன்.
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.” (நூல்: புகாரி)

முதலாவது ஹதீஸிலே கேட்கப்பட்ட கேள்வியில் இரவு நேரத் தாக்குதலைப் பற்றித்தான் விசாரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விளங்குவதென்னவென்றால் அன்றிருந்த நபித் தோழர்கள், பகலில் போர்க்களங்களில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக் கூடாது என்று அறிந்து வைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல அக்காலத்தில் பகலில் மட்டுமே யுத்தம் நடக்கும். இரவில் இரு தரப்பினரும் யுத்தத்தில் ஈடுபடாதிருப்பார்கள்.

இருந்தாலும், மேற்கூறிய ஹதீஸின் பிரகாரம் அந்தப் பெண்களும் குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தான் என்ற ஒரு முடிவுக்கு எப்போது வரலாம் என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். அப்படியொரு சந்தர்ப்பம் எழாமலில்லை.

எதிரிப்படைகள் தங்களுக்கு ஓர் அரணாகப் பெண்களையும் சிறுவர்களையும் ஆக்கிக் கொண்டு போர் புரிகிறார்களென்றால் அந்த இடத்திலே எதிரிகளோடு போர் செய்யும்போது நடுவில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒரு நிலைப்பாடு உருவாவதைத் தவிர்க்க முடியாது.

ஹிரோஷிமாவில் நடந்த அனர்த்தம், அநியாயம் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியதும்தான்.

ஹிரோஷிமாவையே சர்வ நாசம் பண்ணியதற்காக எங்கோ ஒரு மூலையில் ஒரு சந்தையில், பேரூந்தில் அல்லது கண்காட்சி மண்டபத்தில் குண்டொன்றை வெடிக்க வைத்துச் சிலரைக் கொன்று விட்டால் அது தண்டனையாகுமா?

அணுகுண்டை ஒரு நாடு ஆயுதமாகப் பாவித்து, சொல்லப்பட்டதுபோல், தலை நகரங்கள் மீது அல்லது மக்கள் வாழக் கூடிய பகுதிகளில் அனர்த்தங்களை விளைவிக்கின்ற ஒரு நாட்டுக்கும் அப்படியே அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு தாக்கத்திற்குள்ளான நாடு தார்மீக உரிமை பெறுவதைத்தான் மேற்கூறிய ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

அண்மையில் சில நாடுகளில் நடந்த யுத்தங்களின்போது நாம் காணக்கூடியதாக இருந்த ஒன்றுதான் தலைவர்கள் எதிரிப்படைகள் வந்தபோது மக்களோடு மக்களாக ஒளிந்து கொண்டார்கள். மூன்றாம் நிலைப் படைப்பிரிவினரை அறப்போர் செய்யும்படி ஏவிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறொம் என்று நினைத்துக் கொண்டு வேறு நாடுகளில் தொழில் செய்வதற்காகச் சென்று தங்கியிருக்கக் கூடியவர்களின் இல்லங்களில் தற்கொலை குண்டு வெடிப்புக்கள் வைத்துத் தானும் இறந்து அங்கிருந்தவர்கள் பலரையும் கொன்றிருக்கிறார்கள். இதை, “ஜிஹாத்” என்று சிலர் முண்டியடித்துக் கொண்டு ஃபத்வா கொடுக்க முன்வருகிறார்கள்.

ஒரு நாட்டில் அதிதியாக வேலை பார்க்கும் எவரும் அந்த நாட்டின் அமானிதம் என்பதை ஏன் இந்த அறிஞர்கள் உணர்கிறார்களில்லை!

சிலர் சொல்வதுபோல், இன்று போர்க்களம் என்பது ஒவ்வொரு நாட்டினதும் தலை நகரங்கள்தான் என்னும் வாதம் ஏற்புடையதுதான். இல்லையென்று மறுதலிக்க யாராலும் முடியாது. அண்மைக் காலங்களில் நவீன யுத்த நுட்பங்கள் மூலம் நடத்தப்பட்ட யுத்தங்கள் யாவுமே தலை நகரங்கள் மட்டுமல்ல முழு நாட்டையுமே களமாகக் கொண்டதைப் பார்த்தோம்.

இந்த அண்மைக் கால யுத்தங்கள்தாம் இப்படிப்பட்ட அழகான வாத விவாதங்களை, தர்க்க விதர்க்கங்களை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, முஸ்லிமல்லாதார் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளன.

