Thursday, November 13, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்….
புகைத்தலை விடுவோம்!
புகைத்தல் சாதனங்கள் விற்பனையையும் தவிர்ப்போம்!
-    அபூ பௌஸீமா -

காலத்துக்குக் காலம் மனிதன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் சாதனைகளை – அவை ஆன்மிகமாக இருக்கட்டும் அல்லது உலகாயதமாக இருக்கட்டும் – உண்டாக்கி அவற்றைக் கொண்டு சமூக அமைப்புக்களிலே ஒழுங்கீனத்தை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கின்றான்.

இவ்வடிப்படையிலே இன்று கற்றவர்கள் மத்தியிலும்கூட ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு பழக்கம்தான் புகைத்தல்!

புகை பிடித்தலுக்கான சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள் அரசாங்கங்களின் உத்தரவுப்படி, புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும், அதனால் இன்னின்ன நோய்கள் ஏற்படும் என்ற கருத்துப்படவுள்ள எச்சரிக்கைகளுடந்தான் தமது உற்பத்தியைச் சந்தைப் படுத்துகிறார்கள்.

இது மனிதன் தன்னுடைய உலகாயதத் தேவைகளை மட்டும் எதிர்பார்த்துச் செய்யும் ஒரு செயல். அதனால்தான், தாம் எதைச் செய்கின்றோம் என்ற கொள்கை விளக்கமோ அல்லது கோட்பாடோ இன்றி பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்களின் வேலையாக இது இருக்கின்றது.

ஆன்மிக நம்பிக்கையைப் பற்றிய எந்த விளக்கமுமில்லாமல் ஆட்சி பீடமேறியிருப்பவர்களும் அரசாங்க நிருவாகத்திற்கு அவசியமான பணத்தேவையை மட்டும் மனதில் கொண்டு இப்படிப்பட்ட உற்பத்திகளுக்கு அனுமதியளித்திருக்கிறார்கள். புகைப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்குச் செலவிடுவதற்காக சுகாதாரத் திணைக்களத்திற்கு ஒதுக்கும் கோடிக் கணக்கான பணம் இவர்களின் அறிவுக்கு எட்டுவதேயில்லைதான்!

எது எப்படியிருப்பினும், முஸ்லிம்களாகிய எங்களுக்கு ஒரு வாழ்க்கைத் திட்டத்தை, அல்லாஹ் தனது நேர்வழி – அல்குர்ஆன் – மூலமும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலின் மூலமும் பரிபூரணமான ஓர் ஒழுங்கு முறையைக் காட்டித் தந்துள்ளான்.

எங்களுடைய அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களில் நாங்கள் நிச்சயமாக அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றின் வழிகாட்டலின்படிதான் வாழ முயற்சிக்க வேண்டும் – வாழ வே|ண்டும். எங்களுடைய கட்டுப்பாட்டுக்கு உட்படாத விடயங்களில் நமது நிலைபற்றி அல்லாஹ் தெளிவாகச் சொல்லிக் காட்டுகின்றான்: “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை.” (ஸூரா அல்பகரா 2:286)

புகை பிடிப்பவர்களே! உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சிந்தனையை முடுக்கிவிட்டுப் பதில் தேடுங்கள்!

நீங்கள் கைக்கொண்டிருக்கும் இந்தப் புகை பிடிக்கும் பழக்கம் நல்லது என்று உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்திலுள்ள பிள்ளைகளிடம், சிறந்த பழக்கமிது என்று கூறுவீர்களா?

உங்கள் நண்பர்கள், சுற்றத்தார்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்காவது புகை பிடித்தல், சிந்தனையைத் தூண்டுகின்றது; சுறுசுறுப்பைக் கொடுக்கின்றது என்று அறிவுரை பகர்வீர்களா?

உறுதியாகச் சொல்கிறேன். எந்த ஒரு மனிதனும், புகைத்தல் ஒரு நல்ல பழக்கம் என்று யாருக்குமே சொல்லப் போவதில்லை. புகைப்பவர்கள்கூட அதைத் தம் பிள்ளைகளிடம் கெட்ட பழக்கம் என்றுதான் சொல்கின்றார்கள். சந்தேகமேயில்லை! அப்படியிருக்க ஏன் புகைத்துத் தள்ளுகிறீர்கள்?

மனித சமூகத்திற்கு நேர்வழியாக அல்லாஹ் அனுப்பிய வேதம் அல்குர்ஆன் என்ன சொல்கின்றது என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: “இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள், (உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டும் செல்லாதீர்கள், (பிறருக்கு) நன்மையும் செய்யுங்கள், (பிறருக்கு) நன்மை செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.” (ஸூரா அல்பகரா 2:157)

“(இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை(ச் செய்யுமாறு) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார், நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும் விடுவார்…” (ஸூரா அல் அஃராஃப் 7:157)

புகை பிடிப்பவர்களே!

