அல்லாஹ்வின் பெயரால்…..
இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!
(5)
அபூ
பௌஸீமா
அதிகாரப் போட்டி, தூய எண்ணமற்ற தலைமைத்துவங்கள்
இன்று உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள்
மத்தியில் பல குழுக்கள் உருவாகியுள்ளமையைக் காண்கிறோம். அவ்வொவ்வொரு குழுவின் தலைவரும் தானே இஸ்லாத்தின்
பொறுப்புதாரி என்பதுபோல் நடந்து கொள்வதை, நடக்க முயற்சிப்பதை
அவதானிக்க முடிகிறது. தனது குழுவின்
முழுப்பொறுப்பையும் செவ்வனே செய்து கொள்ள முடியாத இவர்கள், தமது அமைப்பின் அங்கத்தவர்களிடம் சட்டத்தையும் ஒழுங்கையும்
சரியாக நிலை நிறுத்த முடியாத இவர்கள், உலக முஸ்லிம்களின் தலைமை தம்மிடம் இருப்பதுபோல நடந்து கொள்வதைப் பார்க்கக்கூடியதாயுள்ளது.
அண்மையில், ஆப்கானிஸ்தானத்திலே நிலை கொண்டிருந்த கம்யூனிஸ நாத்திகர்களை விரட்டி விடுவதில்
ஆப்கானியர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தார்கள்!
எப்படிப்பட்ட யுத்தகாலக் கதைகள்
நம்மத்தியில் பேசப்பட்டன!
அக்கதைகளின் நம்பகத்தன்மைபற்றி ஒரு சிறு
கேள்வி கேட்டாலும் அந்தக் கேள்வியாளரைப் பாரதூரமாக விமர்சித்த ஒரு காலம் இருந்தது. கடைசியாக கம்யூனிஸவாதிகள் தோல்வி கண்டு, போர் முடிவுக்கு வந்தது.
உலகமெலாம் வாழும் முஸ்லிம்கள் நிம்மதிப்
பெருமூச்சு விட்டார்கள்!
ஓர் இஸ்லாமிய கிலாபத் மலர்ந்தது! உலகம் வியந்து போகுமளவிற்கு நீதியும் மனித நேயமும் பேணும்
ஒரு முன்மாதிரியான ஆட்சி அமையப்போகிறது! உலகம் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படப் போகிறது!
தப்பாகவே புரிந்துகொள்ளப்
பட்டிருக்கக்கூடிய இஸ்லாம் எல்லோராலும் அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு நடைமுறைச்
சாத்தியமான சாந்தி மார்க்கம் என்ற நிலை உருவாகப் போகிறது!
‘இஸ்லாமியப்
பயங்கரவாதிகள்’ என்று பிரசாரம்
செய்த ஊடகங்கள் தம் நிலை மாற்றி உலகம் உய்ய இஸ்லாமே தீர்வு என்று வலம் வரப்
போகின்றன!
இப்படி, எத்தனையோ பெரிய எதிர்பார்ப்புக்கள்!
கடைசியில் என்ன நடந்தது? அறிஞர்கள் ஆட்சி பீடத்திற்கு ஆசை வைத்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை மறந்தார்கள். ஒன்றாக இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கத்
தொடங்கினார்கள்!
அதிகார ஆசை அவர்கள் கண்களையும்
உள்ளங்களையும் முத்திரையிட்டு மூடிவிட்டது!
சவூதி அரேபியாவின் மன்னர் பஹ்த் பின்
அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் மக்காவில் ஹரம் ஷரீஃபின் நிழலிலே ஆப்கான்
தலைவர்கள் ஒற்றுமையைப் பிரகடனப் படுத்தி ஒப்பந்தமொன்று செய்து கொண்டார்கள்.
இடைக்கால அரசாங்கத்தின் காலம்
முடிந்தவுடன் ஒப்பந்தப்படி நடந்து கொண்டார்களா? எடுத்துக் காட்டப்படக்கூடாத உதாரணம்தான், இருந்தாலும் விளக்கத்துக்காக எழுதுகிறேன். – வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில்
ஏறியது – அதே பெரிய அறிஞர்கள்
அதிகாரத்திற்கு ஆசைப்பட்டார்கள். ஒப்பந்தம் காற்றில்
பறந்தது. மற்றுமோர் அழிவு
அந்த நாட்டுக்கு!