திரும்பத் திரும்ப ஏன் முஸ்லிம்கள் மிகவும் தெளிவாகவும் கவனமாகவும் இந்த விடயத்தில், இந்த விடயத்திலும், இருக்க வேண்டுமென்று கருதுகிறேன் என்றால், எங்களுக்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றும்படி அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான் என்பதனால்தான்!

முஸ்லிமல்லாதவர்களால் நாம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறோம். நம்மைச் சீண்டிவிட்டு நமது பொறுமையைச் சோதிக்கிறார்கள். நமது உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு ஏற்படக்கூடிய வழுக்கல்களைக் காரணம் காட்டி நம்மைப்பற்றி மோசமான மக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்த வியூகம் அமைக்கிறார்கள்.

அதற்கேற்றாற் போலவே நாமும் நடந்து கொள்கிறோம். நாடு நாடுகளில் இஸ்லாமியப் போராளிகள் என்று தம்மை வரித்துக் கொண்டவர்களெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகளையும் கைக் குண்டுகளையும் சர்வ சாதாரணமாகப் பாவிக்கிறதைப் பார்க்கிறோம்.

இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இலகுவாக இஸ்லாமியர்களைச் சாடுவதற்கு இவர்கள் வழி சமைத்துக் கொடுக்கிறார்கள்!

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Saturday, November 29, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 7

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

                                  (7)


அபூ பௌஸீமா

இனி ஜிஹாத் – அறப்போர்!

அன்று தமது பிறந்தகத்தை, வளர்ந்த ஊரை, கூட்டாக வாழ்ந்த குடும்பத்தை விட்டு விரட்டியதோடல்லாது, தஞ்சம் புகுந்த யத்ரிப் நகருக்கும் படை நடத்திச் சென்று அக்கிரமம் செய்யத் துணிந்த மக்காவாசிகளுக்கு எதிராகப் போர் செய்யும்படி அல்லாஹ் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பணித்தான். ஆயுதம் ஏந்தி தற்காத்துக் கொள்ளும் முதலாவது போர் பத்ரிலே தொடங்கியது. ஜிஹாத் என்ற பதத்தை, கண்டவர்களெல்லாம் பாவித்து அதன் புனிதத் தன்மையை முஸ்லிமல்லாதார் மத்தியிலே பிழையான விளக்கத்துடன் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

‘இஸ்லாமியக் குழுக்களும்’ இஸ்லாமிய சகோதரத்துவமும்

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் உலகத்தில் இல்லாத இந்தக் காலக் கட்டத்தில் முஸ்லிமல்லாதோருக்கு எதிரான ஒரு யுத்தத்தை யார் பிரகடனப் படுத்துவது?

அங்கொன்றும் இங்கொன்றும் என்று குழுக்களை அமைத்துக் கொண்டு அவ்வக்குழுக்களுக்கு ‘பைஅத்’ செய்துவிட்டால் கிலாஃபத் உருவாகி விடுமா?
அப்படி உருவாகியவர்கள் ஜிஹாத் பிரகடனப்படுத்த முடியுமா? அந்த உரிமை யாரிடமுள்ளது?

உணர்ச்சிவசப்படும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த உரிமையைப் பெறுகிறானா? முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கேட்க நாதியில்லை, ஆகவே, நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்கிறோம் என்று பொறுப்புதாரிகளாக மாறும் இவர்களுக்கு அந்தப் பொறுப்பை ஏற்க அருகதையுண்டா, அதிகாரம்தான் உண்டா?

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் இவர்களைத் தமது தலைமையாக ஏற்று அவர்களின் கட்டளைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நம்பிக்கையாகச் செயல்படுமா?

அல்குர்ஆன், அல்ஹதீஸை ஆதாரமாகக் கொண்டவர்கள், இல்லை என்ற பதிலைத்தான் கொடுக்கின்றார்கள். அப்படியானால் இப்படிப்பட்ட குழுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பாவி மக்களை குண்டு வைத்துத் தாக்கி அவர்களின் உயிருக்கு ஆபத்து விழைவிப்பது கொலை இல்லையா?

இவர்களுடைய உணர்வுகளை, சகோதர வாஞ்சையை மறுதலிக்கவில்லை. அந்த உணர்வுகள் பாராட்டப்பட வேண்டும். இஸ்லாமிய சகோதரத்துவத்தை மிகவும் சிலாகித்துப் பேசி முஸ்லிம்கள் ஓருடலும் ஓருயிரும்போல் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியப் போதனை – வழிகாட்டல்.