இனியும் நீங்கள் தொடர்ந்தும் புகை பிடித்துக் கொண்டு பாவத்திலாகி வீண்விரயம் செயதமைக்கான பாவத்திற்கு பதில் சொல்ல முடியும் என்று நினைக்கின்றீர்களா?

புகைப்பதன் மூலம் நீங்கள் உங்கள் பொறுப்பில் உள்ளவர்களுக்காக அல்லாஹ் அருளிய செல்வத்தை வீணடிக்கிறீர்கள்.

மனிதர்கள் கூடும் இடங்களிலே புகை மண்டலத்தை விட்டு சூழலை மாசு படுத்துகிறீர்கள்.

அவ்விடங்களில் புகையிலையின் துர்நாற்றத்தைப் பரப்பி மற்றவர்களின் உள்ளங்களிலே அறுவறுப்பை உண்டாக்கின்றீர்கள்.

இப்படி சமூக விரோதச் செயல்பாடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, அன்புச் சகோதரர்களே! இந்த விநாடிவரை செய்த பாவத்தை உணர்ந்து அதை விட்டு மீண்டு, நடந்துவிட்ட பிழைக்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி புகைத்தலை நிறுத்தி விடுவதற்கு முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

புகைத்தல் சாதனங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளே!

அல்லாஹ் அனுமதியளித்த விதத்திலே மனிதனுக்குத் தீங்கில்லாத பொருட்களை விற்பனை செய்து உங்கள் சம்பாத்தியங்களை ஹலாலானவையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

சிந்தித்துப் பாருங்கள்! புகைத்தல் சாதனங்களை விற்பனை செய்யும் நீங்கள், உங்கள் பிள்ளைகள் அல்லது உங்கள் குடும்பத்திலுள்ள பிள்ளைகள் புகைப்பதை சரியென்று சொல்வீர்களா? ஏன், உங்கள் நண்பர்கள், சுற்றத்தவர்கள் ஆகியோரின் பிள்ளைகள் புகைப்பதை நல்லமல் என்று குறிப்பிட முன்வருவீர்களா? உங்களுடைய பிள்ளைகளை ஒத்தவர்களுக்கு அவற்றை விற்பனை செய்யும்போது உங்கள் மனசாட்சி உறுத்துவதை உணரவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

ஊர்கள் முன்னேறும்போது சூழல் மாற்றமடைகின்றது. அந்த மாற்றத்திற்கு இடமளிக்க வேண்டுமென்று நினைத்து நாம் நமது சமூகத்தை மீட்டெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளி விடப்போகிறோமா என்றதோர் அங்கலாய்ப்பு இப்போது நம் மத்தியிலேயிருந்து கொண்டிருப்பதைப் பார்க்கக் கூடியதாயுள்ளது.

இனியும் தாமதம் வேண்டாம். ஒவ்வொரு வியாபாரியும், இந்தப் புகைத்தல் சாதனங்களால் வரக்கூடிய சொற்ப ஆதாயத்தை மனதில் கொண்டு தொடர்ந்தும் சமூகச் சீர்கேட்டுக்குத் துணை போகாமல், உடனடியாகப் புகைத்தல் சாதனங்கள் விற்பனை செய்வதை அல்லாஹ்வுக்காக நிறுத்தி சமூக நலனுக்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும்.

ஒவ்வொரு வியாபாரியும் தனது வியாபாரத்திற்காக படும்பாடு யாவரும் அறிந்ததே! அவ்வளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் அடைந்து முழு வியாபாரத்தையும் புகைத்தலுக்கான சாதனங்களை விற்று ஹராமாக்கிக் கொள்ள வேண்டுமா? சிந்தியுங்கள்!

நிச்சயமாக, செய்யக்கூடிய ஒவ்வொரு நல்லமலுக்கும் அல்லாஹ்விடத்திலே நற்கூலியுண்டென்பதை நம்பியிருக்கக்கூடிய முஸ்லிம்கள் நாம், நமது செயல்கள் யாவும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவே இருக்க வேண்டும்.

அதுவே, ஆறுகள் கீழே ஓடும் சுவர்க்கச் சோலைகளில் நம்மை இருத்துவதற்கு அல்லாஹ் நாடினால் ஒரு காரணியாகக்கூட ஆகலாம்.

வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!



குறிப்பு: இவ்வாக்கம் 2000ல் அக்குறணையில் நான் அச்சிட்டு விநியோகித்த ஒரு துண்டுப்பிரசுரம். பின்னர் idhuthanislam.com என்ற இணையதளத்தில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.

No comments:

Post a Comment