Tuesday, November 11, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

மணக்கொடை(மஹர்) நிர்ணயம்


-    அபூ பௌஸீமா –

அல்ஹம்துலில்லாஹ்! சமூகத்தில் சிறிது சிறிதாக நல்ல மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. சீதனக் கொடுமைக்கெதிராகக் குரல் கொடுத்த நல்ல மனிதர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியத்தை சர்வ சக்தியும் உள்ளவனான அல்லாஹ் அருள்வானாக.

அந்தச் சீதன ஒழிப்புக்கு வழிகாட்டியதோடு திருமண ஒப்பந்தத்தின்போது அல்லாஹ் கட்டளையிட்டுள்ள ஒரு முக்கியமான கொடுப்பனவு மணக்கொடை என்பதையும் தெளிவு படுத்தினார்கள்.

மணமகன் மணமகளுக்கு அளிக்கும் மணக்கொடை இல்லாமல் இப்போது திருமணங்கள் நடப்பதேயில்லை. அல்ஹம்துலில்லாஹ்.

மணமகளின் வீட்டாரிடம் சீதனத்தை இரகசியமாக வாங்கிக் கொள்ளும் மணமகனை நான் இங்கே விமர்சிக்கப் போவதில்லை. ஏனென்றால், இரகசியமாக வாங்குவதிலிருந்தே அவர் ஒரு பெரும் பிழையைத் தெரிந்து கொண்டே செய்கின்றார் என்பது மிகத் தெளிவு. அவர் அவருடைய மனசாட்சிக்குப் பதில் சொல்லிக் கொள்ளட்டும் இந்த உலகில்! பின்னர் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக் கொள்ளட்டும் நாளை மறுமையில்!

இப்போதுள்ள கேள்வி அதுவல்ல! கொடுக்கப்படும் மணக்கொடை எதுவாகவிருந்தாலும் அதை நிர்ணயிப்பது யார் என்பதுதான். திருமண ஒப்பந்தம் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த உரிமை உண்டா இல்லையா?

நடக்கக் கூடிய திருமணங்களிலே பார்க்கிறோம், நடத்தி வைப்பவர்களும் மணக்கொடை எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்று மணமகனிடம் கேட்கிறார்கள் இல்லை. அவருடைய உறவினர்களின் முகத்தைதான் கேள்வியோடு நோக்குகிறார்கள். மணமகளின் தந்தை அல்லது பொறுப்புதாரி ஒவ்வொருவர் முகத்தையும் பார்க்கின்றார்.

இதன் உண்மை என்னவென்றால் மணக்கொடை என்பது திருமண ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனை என்பதை விட ஒரு சடங்கு என்றுதான் விளங்கி வைத்திருக்கிறார்கள்.

மணக்கொடை கொடுக்காமல் திருமணம் முடிக்கும் காலம் போய், மணக்கொடை கொடுத்துத் திருமணம் செய்யும் காலம் வந்திருக்கின்றது என்று சந்தோஷப்படுவதற்கு எதுவும் இல்லாமல் போய் விட்டிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

நம்பிக்கையாளர்களின் தலைவர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரசங்கத்திலே அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் மணக்கொடை கேட்பதனால் ஆண்கள் திருமணம் செய்வது தாமதப்படுகிறது என்று தெரிவித்து, அதனால் அவர்கள் கேட்கும் மணக்கொடையின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
தொழுகைக்காகப் பள்ளியில் சமுகமளித்திருந்த நபித்தோழியர்களில் ஒருவர் உடனே எழுந்து, உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விழித்து, அவரது கோரிக்கை அல்குர்ஆன், அல்ஹதீஸுக்கு உடன்பட்டதா அல்லது அவருடைய சொந்தக் கருத்தா என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதை அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போது தாம் அனுபவித்து வந்த எத்தனையோ சொகுசான வாழ்க்கையையும் தம்மிடம் இருந்த செல்வத்தையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்த அப்பெருந்தகை உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கோபப்படவில்லை. சிறிது நேரம் சிந்தித்தார்கள்!

பின்னர், சொன்னார்கள்!
“இல்லை! அது அல்லாஹ்வின் கட்டளையிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகளின் வழிகாட்டலிலும் இல்லை. அது தனது கருத்துத்தான். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் ஒரு போதும் கட்டாயப்படுத்தப் போவதில்லை.”

