Monday, November 24, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 1

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

(1)

அபூ பௌஸீமா

இஸ்லாம் – மனித சமூகத்திற்கு உலகம் அழிக்கப்படும் வரை அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். மறுமையின் வெற்றிக்கு வழிகாட்டி. நரகத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட அற்புதமான அருட்கொடை!

அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் எந்தக் காலத்திற்கும் எந்தச் சமூகத்திற்கும் பொருந்தக் கூடியது என்பதில் ஒரு நம்பிக்கை கொண்டவனுக்குச் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால், அவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டவை. அவன் மனிதர்களுக்கிட்ட கட்டளைகள் யாவும் சந்தேகத்திற்கு இடமின்றி சவால்களுக்கு அப்பாற்பட்டவை. அந்தக் கட்டளைகள், அதைத் தொடர்ந்து அவன் வகுத்த விதிமுறைகள், அவற்றின் மூலம் அவன் ஏற்படுத்திய ஒழுங்குமுறைகள் யாவும் அவன் இட்ட எல்லைக்குள்ளேயே அமைவன.

இந்த அடிப்படையில் இன்று நடக்கக்கூடிய யுத்தங்களும் அவற்றில் பங்குபற்றும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் எப்படியிருக்க என்பது பற்றி சிந்திக்க வேண்டிய காலத்தில் நாமெல்லாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

மனிதன் ஷைத்தானுடைய ஊசலாட்டத்திற்கு அடிமையாகி ஒருவனுக்கொருவன் எதிரியாக ஆனதிலிருந்து அவன் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டான். அவ்வாயுதங்கள் அந்தந்தக் காலத் தேவைக்கு ஏற்ப, கல்லால், மரக்குற்றிகளால், இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின் அதனால், இப்படியே வளர்ந்து ஆக்கத் தேவைக்காக ஆன அனைத்தினாலும் இன்று அழிவுக்குத் தேவையான ஆயுதங்களையும் மனிதன் உற்பத்தி செய்து அவற்றை தன் சக மனிதனை அழிப்பதற்குப் பாவிக்கத் தொடங்கி விட்டான்.

தூரத்தில் இருந்து சுட்டுத்தள்ளும் துப்பாக்கிகள், பீரங்கிகள் ஆகியவை அறிமகமானதைத் தொடர்ந்து தரைப்படை வளர்ச்சி கண்டது. அம்புகளால், அவற்றின் உதவி கொண்டு எறியப்பட்ட தீப்பந்தங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டு கப்பல்கள் கைப்பற்றப்பட்ட காலம் போய், போர்க் கப்பல்களிலிருந்தே பீரங்கிகள், யுத்த விமானங்கள் மூலம் தாக்கி கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் காலம் வந்தது.

பறக்கும் விமானம் கண்டு பிடிக்கப்பட்டதன் பின் ஆகாயம் போருக்கான ஒரு பெரும் வழியாக அமைந்து போர்க்களம் விருத்தியடைந்தது. அதன் துரித முன்னேற்றம் யுத்தாயுதத் துறையிலே ஆளில்லா விமானங்கள் தொடங்கி இன்று கணணிகள் மூலம் திட்டமிடப்பட்டு குறித்த இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் வரை வளர்ச்சியடைந்துள்ளது. பெரும் பெரும் விமாங்களில் சென்று ஆயிரக்கணக்கான குண்டுகளைத் தூவி நாடப்படுத்தும் யுத்தகாலம் இது!

வரக்கூடிய யுத்தங்களின்போது ஒளிக்கதிர் உபயோகத்துக்கு வரக் காத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான யுத்தாயுதங்களைத் தம்மகத்தே கொண்ட நாடுகள்தான் ஏனைய நாடுகளைத் தம் அடிமை நாடுகளாக தத்தமது தலை நகரங்களிலிருந்தே ஆட்சி செய்யப்போகிறார்கள்!

அந்த வளர்ச்சிப்படியில் அன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட போர்கள், அவர்களின் தோழர்கள் காலத்துப் போர்கள் யாவும் அவ்வக்காலத்திற்கு ஏற்புடையதான ஆயுதங்களினால்தான் நடந்தன,

போர் ஒழுங்குமுறைகளும் அவ்வாறே மனிதவின விருத்திக்கொப்ப ஆயுதங்களின் வளர்ச்சிப்படிகளுக்கொப்ப மாற்றமடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், மனிதம் வாழ வேண்டும்; மனித நேயம் வளப்படுத்தப்படல் வேண்டும்; ஒவ்வொரு தனிமனிதனதும் உரிமைகள் காக்கப்படல் வேண்டும் என்ற இஸ்லாமிய அடிப்படையில் காட்டுமிராண்டித் தனமான ஒழுக்கங்களுக்கு இடமில்லை.

புதுப்புது யுத்த முறைகள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் அன்றைய யுத்த முறைகளின்போது காட்டித்தந்த ஒழுங்கு முறைகள் ஏற்புடையதுதானா என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை.

முஸ்லிம்கள் என்பவர்கள் எப்படியோ  வாழ்ந்துவிட்டுப் போகிறவர்களல்ல. அவர்கள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்று மறுமையை விசுவாசிப்பவர்கள். மறுமையில் வெற்றி பெறுவதுதான் முஸ்லிம்களின் நோக்கமேயல்லாது இவ்வுலக வெற்றியல்ல. எனவே, அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்கள்; கட்டறுந்தவர்களல்ல!

1400 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதையெதை அந்த இஸ்லாமிய வழிமுறை, ஒழுக்கம் என்று சொல்லித் தந்தார்களோ அவைதான் இன்றைக்கும், ஏன உலகம் அழிக்கப்படும் நாள் வரை இஸ்லாமிய வழிமுறை, ஒழுக்கமாக இருக்கும். இதில் யார் கருத்து வேறுபடுகிறார்களோ அவர் தம்முடைய இறை நம்பிக்கையை மீட்டிப் புடம் போடட்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் அவர்களைத் தொடர்ந்த அவர்தம் தோழர்களினதும் காலத்துப் போர் முறைகள் தற்காலத்துக்கு ஏற்புடையதுதானா என்று கேள்வி எழுப்பக்கூடியவர்கள் இன்று நம்மத்தியில் இல்லாமலில்லை. எனவே, முதலில் நமக்கெல்லாம் முன்மாதிரியாக, நாமெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பதைப்பற்றிப் பார்ப்பது நமது கடமையாகிறது.

அல்லாஹ்வின் பார்வையில் தூதர் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம்.

அல்லாஹ் அவனுடைய அல்குர்ஆனிலே தெளிவாக, ஆணித்தரமாக அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி நோக்கி கூறியிருக்கின்றான்: “மேலும், (நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நான் அனுப்பவில்லை; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.” (ஸூரா ஸபா 34:28)

அவன் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதெல்லாம் அல்லாஹ்வுடைய கட்டளையல்லாது அவர்களுடைய மனோ இச்சைக்கு எந்தவிதமான வேலையுமில்லை என்பதுதான்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

குறிப்பு: இத்தொடர் 2000-2002 காலப்பகுதியில் idhuthanislam.com இணைய தளத்தில் பிரசுரமானது.

No comments:

Post a Comment