உடம்பிலே ஓரிடத்தில் ஏற்படும் தாக்கம் முழு உடம்பிலும் உணரப்பட்டு உள்ளத்தில் வேதனையை எப்படி ஏற்படுத்துகிறதோ அப்படி, ஒரு முஸ்லிமுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை மற்ற முஸ்லிம்கள் உணர வேண்டும், உதவிக்குச் செல்ல வேண்டும், என்பதுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்.
அந்த உணர்வுகளோடுதான் நாம் வாழ வேண்டும். ஆனால், அந்த உணர்வுகளை மட்டுமே வெளிக்காட்டி இன்று முஸ்லிமல்லாதோரிடையே இஸ்லாத்தின் போர் அணுகு முறைகளையும் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் பற்றிப் பிழையான ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

வரம்பு மீறுதல் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது

இன்று தத்தமக்கு ‘இஸ்லாமிய’ என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு இயங்கக்கூடிய எத்தனையோ குழுக்கள் இஸ்லாமியர்களின் ஏகப் பிரதிநிதிகள் ‘தாமே’ என்று சொல்லிக் கொள்கின்றார்கள். இக்குழுக்களில் அறிஞர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்கள் இன்றைய உலக நடப்புக்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் பிரிந்திருக்கக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத் தீர்ப்புக்களைக் (ஃபத்வாக்கள்) கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பலனாகத் தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாமிய யுத்த ஒழுக்கத்திற்குப் பங்கம் விளைவிக்காது என்று சொல்லித் தாமே இஸ்லாமிய உலகின் ஆட்சித் தலைவராகி முடிவெடுக்கின்றார்கள். அவர்களுக்கென்று உணர்வுகளுக்கு ஆட்பட்ட சிலரைத் தவிர ஓர் ஆட்சியில்லை, அதிகாரமுமில்லை. அப்பாவி இளைஞர்கள் மூளைச் சலவைக்காளாகி அநியாயமாகத் தம்முயிரைக் கொடுத்து அழிகிறார்கள்.

உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு வரம்பு மீறிச் செயல்பட நமக்கு அனுமதியில்லை. ஓர் இஸ்லாமிய நாட்டுக்கெதிராக நிராகரிப்பாளர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாடு போர் தொடுத்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பாளனின் படை முகாம்கள் உலகத்தின் எந்தக் கோணத்திலிருந்தாலும் அவற்றைத் தாக்குவது போர் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது.

ஆனால், இன்னுமொரு இஸ்லாமிய நாட்டிலோ அல்லது முஸ்லிமல்லாதவர்கள் ஆட்சி செய்யக்கூடிய நாட்டிலோ வாழக்கூடிய அவ்வாக்கிரம நாட்டைச் சேர்ந்த சாதாரண பொதுமகனைக் கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள் இதை அங்கீகரிக்கலாமா? அப்படி அங்கீகரிப்பவர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையிலிருந்தும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலிலிருந்தும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

“யுத்தம் செய்வது தடுக்கப்பட்டுள்ள (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும், புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் சீர் குலைக்கப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு. ஆதலால், எவரேனும் மீறி உங்கள் மீது(போர் புரிய) வந்தால் அவர் உங்கள் மீது மீறியது போன்று நீங்களும் அவர் மீது மீறி (போர் புரியச்) செல்லுங்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்பகரா 2:194)

மேற்கூறிய அல்குர்ஆன் வசனம் எங்களுக்குத் தெரிவிக்கக்கூடிய ஒரு பேருண்மையை நாம் மறுப்பதற்கில்லை. அநியாயம் செய்யப்படுபவர் அந்த அநியாயத்திற்குப் பகரமாக அதே செயலை அநியாயம் செய்தவருக்குச் செய்வதற்கு அல்லாஹ் இந்த வசனத்தில் அனுமதியளிக்கின்றான்.

ஒரு நாடு, ஓரூர், ஒரு சமூகம் என்ற அடிப்படையில் அந்நாட்டுக்கு, அவ்வூருக்கு, அச்சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தண்டனை கொடுப்பது யார்?
கேள்வியில் சிக்கல் எதுவுமில்லை. அதே வசனத்தில் இன்னுமொரு முக்கியமான எச்சரிக்கையையும் மறந்துவிடக் கூடாது. அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருப்பதாக தொடர்ந்து அறியப்படுத்துகிறான்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Friday, November 28, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 6

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

                              (6)


அபூ பௌஸீமா

அல்லாஹ்வின் கட்டளையொன்றை இங்கு எடுத்தாள்வது மிகப் பொருத்தம் என்று நினைக்கிறேன்: “(விசுவாசிகளே!) அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள்; அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக, விரோதத்தால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள்,” (அல்குர் ஆன் ஸூரா அல்அன்ஆம் 6:108 வசனத்தின் ஒரு பகுதி)

அல்லாஹ்வின் இக்கட்டளையை மனதில் இருத்தித் தொடர்வோம்.

ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கெதிராக, அல்லது யுத்தத்திற்கெதிராக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவ்வார்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கர்கள். தம் நாட்டின் தேசியக் கொடி இவ்வாறு மிக மோசமான முறையிலே அவமதிக்கப்படுவதைப் பார்க்கும் அவர்கள் உணர்வுகளைச் சங்கடத்திற்குள்ளாக்குகின்றோம் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்!

உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கக்கூடிய ஓர் ஆர்ப்பாட்டத்தில் சவூதி அரேபியாவின் கொடியை அப்படிச் செய்ய முற்பட்டால் அதனை நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? (சவூதி அரேபியாவின் கொடியில் “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹி,” என்று அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க!)

நமக்குச் சுதந்திரம் இருப்பதைப் போலவே மற்றவர்களுக்கும் அந்தச் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறந்து செயல்படத் துணியக் கூடாது.

முஸ்லிம்களின் நம்பிக்கை, அதனோடு ஒட்டிய கடமைகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதனோடு மேற்கூறிய வசனம் ஒத்துப்போவதை உணரக் கூடியவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.

ஒரே வசனத்தில் எவ்வளவு விசாலமான வளமான அர்த்தங்களை உள்ளடக்கி முஸ்லிம்கள் தூர நோக்கோடு சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்ற அறிவுரையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

தேசியக் கொடிகளையும், தேசிய கீதங்களையும் தலை குனிந்து வணங்கி, எழுந்து நின்று மரியாதை செய்வதன் மூலம் இன்று அதிகமான நாடுகளில் அல்லாஹ்வுக்கு இணையாகத்தானே அவற்றைப் புனிதப்படுத்துகிறார்கள்!

எதிரியை இனம் காணாமல் கண்மூடிப் பின்பற்றும் தலைமைத்துவங்கள்

குவைத் ஆக்கிரமிப்பின் போதும் பக்தாதில் அன்றிருந்த அமெரிக்கத் தூதுவர் குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையில் சச்சரவில் இருந்த பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளும்படி அறிவுரை கூறியதாக ஒரு செய்தி வந்ததை ஞாபகப்படுத்துவது பொருத்தமென்றுணர்கின்றேன்.

சகோதரர்களுக்கிடையில் இருக்கக்கூடிய சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி பிளவுகளை உண்டாக்கி அதில் குளிர் காய்வதற்கே சிலர் இருப்பதைப் போலவே நாடுநாடுகளும் இருக்கின்றன.

ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு எங்கே போனது அறிவு? மூட்டி விட்டவனைக் குறை கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. கண்மூடிப் பின்பற்றியவன்தான் குற்றவாளி. இதை ஏனோ இன்று நமது சமூகத்திலே படித்தவர்கள்கூட உணர்கின்றார்களில்லை. வேதனைக்குரிய விடயம் இதுதான்!

நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை ஞாபகமூட்டிச் செய்யப்படும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் கையாலாகாத சிலரின் வேலை என்று விமர்சனங்கள் வரலாம். ஆங்காங்கே ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அல்லது ஒரு சொற்பிரயோகத்தை மேற்கோள் காட்டி இவர்களெல்லாம் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றும் அவர்களின் அடிவருடிகள் என்றும் முத்திரைகள் குத்தப்படலாம்!

இஸ்லாமியர்கள் மத்தியில் அநேக காலத்திற்குப் பிறகு அல்குர்ஆனும் அல்ஹதீஸும் மட்டுமே நாட்டின் சிறப்புவாய்ந்த சட்டங்களாக இருக்கும், அதையே இனிமேல் இந்நாட்டின் சட்ட ஒழுங்காகப் பிரகடனப் படுத்துகிறோம் என்று பாக்கிஸ்தான் நாடாளுமன்றம், அந்நாட்டின் மேல்சபை ஆகியவற்றில் ஓர் அரசியல் சாசன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அது சட்டமாகவும் ஆகியது.

என்ன ஆனது? பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் கைது செய்யப்பட்டார். அரசியல் சாசனம் இடை நிறுத்தப்படட்து. ஒரு பெரிய நாடகம் அரங்கேறி அந்த முயற்சி தோல்வி கண்டது. காரணங்கள் புனைந்துரைக்கப் பட்டன. இறுதியில், ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகள் ஆட்சிபீடத்தில்!


தேசியம், இனம், மொழிவெறி

56 நாடுகள் உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகள் என்று அறிமுகம்!

முஸ்லிம் நாடு என்றால் இஸ்லாமிய ஆட்சி இருக்க வேண்டும். எங்கே இருக்கிறது இஸ்லாமிய நாடு? ஆகையால், எங்கே இருக்கிறார் இஸ்லாமிய நாட்டுக்கான தலைவர் – கலீஃபா? அப்படி ஒருவர் இருந்தால்தானே உலக முஸ்லிம்கள் அவரின் கீழ் ஒன்றுபட முடியும். அப்போதும், வீஸா எடுத்துக்கொண்டுதான் ஒரு முஸ்லிம் அந்நாட்டிற்குள் செல்ல முடியும் என்ற சட்டம் வந்துவிடுமோ என்ற நிலைப்பாடு இல்லாமலில்லை.

அந்த அளவுக்கு இன்று முஸ்லிம்கள் மத்தியிலே தேசியமும், இனப்புழுக்கமும், மொழிவெறியும் புகுந்து நாசம் விழைந்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில்கூட பிரதேசவாதமும் மொழிவெறியும் முதலிடம் வகிப்பதை வேதனையோடு பார்க்கிறோம்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 5

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

(5)


அபூ பௌஸீமா

அதிகாரப் போட்டி, தூய எண்ணமற்ற தலைமைத்துவங்கள்

இன்று உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மத்தியில் பல குழுக்கள் உருவாகியுள்ளமையைக் காண்கிறோம். அவ்வொவ்வொரு குழுவின் தலைவரும் தானே இஸ்லாத்தின் பொறுப்புதாரி என்பதுபோல் நடந்து கொள்வதை, நடக்க முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. தனது குழுவின் முழுப்பொறுப்பையும் செவ்வனே செய்து கொள்ள முடியாத இவர்கள், தமது அமைப்பின் அங்கத்தவர்களிடம் சட்டத்தையும் ஒழுங்கையும் சரியாக நிலை நிறுத்த முடியாத இவர்கள், உலக முஸ்லிம்களின் தலைமை தம்மிடம் இருப்பதுபோல நடந்து கொள்வதைப் பார்க்கக்கூடியதாயுள்ளது.

அண்மையில், ஆப்கானிஸ்தானத்திலே நிலை கொண்டிருந்த  கம்யூனிஸ நாத்திகர்களை விரட்டி விடுவதில் ஆப்கானியர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தார்கள்!

எப்படிப்பட்ட யுத்தகாலக் கதைகள் நம்மத்தியில் பேசப்பட்டன!

அக்கதைகளின் நம்பகத்தன்மைபற்றி ஒரு சிறு கேள்வி கேட்டாலும் அந்தக் கேள்வியாளரைப் பாரதூரமாக விமர்சித்த ஒரு காலம் இருந்தது. கடைசியாக கம்யூனிஸவாதிகள் தோல்வி கண்டு, போர் முடிவுக்கு வந்தது.
உலகமெலாம் வாழும் முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்!

ஓர் இஸ்லாமிய கிலாபத் மலர்ந்தது! உலகம் வியந்து போகுமளவிற்கு நீதியும் மனித நேயமும் பேணும் ஒரு முன்மாதிரியான ஆட்சி அமையப்போகிறது! உலகம் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படப் போகிறது!

தப்பாகவே புரிந்துகொள்ளப் பட்டிருக்கக்கூடிய இஸ்லாம் எல்லோராலும் அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு நடைமுறைச் சாத்தியமான சாந்தி மார்க்கம் என்ற நிலை உருவாகப் போகிறது!

‘இஸ்லாமியப் பயங்கரவாதிகள்’ என்று பிரசாரம் செய்த ஊடகங்கள் தம் நிலை மாற்றி உலகம் உய்ய இஸ்லாமே தீர்வு என்று வலம் வரப் போகின்றன!

இப்படி, எத்தனையோ பெரிய எதிர்பார்ப்புக்கள்!

கடைசியில் என்ன நடந்தது? அறிஞர்கள் ஆட்சி பீடத்திற்கு ஆசை வைத்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை மறந்தார்கள். ஒன்றாக இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கத் தொடங்கினார்கள்!

அதிகார ஆசை அவர்கள் கண்களையும் உள்ளங்களையும் முத்திரையிட்டு மூடிவிட்டது!

சவூதி அரேபியாவின் மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் மக்காவில் ஹரம் ஷரீஃபின் நிழலிலே ஆப்கான் தலைவர்கள் ஒற்றுமையைப் பிரகடனப் படுத்தி ஒப்பந்தமொன்று செய்து கொண்டார்கள்.

இடைக்கால அரசாங்கத்தின் காலம் முடிந்தவுடன் ஒப்பந்தப்படி நடந்து கொண்டார்களா? எடுத்துக் காட்டப்படக்கூடாத உதாரணம்தான், இருந்தாலும் விளக்கத்துக்காக எழுதுகிறேன். – வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறியது – அதே பெரிய அறிஞர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டார்கள். ஒப்பந்தம் காற்றில் பறந்தது. மற்றுமோர் அழிவு அந்த நாட்டுக்கு!

அதிகார ஆசை அவர்கள் கண்களையும் உள்ளங்களையும் முத்திரையிட்டு மீண்டும் மூடிவிட்டது!

அவர்களைத் துரத்திவிட்டுப் பின்னர் வந்தவர்கள் என்ன செய்தார்கள்?

எதிரிகள் தெளிவாகத் தெரிகிறார்கள்; அந்த எதிரிகள் ஒழிந்திருக்கவில்லை; தம்மை அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்! பதவியாசை அவர்களை முட்டாள்களாக்கி விடுகிறது!

அறிஞர்கள்தான் முஸ்லிம்களை வழி நடத்தத் தகுதியானவர்கள் என்று சொல்லிச் சொல்லியே அறிவீனமாக நடந்து கொண்டு எதுவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல், முன்னேற்பாடும் இல்லாமல் வம்புக்கிழுத்து சர்வ நாசத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

கண்மூடித்தனமாக இவர்களின் செயல்களையெல்லாம் அறப்போர் என்று வரிந்து கட்டிக்கொண்டு ‘ஃபத்வா’ கொடுக்கப்படுகின்றமை இன்னுமுள்ளோரை அறிவீனர்களாக நடந்து கொள்ள வழிகாட்டுகிறது. கடைசியில் என்ன நடந்தது? தலையாட்டி பொம்மைகளை கதிரையிலே உட்கார வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக யுத்த அனர்த்தங்களை மட்டுமே அனுபவித்து தாங்கொணாக் கஷ்டங்களுக்காட்பட்ட மக்கள் யார் ஆண்டால் என்ன என்ற ஒரு விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டு மன நோயாளிகளாக ஆகிறார்கள்.

எதிர்கால இஸ்லாமிய சமூகம் கல்வியின்றி அவர்கள் தம் வயதில் அவர்களுக்குள்ள உரிமைகளை இழந்து உள்ளக் குமுறல்களோடு வாழ்கிறார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட அறவழிச் சமூகம் உருவாவது இவர்களின் பதவியாசையினால் தடுக்கப்படுகிறது. தலைவர்களின் பிள்ளைகள், எதிரிகள் என்று சுட்டிக்காட்டப்படும் அதே மேலை நாடுகளிலே விசேட அந்தஸ்துப் பெற்று உயர் கல்வி பெறுகிறார்கள். ஆட்சி செய்ய அடுத்த தலைமுறை தயாராக்கப்படுகிறது.

யுத்த எதிர்ப்பு ஊர்வலங்கள்

முஸ்லிம்களின் மனோ நிலையை எடுத்துக் காட்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

அண்மையில், ஈராக் நாடு அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்காளாகி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடந்த ஓர் ஆர்ப்பாட்டக் கூட்டத்திலே கலந்து கொண்டிருந்த ஒரு சிலர் அமெரிக்காவின் தேசியக் கொடியைத் தமது பாதங்களிலே கட்டி வைத்துக்கொண்டு தமது எதிர்ப்பை – உணர்வை வெளியாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆம்! அமெரிக்காதான் ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கு முழுக்காரணம். (அந்த ஆக்கிரமிப்பின் ஆரம்பமே ஈராக்கிய ஜனாதிபதி சத்தாம் ஹுஸைன் அமெரிக்காவின் உதவியோடு தனது அண்டை நாடான – சகோதர நாடான இரானுக்கெதிராக 1980ம் ஆண்டு ஆரம்பித்த அந்தப் போர்தான் என்பதை ஏனோ பலர் மறந்து விட்டார்கள்!)