வாழப் போகும் பெண்ணுக்கு இதை நிர்ணயிக்கும் உரிமை உண்டு என்பதை இச்சம்பவம் அறுதியிட்டு உறுதி செய்கிறது.

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்: “(திருமணம் செய்த) பெண்களை நீங்கள் தீண்டாமலும், அல்லது (திருமணத்தின் போது) அவர்களின் மணக்கொடையை நிர்ணயம் செய்யாமலும் (அவர்களை) நீங்கள் விவாகரத்துச் செய்து விட்டால், உங்கள் மீது (அது) குற்றமில்லை, இன்னும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யுங்கள்; வசதியுள்ளவரின் மீது அவருக்குரிய அளவும், வசதியற்றவர் மீது அவருக்குரிய அளவும் நியாயமான முறையில் (அப்பெண்களுக்குக் கொடுத்துப்) பயனடையச் செய்ய வேண்டும். (இது) நல்லோர் மீது கடமையாகும்.” (ஸூரா அல்பகரா 2:236)

திருமண ஒப்பந்தம் செய்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் தொடாத நிலையிலே இருந்து கொண்டு அவ்வொப்பந்தத்தை முறித்துக் கொள்ளத் தீர்மானித்தால், அப்போது மணக்கொடையை நிர்ணயம் செய்யாமல் ஒத்திவைக்கப் பட்டிருந்தால் அந்நிலையில் விவாகரத்துச் செய்வது ஆண்கள் மீது குற்றமில்லை என்று சொல்லிவிட்டு, அவர்கள் பயடனையக்கூடிய அளவுக்கு ஏதேனும் கொடுக்கும்படி ஏவுகின்றான்.

அவ்வேவலுக்கும் ஓர் அளவுமுறையை அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப அவர்களுக்குக் கொடுக்கும்படி கூறி அது நல்லோர்கள் மீது கடமை என்று ஒரு முத்தாய்ப்பு வைத்திருப்பதை இந்த வசனத்திலே காணக் கூடியதாயிருக்கின்றது.

அந்தக் கருணையாளன், உலகங்களுக்கெல்லாம் அதிபதி, நீதியாளர்களுக்கெல்லாம் மேலான நேர்மையான நீதியாளன் எவ்வளவு அழகாக நளினமாக இரக்க சிந்தையோடு இந்தக் கட்டளையை ஏவியிருக்கின்றான் என்பதைச் சிந்திக்கக் கூடிய ஆண்கள்தான் அவனது பார்வையிலே நல்லோர்கள்: “மேலும், (திருமணம் செய்த பெண்களான) அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அவர்களுடைய மணக்கொடையை நீங்கள் குறிப்பிட்டு நிர்ணயம் செய்திருக்க, நீங்கள் அவர்களை விவாகரத்துச் செய்து விட்டால், (அப்பெண்களாகிய) அவர்கள் (விட்டுக் கொடுத்து) மன்னித்து விட்டாலோ, அல்லது யாருடைய கையில் திருமண பந்தமிருக்கின்றதோ, அவர் (விட்டுக் கொடுத்து) மன்னித்து விட்டாலோ அன்றி, நீங்கள் நிர்ணயம் செய்ததில் பாதி (அப்பெண்களுக்கு) உண்டு; மேலும், நீங்கள் மன்னித்து விடுவது (விட்டுக் கொடுப்பது) பயபக்திக்கு மிக நெருங்கியதாகும்; ஆகவே, உங்களுக்கிடையில் (உபகாரம் செய்து கொள்வதில்) தயாள குணத்துடன் நடப்பதை மறந்து விடாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக்கூடியவன்.” (ஸூரா அல்பகரா 2:237)

இங்கேயும் மணக்கொடை நிர்ணயம் செய்திருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில், திருமண ஒப்பந்தம் செய்து ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்யுமிடத்து நிர்ணயிக்கப்பட்ட மணக்கொடையின் பாதி உங்களுக்குரியது என்றும் அதையும்கூட அப்பெண்களுக்கு விட்டுவிடுவது மூலம் தயாள குணத்துடன் நடக்கும்படி ஏவுகின்றான்.

