Saturday, November 29, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 7

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

                                  (7)


அபூ பௌஸீமா

இனி ஜிஹாத் – அறப்போர்!

அன்று தமது பிறந்தகத்தை, வளர்ந்த ஊரை, கூட்டாக வாழ்ந்த குடும்பத்தை விட்டு விரட்டியதோடல்லாது, தஞ்சம் புகுந்த யத்ரிப் நகருக்கும் படை நடத்திச் சென்று அக்கிரமம் செய்யத் துணிந்த மக்காவாசிகளுக்கு எதிராகப் போர் செய்யும்படி அல்லாஹ் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பணித்தான். ஆயுதம் ஏந்தி தற்காத்துக் கொள்ளும் முதலாவது போர் பத்ரிலே தொடங்கியது. ஜிஹாத் என்ற பதத்தை, கண்டவர்களெல்லாம் பாவித்து அதன் புனிதத் தன்மையை முஸ்லிமல்லாதார் மத்தியிலே பிழையான விளக்கத்துடன் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

‘இஸ்லாமியக் குழுக்களும்’ இஸ்லாமிய சகோதரத்துவமும்

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் உலகத்தில் இல்லாத இந்தக் காலக் கட்டத்தில் முஸ்லிமல்லாதோருக்கு எதிரான ஒரு யுத்தத்தை யார் பிரகடனப் படுத்துவது?

அங்கொன்றும் இங்கொன்றும் என்று குழுக்களை அமைத்துக் கொண்டு அவ்வக்குழுக்களுக்கு ‘பைஅத்’ செய்துவிட்டால் கிலாஃபத் உருவாகி விடுமா?
அப்படி உருவாகியவர்கள் ஜிஹாத் பிரகடனப்படுத்த முடியுமா? அந்த உரிமை யாரிடமுள்ளது?

உணர்ச்சிவசப்படும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த உரிமையைப் பெறுகிறானா? முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கேட்க நாதியில்லை, ஆகவே, நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்கிறோம் என்று பொறுப்புதாரிகளாக மாறும் இவர்களுக்கு அந்தப் பொறுப்பை ஏற்க அருகதையுண்டா, அதிகாரம்தான் உண்டா?

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் இவர்களைத் தமது தலைமையாக ஏற்று அவர்களின் கட்டளைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நம்பிக்கையாகச் செயல்படுமா?

அல்குர்ஆன், அல்ஹதீஸை ஆதாரமாகக் கொண்டவர்கள், இல்லை என்ற பதிலைத்தான் கொடுக்கின்றார்கள். அப்படியானால் இப்படிப்பட்ட குழுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பாவி மக்களை குண்டு வைத்துத் தாக்கி அவர்களின் உயிருக்கு ஆபத்து விழைவிப்பது கொலை இல்லையா?

இவர்களுடைய உணர்வுகளை, சகோதர வாஞ்சையை மறுதலிக்கவில்லை. அந்த உணர்வுகள் பாராட்டப்பட வேண்டும். இஸ்லாமிய சகோதரத்துவத்தை மிகவும் சிலாகித்துப் பேசி முஸ்லிம்கள் ஓருடலும் ஓருயிரும்போல் இருக்க வேண்டும் என்பது இஸ்லாமியப் போதனை – வழிகாட்டல்.

உடம்பிலே ஓரிடத்தில் ஏற்படும் தாக்கம் முழு உடம்பிலும் உணரப்பட்டு உள்ளத்தில் வேதனையை எப்படி ஏற்படுத்துகிறதோ அப்படி, ஒரு முஸ்லிமுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை மற்ற முஸ்லிம்கள் உணர வேண்டும், உதவிக்குச் செல்ல வேண்டும், என்பதுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்.
அந்த உணர்வுகளோடுதான் நாம் வாழ வேண்டும். ஆனால், அந்த உணர்வுகளை மட்டுமே வெளிக்காட்டி இன்று முஸ்லிமல்லாதோரிடையே இஸ்லாத்தின் போர் அணுகு முறைகளையும் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் பற்றிப் பிழையான ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

வரம்பு மீறுதல் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது

இன்று தத்தமக்கு ‘இஸ்லாமிய’ என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு இயங்கக்கூடிய எத்தனையோ குழுக்கள் இஸ்லாமியர்களின் ஏகப் பிரதிநிதிகள் ‘தாமே’ என்று சொல்லிக் கொள்கின்றார்கள். இக்குழுக்களில் அறிஞர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்கள் இன்றைய உலக நடப்புக்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் பிரிந்திருக்கக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத் தீர்ப்புக்களைக் (ஃபத்வாக்கள்) கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பலனாகத் தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாமிய யுத்த ஒழுக்கத்திற்குப் பங்கம் விளைவிக்காது என்று சொல்லித் தாமே இஸ்லாமிய உலகின் ஆட்சித் தலைவராகி முடிவெடுக்கின்றார்கள். அவர்களுக்கென்று உணர்வுகளுக்கு ஆட்பட்ட சிலரைத் தவிர ஓர் ஆட்சியில்லை, அதிகாரமுமில்லை. அப்பாவி இளைஞர்கள் மூளைச் சலவைக்காளாகி அநியாயமாகத் தம்முயிரைக் கொடுத்து அழிகிறார்கள்.

உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு வரம்பு மீறிச் செயல்பட நமக்கு அனுமதியில்லை. ஓர் இஸ்லாமிய நாட்டுக்கெதிராக நிராகரிப்பாளர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாடு போர் தொடுத்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பாளனின் படை முகாம்கள் உலகத்தின் எந்தக் கோணத்திலிருந்தாலும் அவற்றைத் தாக்குவது போர் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது.

ஆனால், இன்னுமொரு இஸ்லாமிய நாட்டிலோ அல்லது முஸ்லிமல்லாதவர்கள் ஆட்சி செய்யக்கூடிய நாட்டிலோ வாழக்கூடிய அவ்வாக்கிரம நாட்டைச் சேர்ந்த சாதாரண பொதுமகனைக் கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள் இதை அங்கீகரிக்கலாமா? அப்படி அங்கீகரிப்பவர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையிலிருந்தும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலிலிருந்தும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

“யுத்தம் செய்வது தடுக்கப்பட்டுள்ள (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும், புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் சீர் குலைக்கப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு. ஆதலால், எவரேனும் மீறி உங்கள் மீது(போர் புரிய) வந்தால் அவர் உங்கள் மீது மீறியது போன்று நீங்களும் அவர் மீது மீறி (போர் புரியச்) செல்லுங்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அல்பகரா 2:194)

மேற்கூறிய அல்குர்ஆன் வசனம் எங்களுக்குத் தெரிவிக்கக்கூடிய ஒரு பேருண்மையை நாம் மறுப்பதற்கில்லை. அநியாயம் செய்யப்படுபவர் அந்த அநியாயத்திற்குப் பகரமாக அதே செயலை அநியாயம் செய்தவருக்குச் செய்வதற்கு அல்லாஹ் இந்த வசனத்தில் அனுமதியளிக்கின்றான்.

ஒரு நாடு, ஓரூர், ஒரு சமூகம் என்ற அடிப்படையில் அந்நாட்டுக்கு, அவ்வூருக்கு, அச்சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தண்டனை கொடுப்பது யார்?
கேள்வியில் சிக்கல் எதுவுமில்லை. அதே வசனத்தில் இன்னுமொரு முக்கியமான எச்சரிக்கையையும் மறந்துவிடக் கூடாது. அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருப்பதாக தொடர்ந்து அறியப்படுத்துகிறான்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment