Tuesday, November 18, 2014

தற்கொலையும் இஸ்லாமிய சமூக நிலைப்பாடும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்….
தற்கொலையும் இஸ்லாமிய சமூக நிலைப்பாடும்!
-    அபூ பௌஸீமா –
தற்கொலை இன்று உலக நாடுகளிலே அனைத்து மனிதர்களிடமும் தலை தூக்கியுள்ள ஒரு பெரும்பாவமாகும். இன்று காரணங்கள் சொல்லப்பட்டு நியாயப்படுத்தப் படும் ஒரு மனிதாபிமான நோக்கோடு பார்க்கப்படும் ஒரு செயலாகவும் இது இருப்பதை அவதானிக்க முடிகிறது.

படித்தவர்கள், சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள் என்றிப்படி சமூகத்தில் குரலுள்ளவர்கள்கூட இன்று தற்கொலை செய்தவர்கள் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். தற்கொலை செய்து கொள்வதை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

துன்பங்கள், கஷ்டங்கள் வரும்போது பொறுமையிழந்து இம்முடிவுக்கு வரக்கூடியவர்கள் பட்டியலைப் பார்க்கும்போது அந்த முடிவுக்குத்தான் வர முடிகிறது.

ஆகவே, இந்த விடயம் விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்றே!
மனித நேயம் கொண்டவர்கள் இந்தப் பகுதியில் தம் கவனத்தைத் திருப்ப வேண்டும். அந்த வரிசையிலே ஊடகவியலாளர்கள் தம் பங்களிப்பைச் செவ்வனே செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து அது பற்றிய எனது கண்ணோட்டத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

இன்றைய சமூகத்தை, சமூகத்தின் மனோ நிலையைச் சிறிது அசைபோட்டுப் பார்ப்பது சமூகத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளின் ஆரம்பத்தையும் அந்த ஆரம்பத்திற்கான தேவையையும் உணர முடியும். அப்படி உண்ரும்போதுதான் அப்பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைச் சிந்திக்க முடியும்.
நல்லதொரு செயலாக இருந்தாலும் தீய செயலாக இருந்தாலும் அந்தச் செயலுக்கு உரியவர் அல்லது உரியவர்கள் ஒரு தேவைக்கு ஆட்படுவது உண்டு. தேவையின்றேல் செயலில்லை. அந்தத் தேவை ஆன்மிகமாகவும் இருக்கும், உலகாயதமாகவும் இருக்கும். அது எதுவாகவிருந்தாலும் அந்தச் செயலைச் செய்பவர் அதற்குத் தன்னுடைய அறிவுக்கு எட்டியவாறு காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பார்.
தீய செயல்களிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவனுடைய மனோ நிலையைப் பக்குவப்படுத்தி அவனை நேர்வழியில் செலுத்துவதற்காக அல்லாஹ் காலத்திற்குக் காலம் அவனுடைய தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான்.
நல்லது எது, கெட்டது எது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்து அவனுடைய சிறந்த படைப்பான மனிதனை அவன் வழி நடத்துகின்றான்.
மனிதன் தன்னைத்தானே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட குலம், கோத்திரங்களுக்கு மத்தியிலே நற்குணம் படைத்த மனிதர்களை உருவாக்கி மனிதத்துவம் பாழ்பட்டுப் போகாமல் இருக்க வழி சமைத்துள்ளான்.
அப்படி ஏற்பாடு செய்த தலைவர்கள், நல்லவர்கள், அன்பையும் பண்பையும் போதிப்பவர்கள், அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கும் இணை வைப்பதில் இருந்து மீண்டால் மட்டுமே மறுமையில் வெற்றியுண்டு என்று ஆணித்தரமாக அறிவுறுத்தியுமுள்ளான்.
இதன் வழிகாட்டலில் இனி நமது தலையங்கத்தைத் தொட்டுப் பார்ப்போம்.
இன்றைய சமூகவமைப்பில் அதன் அன்றாட நிலைப்பாட்டைச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் காணக்கூடிய ஒரு முக்கியமான அம்சம்தான் பரபரப்பு!
பரபரப்பான வாழ்க்கைதான் யாரை எடுத்துக் கொண்டாலும் அவரிடம் இருப்பது. ஆஸ்திகனாக இருந்தாலும் நாஸ்திகனாக இருந்தாலும் இந்தப் பரபரப்புத்தான் அவனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புரையோடிப்போய் இருக்கிறது. இந்த பரபரப்புத்தான் ஒரு மனிதனை தன் நிலை மறந்து செயற்படத் தூண்டுவது; சரியையும் பிழையையும் பிரித்தறியும் பகுத்தறிவை மழுங்கச் செய்வது.
சாப்பிடப் போனாலும், இறை வணக்கத்திற்குப் போனாலும், குளிக்கப் போனாலும், ஏன் சம்பாதிக்கப் போனாலும் சாவதானம் என்பது இன்று மனிதர்களிடையே மிகவும் குறைவு.
இதற்குப் பல காரணங்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. சிலதை – நான் அவதானித்த சிலதை மட்டும் – சிறிது தொட்டுச் செல்வது சிறப்பாயிருக்கும் என்றெண்ணுகிறேன்.
முதலாவது: வாழ்வில் திருப்தியில்லாமை. திருப்தியில்லாமை எப்படி ஏற்படுகிறது? என்னைப் பொறுத்தவரை சுருக்கமாகச் சொன்னால், மனிதனைப் படைத்து அவனுக்கு உணவையும் உடையையும் உறைவிடத்தையும் கொடுத்துப் போஷிக்கக்கூடிய இறைவனைப் பரிபூரணமாக நம்பாமை. தன்னைவிட தனக்கு மேலே உள்ளவனின் செல்வங்களைப் பார்த்து தனக்கும் அவ்வாறான செல்வம் வேண்டும் என்று ஏங்குவது. தன்னைவிட குறைந்த செல்வத்துடன் தனக்குக் கீழே பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கிறார்களே என்பதை பொருட்டாகக் கணக்கிலெடுக்காமை. போதுமென்ற மனப்பக்குவம் இல்லாமை.  
இரண்டாவது: வாழ்வின் நச்சரிப்புகள். நச்சரிப்புகள் என்று சொல்லும்போது தனக்குத் தேவையானவை பற்றித் திருப்திப்படக் கூடியவன் ஒருவன் தனது குடும்பத்தில் மற்றைய அங்கத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முயற்சித்தல். அடுத்தவனைப் பார்த்து அதைப் போல் அல்லது அதைவிட உயர்ந்த நிலையில் வாழ முற்படுதல். சொந்த பந்தங்களின் அசாதாரணமான வேண்டுகோள்களுக்கு முன்னால் அடிமையாதல்.
மூன்றாவது: விரக்தி நிலை. சமூக அமைப்பில் தமது சுதந்திரம் பாழ்படுத்தப்படுகிறது; அல்லது தலைமைத்தும் தனக்கு மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தில் ஏற்படக்கூடிய விரக்தி நிலை.
நான்காவது: திணிப்புகள். பத்திரிகைகளைப் புரட்டினாலும், வானொலியைத் திருப்பினாலும், தொலைக்காட்சியை நோக்கினாலும் அங்கே தேவையில்லாதவற்றை அத்தியாவசியங்களாக விளம்பரம் செய்து ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலேயும் ஆசைகளை உண்டு பண்ணி விடுவது.
ஐந்தாவது: அறிவுத் தெளிவின்மை. சமூகம் தனது ஒவ்வொரு தேவையையும் அவ்வத்தேவையைக் கவனிக்கக் கூடியதாக ஒரு குறிப்பிட்ட சிலரையே நம்பிச் செயல்படுவது. உதாரணத்திற்கு: சுகயீனம் ஏற்படுமிடத்து வைத்தியர்களிடம் மட்டுமே அதைச் சமர்ப்பித்து விடுவது. நோய் வருவதற்கு முன் அதைத் தடுத்துக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமை. மார்க்க விஷயங்களென்றால், அவற்றில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை; அவற்றைச் சொல்லக்கூடியவர்கள் அந்தந்த மார்க்க அறிஞர்கள் மட்டுமே என்ற மனப்பாங்கு. ஊருக்குப் பாதையொன்று தேவையென்றால் அது வாகனம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆறாவது: கௌரவப் பிரச்சினை. எப்படியோ வாழ்ந்து, ஒழுங்குமுறையின்றிச் சம்பாதித்து, சமூகத்தில் தனக்கென்று ஒரு தனியிடம் கிடைத்து விட்டதன் பின், தான் செய்த பிழைகள் தெரிய வரும்போது அவற்றிற்காகத் தண்டனையை ஏற்றுப் பிராயச்சித்தம் செய்வதை விடுத்து, கௌரவத்திற்கு முக்கியத்தும் கொடுத்துத் தன்னைத்தானே அழித்துக் கொள்வது.
ஆகவே, எந்த ஒரு விடயத்தையும் பொறுமையுடன் சிந்தித்து அறிவுப்பூர்வமாக அணுகி முடிவெடுக்க முடியாமை சிலரைத் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தள்ளிவிடுகிறது.
பணம் புரளப்புரள அவனது தேவைகள் அதிகரிக்கின்றன. ஷைத்தானின் ஊசலாட்டம் அவனை முழுமையாக ஆட்கொள்கிறது. வியாபார விருத்திக்காகப் பலதரப்பட்ட வியாபாரிகளோடு பழக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றான். குடி, கும்மாளம் இப்படி சமூகத்தில் உள்ள அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் அவன் ஆளாகிறான். நிம்மதி இழக்கிறான். பணம் இருந்தென்ன பயன். வீட்டில் அமைதியில்லை. தொழிலகத்தில் நிருவாகச் சீர்கேடு. கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறான். இந்தப் பாழாய்ப்போன உலகத்தை விட்டே ஓடிவிட  வேண்டும் என்று உலகைப் பிழைகண்டு தீர்மானிக்கிறான்.
தற்கொலைதான் அவனுக்குப் புலப்படும் இலகுவான வழி!
சரித்திரத்தில் எத்தனையெத்தனை நிகழ்வுகள். நாட்டுத் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், புகழ் பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசியர்கள் என்று தற்கொலைக்கு ஓர் எல்லை இல்லை என்றளவிற்கு அதன் ஆதிக்கம் சமூகத்தின் எல்லாத் தரப்பினரிடமும் விரிவடைந்துள்ளது.
அண்மையில் வெளியான ஒரு செய்தி கூறியது. தென் கொரியாவில் ஒரு பிரபல மோட்டார் வாகன உற்பத்திக் கம்பனியின் உரிமையாளர் தற்கொலை.
ஒரு மயிரை நீத்ததனால் மானம் வந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் கவரிமான் என்று கவரிமானின் மானத்தைப் பற்றிச் சிலாகித்துக் கூறும் கவிதைகளும் கதைகளும் நம்மத்தியில் உலா வந்ததையும் அவை பெருமைப் படுத்தப்பட்டு கற்பிக்கப்படுவதையும் யாரும் மறுக்க முடியாது. சின்னஞ் சிறிசுகளின், வெண்மையெல்லாம் பால் என்று நினைக்கும் அந்த வயதிலே இப்படி தற்கொலைக்கு வழிகாட்டல்கள் பாடப் புத்தகங்களில்! இது ஓர் உதாரணம் மட்டுமே!
தற்கொலை என்னும் சமூக விசனத்தை முற்றாக இல்லாமலாக்குவதற்கு இஸ்லாம் மிக உன்னதமான ஒரு வழிமுறையைக் காட்டுகிறது. தீர்வுகள் யாவும் மனித அறிவுக்கு உட்பட்டதாக மட்டுமல்ல ஆன்மீக வெற்றிக்கு அது வழிவகுக்கக் கூடியதானதே என்பதை இஸ்லாம் தெளிவாகக் காட்டியுள்ளது.
இஸ்லாம், மனிதன் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுத்து சவால்களை வென்று இவ்வுலத்தில் அவனுக்கென்று சிறப்பாகவுள்ள மனிதத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும்; பின்னால் வரும் சந்ததிகளுக்கு அம்மனிதத்துவத்தின் தாற்பரியத்தைச் சொத்தாகச் சேமித்து வைக்க வேண்டும் என்பதை, அதன் ஆரம்ப அடிப்படைப் போதனையிலேயே வலியுறுத்துகிறது.
 “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி,” வணங்குவதற்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர; முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்.
வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்தான் என்பதன் பொருள் என்ன என்று வகுத்துத் தொகுத்துப் பார்க்கும் போது அதன் உன்னதமான தத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுக்குண்டான உரிமைகள், அவற்றின் வரைமுறைகள், யாவற்றையும் சீர்தூக்கிக் காண்பிக்கிறது இஸ்லாம். ஒரு குழந்தையாக வளர்ந்த சிறுவனாக, மலர்ந்த வாலிபனாக இப்படி அவனுடைய அனைத்து வளர்ச்சிப் பருவத்திலும் அவனுக்குத் தேவையானவற்றை வழங்கி அவனுக்கு வழியும் காட்டி நல்லதெது கெட்டதெது என்று வகுத்துப் பிரித்துப் பார்க்கும் அறிவையும் கொடுத்தவன் அல்லாஹ். ஆகவே, அல்லாஹ்வே மனிதனால் வணங்கப்படுவதற்குத் தகுதி பெறுகிறான். அவன் மனிதனிடமிருந்து எந்தத் தேவையும் இல்லாதவன். இந்தச் சுருக்கமான விளக்கமே அவன் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் என்பதற்கு மிகப் பொருத்தமான பதிலாக இருக்க முடியும்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொண்டால் அவர்தான் பின்பற்றத் தகுதியானவர். அவரைப் பின்பற்றும் மனிதன் வழிகெட்டுப் போகவே மாட்டான்!
இன்று பத்திரிகைகளை விரித்தால்:
·        பசி பொறுக்காமல் தாயும் மகளும் விஷமருந்தித் தற்கொலை.
·        பரீட்சையில் தோல்வி – மாணவி தற்கொலை.
·        பகிடிவதை தாங்க முடியாமல் பல்கலைக் கழக மாணவன் தற்கொலை.
·        காதல் தோல்வி – ஜோடி கங்கையில் குதித்துத் தற்கொலை.
·        பிள்ளைகள் கவனிக்கவில்லை – 60 வயது மூதாட்டி விஷமருந்தித் தற்கொலை.
·        மகன் போலீஸாரால் கைது – மனமுடைந்த தாய் தற்கொலை.
·        மகன் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டான் – தாய் தற்கொலை.
·        தனது அரசியல் தலைவருக்கு காய்ச்சல் – அடிவருடி தீக்குளிப்பு.
எதற்கெடுத்தாலும் தற்கொலை! தன்னைத்தானே அழித்துக் கொள்வதில் உலக நாடுகளிடையே போட்டி! தற்கொலைக்கு என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் சமூகத்திலுள்ள அங்கலாய்ப்புகள்தான் மூல காரணம்.
தன்னைப் படைத்தவன் ஒருவனைப் பற்றிய அறிவு இல்லை. அப்படியே, இறைவன் இருக்கின்றான் என்று ஏற்றுக் கொண்டாலும் அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான், அவனே அனைத்தையும் இயக்கி வைப்பவன், அவனே அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், இப்படி அவனைப்பற்றி எதுவுமே தெரிந்து கொள்வதற்கு எந்த எத்தனிப்புமில்லை.
தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் எந்தவிதமான பங்களிப்பும் தனது வளர்ச்சியில் இல்லை என்ற ஒரு நிலைப்பாடு இன்றைய இளைய சமூகத்தினரிடம் இருப்பதை சமூக நலன் விரும்பிகள் உணராமலில்லை.
அந்த எண்ணத்தில் சமூக கட்டமைப்புக்கு அவ்விளைய சமூகத்தினர் ஆட்படாமை. இவையெல்லாம் இன்று சின்னச் சின்னப் பிரச்சினையாக இருந்து பெரிய அளவில் வளர்ந்து மனித நேயம் இழந்தவர்களாக வளர்கிறது இன்றைய புதிய தலைமுறை.
மனிதத்துவம் என்பது பூதக்கண்ணாடி போட்டுத் தேடும் ஒரு சடப்பொருள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மனோ நிலை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன்னிருந்த மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைப்படுத்தியபோது (பொறுமையிழந்த) அவர் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்து போனார். உங்கள் இறைவன்: “(என்னுடைய அடியான் அவசரப்பட்டுத் தனது சாவுக்கு அவனே காரணமாகி விட்டதால்) அவன் மீது நான் சுவர்க்கத்தைத் தடை செய்து விட்டேன்,” என்று கூறினான்.” ( நூல்: புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: தாபித் பின் அள்ளஹ்ஹாக் ரளியல்லாஹு அன்ஹு)
தனது மரணத்திற்கு தானே காரணமாக ஆகிவிடும் மனிதனுடைய நிலையை மேற்கூறிய ஹதீஸ் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இந்த உலகத்தில் கஷ்டங்கள், சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத் தன்னைத்தானே அழித்துக் கொள்பவன் நிரந்தரமான மறுவுலக வாழ்வையே பெரும் பரிதாபத்துக்குரியதாக ஆக்கிக் கொள்கிறான்.
பொறுமையின் மகத்துவத்தைப் பற்றி இவன் விளங்கிக் கொள்ளாததும் அதைப்பற்றி அல்லாஹ் சொல்லக் கூடியவற்றை அறியாததுமே இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.
அல்லாஹ் தெளிவுபடுத்தி வாக்குறுதியளிப்பதைப் பாருங்கள்: “(துன்பங்களைச் சகித்துப்) பொறுத்துக் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்தும் வருகின்றார்களே அத்தகையோருக்கு மன்னிப்பும், மாபெரும் (நற்)கூலியும் உண்டு.” (ஸூரா ஹூத் 11:11)
இதைவிட வேறென்ன தெளிவு வேண்டும்? தற்கொலை செய்பவர்கள் எந்தக் காரணத்தைக் காட்டினாலும் அந்த விடயத்தில் அவர் பொறுமையிழந்து விடுவதுதானே அவருடைய முடிவுக்குக் காரணம்.
மற்றுமொரு நீண்ட சம்பவம் இங்கு சிந்தனைக்குற்படுத்த மிகவும் தகுதியானது: “கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலையி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் தோழர்களிடம்தான் ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றிச் சொன்னார்கள். “இந்த மனிதன் (நரக) நெருப்பிற்கான மனிதர்களில் நின்றுமுள்ளவன்.” போர் தொடங்கியபோது அம்மனிதன் வீராவேசமாகப் போரிட்டு பல காயங்களுக்காளாகி முடமாகிப் போனார். அதைக் கண்ட ஒரு தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார். “அல்லாஹ்வின் தூதரே! (நரக) நெருப்புக்குச் சொந்தமானவர்களினின்றும் உள்ளவர் என்று நீங்கள் சொன்ன மனிதரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அல்லாஹ்வின் பாதையில் அவர் மிக வீரமாகப் போரிட்டார்; பல காயங்களுக்காளானார்.” அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “ஆயினும், அவர் நிச்சயமாக (நரக) நெருப்புக்குரியவர்களில் ஒருவர்தான்.” முஸ்லிம்களில் சிலர் இந்தக் கூற்றைப் பற்றிச் சந்தேகிக்க முற்பட்டபோது, அந்த மனிதன் காயங்களினால் ஏற்பட்ட கடுமையான வலி பொறுக்க முடியாமல் அவருடைய அம்பாரியில் இருந்து ஓர் அம்பை எடுத்து தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று சொன்னார்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய அறிவிப்பை உண்மைப் படுத்தி விட்டான். இன்னார் தற்கொலை செய்து கொண்டார்.” அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “பிலாலே! எழுந்து பகிரங்கமாக அறிவித்து விடும்: எவரும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது, நம்பிக்கை கொண்டவரைத் தவிர, மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்துக்கு (இஸ்லாம்) துன்மார்க்கமான மனிதனைக் கொண்டும் உதவி செய்யக் கூடும்.” (நூல் புகாரி – அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
அல்லாஹ் அல்குர்ஆனிலே தெளிவாகக் கூறுகிறான்: “(விசுவாசங்கொண்டோரே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) யுத்தம் செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் பரிசோதித்து அறியாமலும், இன்னும் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார், என்பதை அவன் அறியாமலும் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?” (ஸூரா ஆலஇம்ரான் 3:142)