அது மட்டுமல்ல எப்படி நடந்து கொண்டாலும் அதை அவன் பார்க்கக் கூடியவனாக இருப்பதை ஞாபகமூட்டுவதன் மூலம் அவன் அந்த நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக கூலி கொடுக்கக் கூடியவனாக இருக்கின்றான் எனபதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

இவற்றின் முக்கிய பாடம் மணக்கொடை என்னும் பொருளாதார உதவி, ஒவ்வொரு திருமணமாகும் பெண்ணுக்கும் அவளின் கணவன் செய்ய வேண்டிய ஒரு கடமை என்பது தெளிவாக்கப் பட்டுள்ளது.

மனிதம் வாழ்வதற்கு அதன் மகோன்னத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்த மனிதனுக்கே அதன் பொறுப்பை ஒப்படைத்து விடாமல் அதற்கும் ஓர் ஒழுங்கு முறையை, சட்டதிட்டத்தை அல்லாஹ் விளக்கமாகவே ஆக்கிக் கொடுத்துள்ளான்.

“பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மன நிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!”  (அல்குர்ஆன் ஸூரா அந்நிஸா 4:4)

அல்லாஹ்வினால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு கட்டளைதான், மணமுடிக்கும்போது மணமகளுக்கு மணமகன் மணக்கொடை கொடுக்க வேண்டுமென்பது. அதன் அர்த்தம் வெறும் 101 ரூபாவுக்கும், 1,001 ரூபாவுக்கும், 10,001 ரூபாவுக்கும் மட்டும் உட்படட்தல்ல! 20,001 ரூபா பெறுமதியான தங்க நகை மணக்கொடையாகக் கொடுக்கப்பட்டு அடுத்த நாள் மனைவியிடம் அவளது விருப்பத்தைப் பெறாது அதை எடுத்துச் செல்வதும் மணக்கொடையாக மாட்டாது. அவள் தனது மனைவிதான் என்ற உறவுமுறையை அவளது இயலாமையாகக் கணித்து அவளிடமிருந்தே பெற்றுச் செல்வதும் ஆகாது.

பரிதாபத்துக்குரிய விடயம்தான், இன்று நூற்றுக்கணக்கான ஏக்கராக்கள் சொந்தமாக வைத்திருக்கும் ஆண்கள் தாம் திருமண ஒப்பந்தம் செய்யும் பெண்ணுக்கு ஒரேயொரு ஏக்கரா காணிகூடக் கொடுப்பதில்லை!

பல வண்டிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஒரேயொரு  வண்டியையாவது அனைத்தையும் விட்டு தன்னோடு வாழ்க்கை நடத்த வரும் பெண்ணுக்கு மணக்கொடையாகக் கொடுக்க முன்வருவதில்லை!

இதற்கெல்லாம் காரணம், மணக்கொடையின் தாற்பரியம், அதன் முக்கியத்துவம் சரியாக இன்னும் சமூகத்தில் உணரப்படவில்லை; உணர்த்தப்படவுமில்லை!

மணக்கொடையின் தாற்பரியம் மிகவும் உயர்ந்தது. அல்லாஹ்வின் சட்டத்தை வைத்துக்கொண்டு அதற்குள்ளே நுழைந்து விளையாடும் திருகுதாளத்தை வக்கீல்கள் சிலர் செய்வதுபோல் செய்து கொண்டிருக்கிறோம்! இஸ்லாமிய அறிஞர்கள் பலர் இப்படிப்பட்ட திருகுதாளங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

மணக்கொடையாக 101 ரூபாவைக் கொடுக்கும் பெரும்பாலோர் வலீமா விருந்துக்காக இலட்சக் கணக்கில் செலவழிக்கிறார்கள்! வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே மேலும் இலட்சங்களைச் செலவு செய்கிறார்கள்! வலீமா விருந்து நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படும் ஹோட்டலுக்கு ஒரு கதிரைக்கு ஆயிரம் ரூபாய்களைவிட அதிகமாகக் கூலியாகக் கொடுக்கிறார்கள்!

நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமணத்தின் பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தபோது நடந்த உரையாடலை மீட்டிப் பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் படிப்பினையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஸஹீஹ் அல்புகாரியில் பதியப்பட்டுள்ள ஒரு நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி இது. இதன் அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவார்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சல் அடையாளத்தைக் கண்டு, “என்ன இது அப்துர்ரஹ்மானே,” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நான் அன்ஸாரிப் பெண்ணொருவரை மணம் புரிந்து கொண்டேன்,” என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவளுக்கு (மஹராக)என்ன கொடுத்தாய்,” என்று கேட்க, “ஒரு பேரீத்தங்கொட்டையின் எடையளவு தங்கத்தை,” என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா (மணவிருந்து) கொடு,” என்று சொன்னார்கள்."

