ஏகத்துவத்திற்கு(தவ்ஹீத்)த் திரும்புவோம்!
-
அபூ பௌஸீமா –
“லா இலாஹ இல்லல்லாஹு” – வணக்கத்திற்குத் தகுதியானவன் யாருமில்லை, அல்லாஹுவைத் தவிர.
சர்வ வல்லமையுமுள்ளவன் – அனைத்தையும்
படைத்தவன் – போஷிப்பவன்
– இரட்சிப்பவன். மனிதன்
படைக்கப்பட்ட நாள் முதல் அவனுக்கு அல்லாஹ் கற்றுத்தந்த, கட்டளையிட்ட
கோடுபாடுதான்,
“லா இலாஹ இல்லல்லாஹு”
என்ற வசனத்திற்குள் அடங்கியுள்ள பரிபூரணமான வாழ்க்கைத் திட்டமாகும்.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், மனிதனுக்கு
அனைத்தையும் கற்பித்து அவற்றைப் பிரித்தறிவும் பகுத்தறிவை அளித்தவன். பாலைத்
தண்ணீரிலிருந்து வேறாக்கிப் பிரித்தருந்தும் பகுத்தறிவைக் கொடுத்தான். ஊர்ந்து செல்லும்
ஒவ்வொரு எறும்பின் ஒவ்வொரு காலடியோசையையும் தெளிவாகக் கேட்கிறவன் அவன். கல்லுக்குள்
இருக்கும் தேரைக்கும் நேரத்திற்கு உணவளிப்பவன். ஒரே நேரத்தில்
அனைத்துப் படைப்பினங்களினதும் செயற்பாடுகளை வகுத்துச் செய்விப்பவன். அவன் அறியாமல் ஒரு
காய்ந்த இலை கூட வீழ்வதில்லை.
“லா இலாஹ
இல்லல்லாஹு” என்ற
கொள்கையின் மூலம் நெறிப்படுத்தப்படும் ஏகத்துவம் (தவ்ஹீத்) மனிதன்
படைக்கப்பட்ட நாளிலிருந்து வரும் கோட்பாடாகும். அதன் மூலம்
நியாயத் தீர்ப்பு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு ஆணித்தரமாக அறிவுறுத்தப்படுவது
என்னவென்றால், அல்லாஹுவைத்
தவிர எந்த சக்தியுமில்லை;
அவகுக்கு யாரும் எதுவும் துணையுமில்லை; அவனைப்போல்
எதுவுமில்லை; அவனைத்தவிர
யாருக்கும் படைத்து,
போஷித்து இரட்சிக்கும் ஆற்றல் யாருக்குமில்லை; படைப்புக்களை
ஆட்சி செய்யும் உரிமை,
சட்டமியற்றும் அதிகாரம் அவனைத்தவிர வேறு யாருக்குமே இல்லை; அவனுடைய
அதிகாரத்தில் யாருக்கும் பங்கில்லை, உரிமையில்லை எனபதுதான்!
மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதனைப் படைத்து
அவனுக்கு அறிவையும் கொடுத்து சுதந்திரமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்
உரிமையையும் அல்லாஹ் அளித்தான்.
மேலும்,
அவன் வழி கெட்டுவிடாமல் அவ்வப்போது அவனது தூதர்களை மனிதர்களிலிருந்தே தேர்ந்து
நேர்வழியை அல்லாஹ்வே இறக்கி வைத்தான். அல்லாஹ் அவனைப்பற்றித் தெளிவாக கூறுகிறான்: “(நபியே!) நீர் கூறுவீராக! அவன், அல்லாஹ் ஒருவனே!- அல்லாஹ் (யாவற்றை
விட்டும்) தேவையற்றவன்! (யாவும்
அவன் அருளை எதிர்பார்க்கின்றன)- அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.” (அல்குர்ஆன் ஸூரா
அல்இஹ்லாஸ் 112:
1-4)
“தவ்ஹீத்” – ஏகத்துவத்தின் தாற்பரியத்தை
மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இச்சிறு அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குகின்றான். ஆகவே, இவற்றிலிருந்து
மனிதனுக்கு என்ன அறிவுறுத்தப் படுகிறதென்றால், மனிதன் அவனுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளைத் தெளிந்து உணர்ந்து வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹுவைத்
தவிர வேறு யாரும் இல்லை என்பதுதான்.