 (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Thursday, November 27, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 4

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

(4)


அபூ பௌஸீமா

இனி இவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஜிஹாத்!

பிரகடனம் செய்கிறார்கள்! யுத்தம் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தற்புகழ் பாடும் தலைவர்களாகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதில் அவர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். மதுச்சாலைகள், இரவுக் களியாட்ட விடுதிகள் மீண்டும் இழந்து போன நாட்களையும் மீட்டெடுப்பதைப்போல் ஆங்காரமாக ஓலமிடுகின்றன இவர்களது ஆட்சியில்!

அண்மைக்காலச் சரித்திரத்தில் உதாரணங்கள் ஏராளம். (நடந்த நடப்புகள்தான் இப்படிப்பட்ட கருத்துக்கள் உருவாகக் காரணிகளாக அமைகின்றன. அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ்தான் அறிவான். தூய்மையான எண்ணத்துடன் செயல்பட்டவர்களை இது குறிக்காது.)

‘தற்கொலைத் தாக்குதல் ஆகும்; சாதாரண பொதுமக்கள் சாவதைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை; நமது தரப்பிலும் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்,’ என்றெல்லாம் தர்க்கங்கள்!



நமது தலைமைத்துவங்களின் நம்பகத்தன்மை

தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான அம்சமான நம்பகத்தன்மையை நாங்கள் கண்டோம். அணுகுண்டுத் தயாரிப்பில் நாடு ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பதவிக்கு வந்த ஒருவர், அடுத்த தேர்தலிலே தோல்வி கண்டு பதவியிறக்கப்பட்ட போது, தம் நாடு அவர் பதவிக்கு வருவதற்கு முன்பிருந்தே அணுகுண்டுத் தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று உலகுக்கெல்லாம் சொல்லித் திரிந்தார். எவ்வளவு பெரிய இக்கட்டான நிலைக்கு அந்த நாட்டின் புதிய அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அவர் சொல்வது பொய்யென்று நிரூபிக்கப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து உலகத்திற்கு பொய்யையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாட்டின் பாதுகாப்புக்கான விடயத்தில் பொய் சொல்வது ஆகும் என்ற கட்டம் இங்கே கடைப்பிடிக்கப்பட்டாலும் உலகம் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை.

அரசு தம் மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சிப்படிகளை எடுத்து நடைமுறைப் படுத்த முடியாத இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டது. சுய நல அரசியல் செய்யும் இப்படிப்பட்டவர்களை மக்கள் தேர்தல்களில் தூக்கியெறிந்துவிட வேண்டும்.

அது மட்டுமா? இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஆட்சித் தலைவர்கள் பேசுவதெல்லாம் தேசியம். தேசியம் என்பது இஸ்லாத்தில் இல்லாதது. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இவர்களுடைய ஆட்சியில் எங்கே அந்தச் சகோதரத்துவம்? பணமும் அதனால் வரும் சொகுசுகளும்தான் இவர்களின் வாழ்க்கையாக ஆகி விட்டிருக்கிறது.



முன்னேற்பாடும் பாதுகாப்பும்

எதிரியின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதென்பது யார் யுத்தத்திற்குத் தயாராகிறாரோ அவரின் முழுமுதற் கடமை. யாரும் இதை மறுக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ முடியாது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இக்காலக்கட்டத்தில் ஆகாயத்தில் நீந்திவந்த ஏவுகணைகளை குறிபார்த்து ஆகாயத்திலே வெடித்துச் சிதறச் செய்த பாதுகாப்பு அரணாக விளங்கிய மாற்று ஏவுகணைகளைக் கண்டோம்.

நிச்சயமாக, யார் போர்க்களத்திற்குச் செல்கிறாரோ அவர் அதற்கான முன் ஆயத்தங்களைச் செய்து கொள்வது யுத்த நியதி. யுத்தத்திற்குச் செல்லும் ஒருவர் அன்று வாள் தூக்கினால் அவரை யாரும் குறை கூற முடியாததைப்போலவே இன்று போர் விமானங்களையும், தீப்பிழம்புகளாக வெடித்துச் சிதறும் குண்டுகளையும் தன்னகத்தே கொள்வதைக் குற்றமென்று சொல்ல முடியாது.

