அல்லாஹ்வின்
திருப்பெயரால்….
கை தட்டி ஆரவாரித்தல்! யாருடைய நடைமுறை?
-
அபூ பௌஸீமா -
கை தட்டி ஆரவாரித்தல் என்பது இன்று உலகளாவிய ரீதியில்
அனைத்து மனித சமூகங்களுக்கிடையிலும் ஒரு பழக்கப்பட்ட வழக்கமான செயலாக இருப்பதை
அவதானிக்காதவர்கள் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்லப்போகுமிடத்து நாமும்கூட சில சமயங்களில்
நம்மையறியாமலேயே இந்தச் செயலைச் செய்கின்றோம்.
இன்று மேடைகளில் உரையாற்றுபவர்கள், விளையாட்டு
வீரர்கள், கலைஞர்கள்
என்று சமூகத்தில் எந்தவொரு கோணத்தைப் பார்த்தாலும் அவர்கள் தம் வெற்றிக்காக, சாதனைக்காக மற்றவர்கள்
கை தட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
ஆசிரியர்கள் தமது மாணவர்கள் மத்தியில் நடக்கும் போட்டிகளில்
வெற்றி பெற்றவர்களை உற்சாகப் படுத்துவதற்காக மற்ற மாணவர்களைக் கைதட்டும்படி
கேட்டுக் கொள்கிறார்கள்.
இந்த வழிகாட்டலால், சின்னஞ்சிறுசுகள்
பள்ளிக் கூடங்களிலே பெற்ற பரிசுகளுக்காகக்
கைதட்டலை எதிர்பார்க்கின்றார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எந்தவொரு சிறிய விடயமானாலும்
அந்த விடயம் சம்பந்தமாக அழகிய முன்மாதிரி இல்லாமலில்லை!
என்னடா இது? கைதட்டுதலுக்கும் முன்மாதிரியுண்டா என்று கேட்கும் மனித
மனங்கள், இவையெல்லாம்
சின்னச் சின்ன விடயங்கள்தானே!
சிலருக்கு வேறு வேலையே இல்லை!
கண்டதையும் கடியதையும்பற்றி எழுதித் தள்ளுகிறார்கள்! இவற்றையெல்லாம்
நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.
ஐயோ! காலமே! இனாமாகக் கிடைத்த
வலைதளங்கள்! இவ்வாறான
எண்ணங்களில் வாசகர்கள் திளைப்பதுண்டு!
நன்மைகளை ஏவுவதும், தீமைகளைத்
தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதால் ஒவ்வொருவரும் தனக்கு இயன்ற வழியில், முடிந்த அளவில்
அவற்றைச் செய்துதான் ஆக வேண்டும்.
அதுதான் நம்மைப் படைத்துப் போஷித்து இரட்சிக்கும் அல்லாஹ்வுக்கு நாம் செய்யும்
நன்றிக்கடன்.
சின்னச் சின்ன விடயங்கள் என்று ஒழுங்கீனங்களை இஸ்லாம்
அனுமதிப்பதில்லை.
ஆகவே, சிலர்
சொல்வதுபோல இஸ்லாத்தில் சின்னச் சின்ன விடயங்கள் என்றொன்றில்லை.
அல்லாஹ் தன் திருமறை குர்ஆனிலே இந்தச் செயலைக்
குறிப்பிட்டுக் காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்: “மேலும், (அல்லாஹ்வின்)
இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை
தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக)
இருக்கவில்லை; ‘ஆகவே, நீங்கள்
நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்) வேதனையைச் சுவையுங்கள்,’ (என்று மறுமையில் கூறப்படும்).”
(ஸூரா அல்அன்ஃபால் 8:35)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை அறிவித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை
நிராகரிப்பாளர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்திகளை
மக்கள் தெளிவாக அறிந்து கொள்வதைத் தடுக்கும் நோக்குடன் சீட்டியடிப்பதையும் கை
தட்டுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
சீட்டியடித்துக் கை தட்டுவதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமானப் படுத்துவதையே முதல் நோக்கமாகக்
கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையும் அவனுடைய மார்க்கமும் மக்களுக்குப்
போய்ச் சேர்வதைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வதற்கு
அன்று அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.
அன்று கஃபாவில் கூடி இப்படிப்பட்ட இழிசெயல்களைச் செய்த நிராகரிப்பாளரைப்
பார்த்துத்தான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியுள்ளான். இந்த வசனத்தின்
எச்சரிக்கை அன்றைய குரைஷி நிராகரிப்பாளருக்கானது என்று வாதிடுபவர்களும்
நம்மத்தியில் இல்லாமலில்லை!
இந்த எச்சரிக்கை அதன் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு விடுக்கப்பட்டது
என்பதை இறையச்சமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் உணர வேண்டும். எந்த ஒரு
கட்டளையும் எச்சரிக்கையும் இஸ்லாத்தில் கடைசி நாள் வரை பொருந்தக் கூடியதே!