இந்த ஹதீஸின் தாற்பரியத்தையும் அல்லாஹ்வின் கூற்றின் தன்மையையும் சிந்திக்கும்போது, நமக்கெல்லாம் உள்ள ஒரு மிகப் பெரிய பாடம் அங்கே விரிகிறது. அல்லாஹ்வின் பாதையில் போரிடக்கூடிய ஒரு மனிதனின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது, உன்னதமானது என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு மகத்தான பணியில் ஈடுபட்ட ஒரு மனிதன் அந்தப் போரில் பெற்ற காயங்களின் காரணமாக ஏற்படக் கூடிய வலி தாங்க முடியாமல் பொறுமை இழந்து விட்டார். அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்களின் விழுப்புண்களுக்காக அவன் கொடுக்கும் பாக்கியங்களைப் பற்றிய எண்ணத்தைவிட உடலிலே ஏற்பட்ட வலியைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம், அல்லாஹ்வின் மீது எல்லாவற்றையும் சாட்டிவிடும் மனப்பக்குவம் அவரிடம் இல்லாமல் போயிற்று. அந்தக் கடைசிச் சந்தர்ப்பத்திலே அவர் ஷைத்தானின் ஊசலாட்டத்தில் தளர்ந்து விட்டார். வழிகேட்டிலாகி விட்டார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இரண்டு ஹதீஸ்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சும் மனிதர்களுக்குப் போதுமானது: “யார் தனது மூச்சைத் திணரடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்தில் திரும்பத்திரும்ப அதையே அநுபவிப்பார், யார் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்தில் திரும்பத்திரும்ப அதையே அநுபவிப்பார்.” (நூல் : புகாரி)
தற்கொலை செய்து கொள்பவர்களின் நிலையை உணர்த்த எத்தனையோ ஹதீஸ்களை எடுத்துக் காட்டலாம்; எனினும்,
சிந்திப்போருக்கு இதுவே போதுமானது. சந்தேகத்திற்கிடமின்றி சிந்திக்கக் கூடியவர்கள் தற்கொலையின் நிலைப்பாட்டை உணரத் தவறக் கூடாது. அப்படி அதன் பாரதூரமான விளைவுகளை உணரத் தவறுவதனால் சமூகத்திலே மிகவும் இழிவான நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதற்கு அது ஏதுவாகிறது.
எம்மைப் படைத்து, போஷித்து, இரட்சிக்கக்கூடிய அல்லாஹ்வின் கட்டளையைப் பாருங்கள்: “அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.” (ஸூரா அல்அன்ஃபால் 8:46)
எவ்வளவு தெளிவான ஒரு பாடத்தை அல்லாஹ் இங்கு சுட்டிக் காட்டுகிறான்! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி பொறுமைசாலிகளுடன் அல்லாஹ் இருக்கிறான் எனற ஒரு உத்தரவாதத்தையும் தருகிறான்.
வெறும் பொறுமைசாலிகளாக மட்டும் இருந்து விட்டால் போதாது அதுவும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவன் எடுத்து வைக்கிறான்.
அந்த நிபந்தனைகளை ஏற்று அப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்பவன் மட்டுமே கோழையாகாமல் நேர்மையின் பால் நின்று பலம் பொருந்தியவனாக இருக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறான்.
கற்றவர்கள், அறிஞர்கள் சொல்லக்கூடிய தீர்ப்புக்களை வைத்துத் தான் இன்று அதிகமான மக்கள் தத்தம் ஆன்மீக வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தத்தம் பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவர்கள் மிகச் சிலரே!