நாளடைவில்,
“இபாதா” – வணங்குதல்
என்பது சில சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மட்டும் பொதுவானதாக
ஆக்கப்பட்டுவிட்டதைக் காண முடிகிறது. வணங்குதலென்பது அல்லாஹுவின் தத்துவத்தை உணர்ந்து அதை
உறுதிப்படுத்தும் தெளிவான எண்ணங்களோடுள்ள செயற்பாடுகளே! வணக்க
வழிபாடுகளென்பது ஒரு மனிதனின் உள்ளத்தை ஆட்கொண்டு அவனது வாழ்க்கையை ஆட்சி
செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால் மட்டுமே,
“லா இலாஹ இல்லல்லாஹு”
என்பதின் தாற்பரியம் வாய்ச்சவடாலுக்கு மட்டும் இருந்து விடாமல் அல்லாஹுவை
வணங்குவதாக அமையும்.
“(நபியே!)
தன்னுடைய (மனோ)
இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக
எடுத்துக் கொண்டானே அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி
கெடுவதற்குரியவன் என்ற தன்) அறிவினால் அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான்; அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டு
விட்டான்; அன்றியும் அவனுடைய பார்வையின் மீதும் ஒரு
திரையை ஆக்கிவிட்டான்; அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி
காட்டுவது யார்? நீங்கள் நினைவு கூ(ர்ந்து உண)ர
மாட்டீர்களா?” (அல்குர்
ஆன் ஸூரா அல்ஜாஸியா 45:23)
அரசியல் சித்தாந்தங்கள், தேசியத்
தலைமைத்துவங்கள்,
பழக்க வழக்கங்கள்,
செல்வம், அலங்காரம்
மற்றும் உலகாயத இன்பங்கள் போன்ற பொய்மைகளை முன்னெடுத்துச் செல்பவரகள் தொழுகையில்
தலை குனிந்துவிட்டால் அல்லாஹுவை மட்டுமே வணங்குவதாக எண்ணிக் கொள்கிறார்கள்!
ஆனால்,
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பிழையான எண்ணத்தைத்
தெளிவுபடுத்திச் சீர்படுத்தினார்கள்.
ஒரு முறை, அதீ
இப்னு ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் குர் ஆனில் ஒரு வசனத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது
வந்தார்கள்:
“(இவ்வாறே) அவர்கள்
அல்லாஹுவையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள்
சந்நியாசிகளையும் மர்யமுடைய குமார்ர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக்
கொண்டனர். இன்னும், ஒரே
இர்டசகனையே வணங்க வேண்டும் என்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை.” (அல்குர் ஆன் ஸூரா அத்தவ்பா 9:31)
அதீ இபனு ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு (இஸ்லாத்தை ஏற்றுகொள்வதற்கு முன் கிறிஸ்தவராக இருந்தவர்) விழித்தார்கள்! “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள்
அவர்களை வணங்கவில்லையே!” அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் பதிலளித்தார்கள், “(அல்லாஹ்) தடுத்தவற்றை
ஆகும் என்றும் (அல்லாஹ்) தடுக்காதவற்றை
கூடாதென்றும் அவர்கள் அவர்களுக்குச் சொல்லவில்லையா? அப்படிச்
சொன்ன போது அவர்கள் அவற்றைப் பின்பற்றவில்லையா?” அதீ
அதை,
“ஆம்” என்று ஏற்றுகொண்ட போது அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “அதுதான்
அவர்கள் அவரகளை வணங்குதல் என்பது!” (நூற்கள்: அஹ்மத், திர்மிதி)
இவ்வாறு, வணங்குதல் என்பது கீழ்ப்படிதல், தன்னைச் சமர்ப்பித்தல் என்று கொள்ளலாம். இதை அல்லாஹ் திரும்பத் திரும்ப குர்ஆனில் சொல்லிக் காட்டுவதை அவதானிக்கலாம்:
“(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்
கீழ்ப்படிந்து நடவுங்கள்.”