அதிகார ஆசை அவர்கள் கண்களையும்
உள்ளங்களையும் முத்திரையிட்டு மீண்டும் மூடிவிட்டது!
அவர்களைத் துரத்திவிட்டுப் பின்னர் வந்தவர்கள் என்ன செய்தார்கள்?
எதிரிகள் தெளிவாகத் தெரிகிறார்கள்; அந்த எதிரிகள் ஒழிந்திருக்கவில்லை; தம்மை அடையாளம் காட்டிக் கொண்டே
இருக்கிறார்கள்! பதவியாசை அவர்களை முட்டாள்களாக்கி விடுகிறது!
அறிஞர்கள்தான் முஸ்லிம்களை வழி நடத்தத்
தகுதியானவர்கள் என்று சொல்லிச்
சொல்லியே அறிவீனமாக நடந்து கொண்டு எதுவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல், முன்னேற்பாடும் இல்லாமல் வம்புக்கிழுத்து சர்வ நாசத்தையும்
ஏற்படுத்திக் கொண்டார்கள்.
கண்மூடித்தனமாக இவர்களின்
செயல்களையெல்லாம் அறப்போர் என்று வரிந்து கட்டிக்கொண்டு ‘ஃபத்வா’ கொடுக்கப்படுகின்றமை
இன்னுமுள்ளோரை அறிவீனர்களாக நடந்து கொள்ள வழிகாட்டுகிறது. கடைசியில் என்ன நடந்தது? தலையாட்டி பொம்மைகளை கதிரையிலே உட்கார வைத்து ஆட்சி நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக யுத்த
அனர்த்தங்களை மட்டுமே அனுபவித்து தாங்கொணாக் கஷ்டங்களுக்காட்பட்ட மக்கள் யார்
ஆண்டால் என்ன என்ற ஒரு விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டு மன நோயாளிகளாக
ஆகிறார்கள்.
எதிர்கால இஸ்லாமிய சமூகம் கல்வியின்றி
அவர்கள் தம் வயதில் அவர்களுக்குள்ள உரிமைகளை இழந்து உள்ளக் குமுறல்களோடு
வாழ்கிறார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட
அறவழிச் சமூகம் உருவாவது இவர்களின்
பதவியாசையினால் தடுக்கப்படுகிறது. தலைவர்களின்
பிள்ளைகள், எதிரிகள் என்று
சுட்டிக்காட்டப்படும் அதே மேலை நாடுகளிலே விசேட அந்தஸ்துப் பெற்று உயர் கல்வி
பெறுகிறார்கள். ஆட்சி செய்ய அடுத்த
தலைமுறை தயாராக்கப்படுகிறது.
யுத்த எதிர்ப்பு ஊர்வலங்கள்
முஸ்லிம்களின் மனோ நிலையை எடுத்துக் காட்ட
ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
அண்மையில், ஈராக் நாடு அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புக்காளாகி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடந்த ஓர் ஆர்ப்பாட்டக்
கூட்டத்திலே கலந்து கொண்டிருந்த ஒரு சிலர் அமெரிக்காவின் தேசியக் கொடியைத் தமது
பாதங்களிலே கட்டி வைத்துக்கொண்டு தமது எதிர்ப்பை – உணர்வை வெளியாக்கிக்
கொண்டிருந்தார்கள். ஆம்! அமெரிக்காதான் ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கு முழுக்காரணம். (அந்த
ஆக்கிரமிப்பின் ஆரம்பமே ஈராக்கிய ஜனாதிபதி சத்தாம் ஹுஸைன் அமெரிக்காவின் உதவியோடு
தனது அண்டை நாடான – சகோதர நாடான இரானுக்கெதிராக 1980ம் ஆண்டு ஆரம்பித்த அந்தப்
போர்தான் என்பதை ஏனோ பலர் மறந்து விட்டார்கள்!)
No comments:
Post a Comment