இந்தச் சம்பவத்தில் வலியுறுத்தப்படுவது என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது ஒரு முக்கியமான அம்சம் தெளிவாகின்றது. மண விருந்தைவிட மணக்கொடைதான் முதலிடம் வகிக்க வேண்டும் என்பதுதான் அது!

மணக்கொடையின் அளவைவிட மண விருந்தின் செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பதும் சொல்லாமல் சொல்லப்படுவதை உணர முடிகின்றது. அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

மணக்கொடையின் முக்கியத்துவம், அதன் தேவை என்பன பற்றியெல்லாம் விளக்கமாக எத்தனையோ பேர் ஏற்கனவே சொல்லியிருக்கின்றார்கள்! எழுதியிருக்கின்றார்கள்! ஆனால், நமது சமூகம்தான் இந்த விடயத்தில் பொடுபோக்காக இருக்கிறது.

ஒன்றை மட்டும் திருமணம் செய்யும் பெண்களுக்கு ஞாபகமூட்டி, இஸ்லாம் எவ்வளவு அழகாகப் பெண்ணுரிமை காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும்படி குறிப்பிட விரும்புகிறேன்.

திருமணத்தின் மூலம் பெரும் இழப்பிற்கு ஆளாகிறவர்கள் பெண்கள்தான். அவர்கள், ஆண்களைப் போலத் தனிவழி சென்று தம் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதில் ஆபத்து இருக்கின்றது. மேலும், திருமண ஒப்பந்தம் ஏதோ ஒரு காரணத்திற்காக இரத்து செய்யப்பட்டு விவாக விடுதலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படலாம். தனது எதிர்கால வாழ்க்கையை இஸ்லாமிய கட்டுக்கோப்புக்குள் இருந்து கொண்டு வேறு யாருக்கும் பாரமாக இல்லாமல் வாழ்வதற்கு பொருளாதார வசதிகள் வேண்டும்.

எனவே, இஸ்லாமிய சகோதரிகளே! இனியும் நீங்கள் உங்களுடைய மூதாதையர்கள்போல இருந்து விடாமல் திருமண நிச்சயத்திற்கு ஆளான மணமகனின் வசதிக்கேற்ப உங்களுக்கான மணக்கொடையைத் தாராளமாகக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் பின்னடையாதீர்கள்!

இஸ்லாமிய சகோதரர்களே! உங்களோடு வாழ்வதற்காகத் தன்னையே கொடுத்து ஒப்பந்தம் செய்யும் பெண்ணுக்கு நீங்கள் தர வேண்டிய மணக்கொடையை சம்பிரதாயங்களுக்கும் சடங்குகளுக்கும் மட்டுப்படுத்தி விடாமல் அல்லாஹ்வுக்காக அவனது கட்டளையை நிறைவேற்றுகிறோம் என்ற தூய எண்ணத்துடன் வசதிக்கேற்ப தாராளமாகக் கொடுங்கள். அதுவே உங்கள் இருவர் மத்தியிலும் ஒரு விளங்கிக் கொள்ள முடியாத பிணைப்பாக மாறி வாழ்க்கை இனிக்க வழிவகுக்கும்!

அகிலங்களுக்கெல்லாம் அதிபதியான அல்லாஹ் நம் சமூகத்தவர் மத்தியிலே அவனுடைய கட்டளைகளின் தாற்பரியத்தை விளங்கி அவனுக்காகவே அந்த அமல்களைச் செய்ய நம்மனைவருக்கும் விளக்கத்தையும் அறிவையும் மேம்படுத்துவானாக!

அந்த அறிவுத் தெளிவின் பின் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் கீழ்ப்படிந்து வாழ்வதற்கு மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் தந்தருள்வானாக!

முஸ்லிமாகவே வாழ்ந்து முஸ்லிமாகவே மரணித்து பாக்கியங்கள் நிறைந்த சுவனச் சோலையில் நாளை மறுமையில் நம்மனைவரையும் ஒன்று சேர்ப்பானாக!


வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!



குறிப்பு: இவ்வாக்கம் 2000 – 2002 காலக் கட்டத்தில் idhuthanislam.com என்ற இணையதளத்தில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.

No comments:

Post a Comment