(ஸூரா ஆலஇம்ரான் 3:32,
132; அந்நிஸா 4:59;
அல்அன்ஃபால் 8:1,
64; அந்நூர்
24:54; முஹம்மத் 47:33;
அல்முஜாதிலா 58:13;
அத்தஃகாபுன் 64:12)
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதென்பது
அவனது கட்டளைகளை ஏற்று நடப்பதாகும். தூதருக்குக் கீழ்ப்படிவதென்பது அவரை வணங்குவதல்ல, மாறாக அவர்
காட்டித்தந்த வழிமுறைகளின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும்.
“ஆட்சி
செலுத்தும் (சட்டமியற்றும்) அதிகாரம்
அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்) இல்லை, அவனைத்தவிர (மற்றெவரையும்) நீங்கள்
வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான். இதுதான்
நிலையான மார்க்கமாகும், எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்க|ள்.” (அல்குர்
ஆன் ஸூரா யூஸுஃப் 12:40)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு முன்னும் பின்னும் இரண்டு விதமான இணை வைத்தல்கள் இருந்தன-இருக்கின்றன.
முதலாவது, அல்லாஹுவின்
ஏகத்துவத்தில் நம்பிக்கையுண்டு என்று சொல்லிக் கொண்டு மற்றவரிடம் பிரார்த்தித்தல். அல்லாஹ்
கூறுகிறான்: “அவனைத்தவிர மற்றெவரையும் நீங்கள் வணங்கக்
கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்.” (ஸூரா யுஸுஃப் 12:40)
இரண்டாவது,
அல்லாஹ் ஆக்கித்தந்த சட்டதிட்டங்களை விடவும் மனிதன் ஏற்படுத்திய
சட்டதிட்டங்களை மேன்மைப்படுத்திச் சுயவிருப்பத்துடன் அடிபணிதல். “(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்டுள்ள (வேதங்கள்
யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாக எண்ணிக் கொண்டிருப்போர்பால் நீர்
பார்க்கவில்லையா? அவர்கள் தாகூத்தை (ஷைத்தானை) தீர்ப்புக் கூறுபவனாக் ஆக்க நாடுகிறார்கள். (ஆனால்) அவர்களோ அவனை நிராகரித்துவிட வேண்டுமெனத் திட்டமாக்க் கட்டளை
இடப்பட்டுள்ளார்கள்.” (ஸூரா அந்நிஸா
4:60)
வணங்குவதற்குள்ள பொய்யான பொருட்கள் மற்றும் ஆட்சி
செய்வதற்குள்ள புனித உரிமை உண்டென்று கூறும் முரண்பட்டோர்-வழிகேட்டிலானோரே
தாகூத்தை நாடுபவர்கள் என்பதை உதாரணமாகக் காட்டலாம்.
“தவ்ஹீத்” – ஏகத்துவம், கவலைக்கிடமான
முறையில் முஸ்லிம்கள் மத்தியில் அதன் யதார்த்தத்தை இழந்து வருகிறது, எதனாலென்றால்:
1.
இஸ்லாத்திற்கு வெளியேயுள்ள தத்துவங்களை ஏற்றுக்கொள்வதன்
மூலம்.
2.
அங்குள்ள வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம்.
3.
அரசியல் அடக்கு முறைகள் மூலம்.
4.
மார்க்கத்தில் நல்லமல்கள் என்ற பெயரில் குர்ஆன், ஸுன்னாவில்
இல்லாத புதியனவற்றைப் புகுத்தி அவற்றைக் குதர்க்கம் பேசி நியாயப்படுத்துவதன் மூலம்.
5.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவில்
கூட்டுதல்,
குறைத்தல் செய்வதன் மூலம்.
6.
வழிவழியாக வந்த செயல்களை நல்லமல்கள் என்று வகுத்து
அவற்றிற்கு மார்க்க அந்தஸ்து கொடுப்பதன் மூலம்.
7.
அல்லாஹ்வின் தூதர் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
போதனையைப் புறந்தள்ளி இமாம்கள், பெரியார்கள் என்று அறிஞர்களின் வாக்குகளை முற்படுத்துவதன்
மூலம்.
8.
இதுகாலவரை தமது பகுதியில் நடைமுறையில் இல்லையென்பதற்காக
ஸுன்னாவை மறுப்பதன் மூலம்.