ஏற்கனவே குறிப்பிட்டது போல, எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுமையுடன் தமது பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அவற்றை அல்லாஹ்வின் உதவியுடன் தீர்த்துக் கொள்ள எத்தனிப்பவர்கள்தான் வெற்றியாளர்கள் வரிசையிலே சேர முடியும். அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இரட்சகனிடத்தில்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அதுவோ உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி, (ஏனையோருக்கு) மிகப்பாரதூரமானதாகும். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனை நிச்சயமாகத் தாங்கள் சந்திக்கக் கூடியவர்களென்றும், அவன்பாலே நிச்சயமாகத் தாங்கள் திரும்பிச் செல்லக் கூடியவர்களென்றும் உறுதியாக நம்புகின்றனர். (ஸூரா அல்பகரா 2:45-46)
இன்று சமூகத்திலே மக்களின் பொறுமையின்மையை தமக்குச் சார்பாக வைத்துக் கொண்டு மூடக்கொள்கைகளை அல்லாஹ்வின் மீது எவ்வித அச்சமுமின்றி புகுத்திக் கொண்டிருக்கும் படித்தவர்களைப் பார்க்கிறோம். இவர்களின் ஒரே நோக்கம் பணம் பண்ணுவதுதான். அந்தத் தொழிலை நடத்துவதற்காக அவர்கள் கஷ்டங்களுக்கு ஆளானோர்களைப் பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றையும் ஜின், கண்ணேறு முதலானவற்றையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இணை வைப்போடு சம்பந்தப்பட்ட ‘வைத்தியங்கள்’ செய்வதன் மூலம் அல்லாஹ்வின் சக்தியில் சந்தேகத்தை மனிதர்கள் மத்தியிலே விதைத்துவிடும் இந்தப் படித்த ஆலிம்களின் கைங்கரியத்தால் நடக்கும் விபரீதங்கள் இவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
இந்த மஞ்சல் நூலுக்கும், கருப்புக் கயிற்றிற்கும், பித்தளைத் தகட்டிற்கும், செம்புப் பேழைக்கும் முடியாமல் போனதன் பின்னால் அந்த வைத்தியத்தை நம்பியவர்கள் துன்பத்தில் பொறுமையிழந்து தற்கொலைக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனிலே மற்றுமோர் இடத்திலே சொல்கின்றான்: “ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்,” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.” (ஸூரா அல்பகரா 2:155-157)
பொறுமைசாலிகளுக்கு அல்லாஹ் கொடுக்கவிருக்கும் மகத்தான நற்பரிசுகளைப் பற்றி இதைவிட வேறென்ன உத்தரவாதத்தை இறை விசுவாசிகள் எதிர்பார்க்கிறார்கள்?
இந்தத் தற்கொலை நாகரிகம் எமது சமூகத்திலேயும் பரவிக் கொண்டு வருவதுதான் கவலைக்குரியதாகும். இஸ்லாமிய அறிவுத் தெளிவின்மை இதற்கொரு காரணமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
அல்லாஹ்வின் அருட்கொடையாக எங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய அல்குர்ஆனை விளக்கத்துடன் படித்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் அங்கே தீர்வு இருப்பதைக் காணலாம்.
இந்த உலகப் பிரச்சினைகளுக்காக ஓர் இறை நம்பிக்கையாளன் தன் மறுமை வாழ்வைக் காவு கொடுத்து விடக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.” (ஸூரா அந்நிஸா 4:29)
ஜும்ஆவுடைய தினத்திலே நடக்கக் கூடிய வாராந்தப் பிரசங்கங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதில் பெரும்பாலானவர்கள் முரண்பட மாட்டார்கள்.
மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் கட்டளையும் அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையும் தெளிவு படுத்தப் படுவதற்குப் பதிலாக யார் யாரோ மார்க்கத்தில் புகுத்திய புதியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் அதிகமானோர் இன்று கண்மூடிப் பின்பற்றுவோராய் ஆகி விட்ட அவலத்தைப் பார்க்கிறோம்.
இந்த நிலை மாறுபட வேண்டுமானால் முஸ்லிம்கள் மத்தியிலே உண்மையை அறிய வேண்டும், அறிந்த பின் அதன்படி வாழ வேண்டும் என்ற திடசங்கற்பம் வேண்டும்.
அதற்கு அல்லாஹ் சிலாகித்துச் சொல்லியிருக்கக் கூடிய பொறுமை நம்மிடையே துளிர் விட்டு வளர வேண்டும். அப்படி அந்தப் பொறுமை நம்மிடத்திலே வருவதற்கு அல்லாஹ் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கக்கூடிய பிரார்த்தனையையும் கட்டாயம் எமது வாழ்க்கையிலே கொண்டு வர வேண்டும்.
“மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் எதிர்க்க (நேருக்கு நேர் முன்னேறி) வெளிப்பட்ட பொழுது, “எங்கள் இரட்சகனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! மேலும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! அன்றியும், நிராகரித்துக் கொண்டிருக்கிற இக்கூட்டத்தினர் மீது (நாங்கள் வெற்றிபெற) எங்களுக்கு நீ உதவியும் புரிவாயாக!” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்கள்.” (ஸூரா அல்பகரா 2:250)
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!

குறிப்பு: இவ்வாக்கம் 2000 – 2002 காலப்பகுதியில் idhuthanislam.com என்ற இணையதளத்தில் பிரசுரமானது.

No comments:

Post a Comment