ஒரு நாடு மற்றொரு நாட்டினால் ஆக்கிரமிக்கப்படும்போது அந்நாட்டின் தலைவன் நிச்சயமாக புத்திசாதுரியத்துடன் தனது படைகளை நடத்திச் செல்ல வேண்டும். அவன் தனது நாட்டின் தலைவனாக இருக்கும்போது அதன் பாதுகாப்பிற்குத் தேவையானவற்றை தன் நாட்டின் வசமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

“மேலும், உங்களால் இயன்றளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராக தயாரித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அன்ஃபால் 8:60)

அநியாயக்காரர்களோடு போர் செய்வதற்குத் தயாராவது பற்றி எவ்வளவு தெளிவாக அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குச் சொல்லிக் காட்டுகிறான். இந்தக் கட்டளையை நமது முஸ்லிம் நாடுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய நாடுகளின் தலைவர்கள் இன்று நடைமுறைப் படுத்துகிறார்களா? உலக அரங்கிலே நாடு நாடுகளெல்லாம் தத்தமது நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுத உற்பத்தி செய்வதற்கும் நவீன கண்டு பிடிப்புகளுக்காக ஆய்வுகள் செய்தும் தம் முப்படைகளையும் நவீனமயப்படுத்துகின்றன.

அதற்கும் மேலாகத் தமது ஊடகங்களை முடுக்கிவிட்டு உலக அரங்கிலே அவர்களுக்குச் சாதகமாக மக்கள் அபிப்பிராயத்தை ஏற்புடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கிடப்பட்ட கட்டளை மேற்கூறிய அல்குர்ஆன் வசனத்தில் தெளிவாக இருக்கிறது. ஆனால், அவ்வசனத்தினடிப்படையில் நாம் இயங்குகின்றோமா? இன்று புதுப்புது ஆயுதங்களுக்குச் சொந்தக்காரர்களாவது யார்? ஆய்வுகள் மேற்கொண்டு பரீட்சித்துப் பார்த்து அவற்றின் வெற்றி தோல்விகளைக் கணக்கிட்டு அவற்றை நுண்ணியமாக வளர்த்து குதப்படுத்தி வைத்திருப்பவர்கள்தான்.

ஏன், முஸ்லிம்கள் இந்த தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துத் தமது நாட்டின் மீது தாக்குதலுக்கு வரும் ஏவுகணைகளை, விமானங்களைச் சிதறடிக்க அனுமதிக்கப் படவில்லையா? நவீன போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கு அவர்களிடம் பொருளாதார வசதிகள் இல்லையா அல்லது அந்தத் துறையிலே துறைசார் நிபுணர்கள் இல்லையா?

வாய்ச்சவடால் பாதுகாப்பு அரணாக இருக்க முடியாது! நாட்டின் செல்வங்களை மேற்கத்திய நாடுகளில் தத்தமது தனிமனித கணக்குகளில் வைத்து தமது குடும்பம் மட்டுமே சொகுசான வாழ்க்கை வாழ வழிவகை செய்து பாமர மக்களை எதிரிகளின் குண்டு வீச்சுக்குப் பலிக்கடாய்களாக திறந்தவெளியில் விடுபவர்களைத் தலைவர்களாக ஆக்கிக் கொண்டதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

முன்னெச்சரிக்கையும் தூர நோக்கும்

போர் செய்யும் ஓர் ஆட்சித் தலைவன் தன்னுடைய பிரஜைகளின் பாதுகாப்பைப் பற்றியும் கட்டாயம் சிந்திக்க வேண்டும். ஹுதைபிய்யா உடன்படிக்கை இதற்கு ஒரு மிகப் பெரிய சான்று. அந்த உடன்படிக்கையின் பின்னணியில் உள்ள படிப்பினைகள் ஏராளம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித் தரப்பட்ட அந்த வழிமுறை இன்று முஸ்லிமல்லாதவர்களால் கூட வியந்துரைக்கப்படுவது கண்கூடு.

1973ம் ஆண்டு நடைபெற்ற எகிப்து – இஸ்ரவேல் யுத்தத்தின்போது சுற்றி வலைக்கப்பட்ட சுமார் 75,000 பேர் கொண்ட தனது படைப்பிரிவினரின் பாதுகாப்புக் கருதி இடையிலே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் அன்றைய எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாத். அன்வர் சதாத்தின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சியல்ல. ஆனால், அவர் அன்று கையாண்ட தந்திரம் உலகத்தின் வல்லரசுகள் மத்தியில் மத்திய கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதொன்று என்ற எண்ணத்தை முன்னர் எப்போதுமில்லாதவாறு தூண்டிவிட்டது.

 (இன்ஷா அல்லாஹ் தொடரும்)