இன்னும்,
இன்னும், இன்னும்
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அல்லாஹ் எச்சரிக்கின்றான்: “உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றிப் பாதுகாவலர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்.” (ஸூரா அல்அஃராஃப் 7:3)
“மேலும் இப்புவியில் இருப்போரில்
பெரும்பாலோருக்கு நீர் கிழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய
பாதையில் இருந்து வழிகெடுத்து விடுவார்கள்.” (ஸூரா அல்அன்ஆம் 6:116)
“மேலும், நிச்சயமாகப்
பெரும்பாலோர் அறிவின்றியே தங்கள் மனோ இச்சையின்படியெல்லாம் (மக்களை) உறுதியாகவே வழிகெடுத்து விடுகிறார்கள்.” (ஸூரா அல்அன்ஆம் 6:119)
“மேலும், எவனுடைய
இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் மறக்கச் செய்து அவன் தன் மனோ இச்சையைப்
பின்பற்றி விட்டானோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர், அவனுடைய
காரியமும் எல்லை கடந்ததாகிவிட்டது.” (ஸூரா அல்கஹ்ஃப் 18:28)
முஸ்லிம்கள் அல்லாஹுவை உண்மையாக வணங்கி, எந்தவிதமான இணை
வைத்தலையும் தயவு தாட்சன்யமின்றி தன்னிலிருந்து அகற்றி – “தவ்ஹீத்”- ஏகத்துவத்தைப்
பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏகத்துவத்திற்கு(தவ்ஹீத்)த் திரும்ப
முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ், எந்த சமுதாயத்திற்கு உரியதையும் அவர்கள்
தங்களுக்குரிய (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல், அவனுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் போன்ற நிலைகளான)தை
மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக, அல்லாஹ்வும் (அவர்களுக்கு புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை.” (ஸூரா அர்ரஃது 13:11)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: “நம்பிக்கையோடு ஒருவர் சொல்வாரேயானால், குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதப் புத்தகம், அதில்
எது ஆகும் (ஹலால்) என்று
சொல்லப்பட்டுள்ளதோ அதை நாம் ஆகுமானதாக் (ஹலாலானதாக) எடுப்போம்; அதில் எது தடுக்கப்பட்டது (ஹராம்) என்று சொல்லப்பட்டுள்ளதோ அதை நாம்
தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) ஏற்போம். ஆனால், யாராவது என்னிலிருந்து ஒரு ஹதீஸை அறிவித்து
அதில் அவர் பொய்யைக் கலந்தாரோ அப்படிப்பட்டவர் அல்லாஹுவின் மீதும் அவனுடைய தூதர்
மீதும் பொய்யுரைத்து விட்டார்.” (நூற்கள்: அபூ தாவூத், அஹ்மத்)
பெரும்பான்மையின் விருப்பத்திற்கு அடிபணிந்து அல்லது
வழிவழியாக நடந்து வரும் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அர்ப்பணித்து அல்லது மனோ
இச்சைப்படி நடந்து “தவ்ஹீத்” – ஏகத்துவத்தின்பால்
திரும்ப முடியாது!
“தவ்ஹீத்” – ஏகத்துவத்தின்பால்
திரும்புவதற்கான தீர்வு ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹுவின் கட்டளைக்கும் அவனுடைய
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் மட்டுமே தன்னைச்
சமர்ப்பிப்பதன் மூலமே சாத்தியமாகும்.
ஆகவே,
ஏகத்துவத்தின்பாலிருந்து தவறிப் போவதிலிருந்து அல்லாஹுவை அஞ்சிக் கொள்வோம். ஏகத்துவம் – தவ்ஹீத் – சிறப்பு வாய்ந்தது. மனிதர்களும்
ஜின்களும் படைக்கப்பட்டதன் நோக்கம் தவ்ஹீதுக்குத்தான். அது சுவர்க்கம்
செல்வதற்குரிய காரணங்களில் மிக முக்கியமான முதன்மையானதாகும். நரகத்திலிருந்து
விடுதலை பெறுவதற்கும் அதுவே மிக முக்கியமான முதன்மையான காரணமாகும்.
அல்லாஹ் எங்களை தவ்ஹீதில் உறுதியாகவே இருக்க அருள்
புரிவானாக!
குறிப்பு: இது 2000ம் ஆண்டில் என்னால் அச்சிட்டு அக்குறணையில் விநியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம். பின்னர் "idhuthanislam.com" என்ற இணையதளத்திலும் பிரசுரமானது.
No comments:
Post a Comment