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று இஸ்லாமிய பிரசாரக்
கூட்டங்களிலும் இந்த கை தட்டல் ஒரு சிறப்பம்சமாக உலா வருகிறது. பிரசாரகர்கள்
அதைச் சுட்டிக் காட்டி நிறுத்துவதற்கு அச்சப்படுகிறார்கள், ஒரு சிலரைத் தவிர!
இந்தக் கை தட்டும் கலாசாரத்தை நாமும் செய்வதன் மூலம் அந்த
இஸ்லாமிய விரோதிகளைப் பின்பற்றுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எந்தப் பேச்சாளராக இருந்தாலும் அவரின்
பேச்சைப் பாராட்டுகிறோம் என்ற நோக்கில் கை தட்டும் பார்வையாளர்களைப்
பார்க்கின்றோம்.
அந்தக் கை தட்டலுக்கிடையே,
பேச்சின் ஒரு பகுதி,
மக்களைச் சென்றடையாமல் போவதையும் அவதானிக்கின்றோம்.
இதன் காரணமாக ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு சொல், தவறாகப் புரிந்து
கொள்ளப்பட்டு, அபார
வளர்ச்சி பெற்றுள்ள ஊடகத் துறையின் மூலம் உலகமெல்லாம் ஒரு நொடிக்குள்
பரப்பப்படுகிறது.
பாரதூரமான விளைவுகளுக்கு அவை வழிவகுத்து விடுவதும் உண்டு.
அன்று சீரழிந்து போயிருந்த மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு
ஓர் அழகிய முன்மாதிரியாக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அம்மாமனிதர் அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புண்படுத்துவதற்காக நிராகரிப்பாளர்கள்
கைக்கொண்ட இக் கை தட்டலை முஸ்லிம்களாகிய நாம் முழுமையாகத் தவிர்ந்து கொள்வதற்கு முழு
முயற்சி எடுக்க வேண்டும்.
சின்னஞ் சிறிய செயல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதற்கு அண்மைக்கால வரலாற்றிலிருந்தே நாம் படிப்பினை பெறலாம்.
பாலஸ்தீனத்தின் சிறுவர்கள் தொடங்கிய சின்னஞ் சிறிய
வேலையொன்றுதான் சிறுசிறு கற்களை இஸ்ரேலியப் படையினர் மீது விட்டெறிந்தமை. அந்தச் சின்னஞ்
சிறிய வேலை, “இன்திஃபாதா” என்ற
அறிமுகத்துடன் பாலஸ்தீன விடுதலை எழுச்சிக்குப் புத்துயிரளித்தது.
ஊடகங்களின் உள்பக்கங்களுக்கு மட்டுமே சொந்தமாகி விட்டிருந்த
பாலஸ்தீனப் போராட்டம் மீண்டும் முன்பக்கச் செய்தியானது. தொலைக்காட்சிச்
செய்திகளில் முதன்மைச் செய்தியானது. சிறுசிறு கற்களை வீசியெறியும் சிறுவர்களின் வீரமான
பங்களிப்புகள்தான் சின்னத் திரைகளை ஆக்கிரமித்தன!
உலகளாவிய ரீதியில், பாலஸ்தீனர்களுக்கு
இழைக்கப்படும் மனித இனமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு செய்யப்பட்ட அநியாயங்கள்
அக்கிரமங்கள் செய்திகளாகக் கொண்டு செல்லப்பட்டன.
உலக மாந்தர் மத்தியில் அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக்
காட்டப்பட்டதைப் பார்த்தோம்.
உலகெலாம் இவ்வநியாயங்களுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல
முஸ்லிமல்லாதவர்கள்கூட குரல் எழுப்ப அது ஒரு காரணியாயிற்று!
மனித சமுதாயத்திற்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்துவதற்காகவே
நிராகரிப்பாளர்களால் கையாளப்பட்ட இந்தக் கை தட்டலை நாம் சிறிய விடயம் என்று
நினைத்து விடாமல் அதை நிறுத்தித்தான் ஆக வேண்டும்.
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடும் நாம் அவன் விரும்பாத
எந்தச் செயலாக இருந்தாலும்,
சிறியதாக நமக்குத் தோன்றினாலும், அதை விடுவதுதான் நாம் அவனைப் பரிபூரணமாக அவனுக்கே உண்டான
பண்புகளோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி!
ஆகவே,
சின்னஞ்சிறிய விடயங்கள் என்று எதையுமே எடை போடுவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சிறியதோ பெரியதோ
எதுவாயிருந்தாலும் அனைத்திற்கும் அல்குர்ஆனிலிருந்தும் அல்ஹதீஸிலிருந்தும் மட்டுமே
வழிகாட்டல்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஒரு முஸ்லிம் உணர்ந்து
விசுவாசித்துச் செயல்பட வேண்டும்.
அப்படிச் செயல் படுவது,
நிச்சயமாக சாபத்திற்கு உள்ளானவர்களுக்கான நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற
ஒரு காரணியாக, இன்ஷா
அல்லாஹ், அமையும்.
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment