Wednesday, November 12, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

நீதி செலுத்துங்கள்!

-    அபூ பௌஸீமா -

“விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக் கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக (உண்மையின் மீது) நிலைத்தவர்களாக ஆகிவிடுங்கள், எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாகத் தூண்டிவிட வேண்டாம், (எவ்வளவு விரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள், அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும், இன்னும் (எல்லா நிலைகளிலும்) நீங்கள் அல்லாஹ்வைப் பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்கிறான்.” (அல்குர்ஆன் ஸூரா அல்மாஇதா 5:8)

நீதி இஸ்லாமிய வாழ்க்கை முறையில் மிக முக்கியமான சிறப்பு மிக்க உன்னதமான ஓர் அம்சம். அல்லாஹ் நீதியை நிலை நாட்டுங்கள் என்ற கட்டளையை அவனுடைய எச்சரிக்கையுடன் கூடவே நம்மீது விதித்திருப்பது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அல்லாஹ் தெளிவாகக் கூறுவதைச் சிந்திக்க வேண்டிய ஒரு காலக் கட்டத்தில் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்தின் எந்தக் கோணத்தை எடுத்துக் கொண்டாலும் அராஜகம், அநியாயம் தலைவிரித்தாடுகின்றது. முஸ்லிம்கள் தாக்கப் படுகின்றார்கள், முஸ்லிமல்லாதவர்களும் தாக்கப் படுகின்றார்கள். அ நியாயத்திற்கு முன்னால் எல்லோரும் ஒன்றுதான்!

எந்த மதத்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் அடுத்தவருடைய உரிமையில் எந்தவிதமான மனிதாபிமானமும் இல்லாமல் தலையிடுகிறார்கள்! இவ்வாறு செய்ய யாருக்கேனும் அனுமதியுண்டா?

இஸ்லாம் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்கின்றது. ஏன்! அது மனித சமூகத்திற்கே வழிகாட்டி! அல்லாஹ் அதை முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கவில்லை. இதை ஏனோ இன்று சிலர் மறந்து விட்டார்கள், அல்லது அவர்கள் மனித உணர்வுகளுக்கு மட்டும் ஆட்பட்டு அறிவுத் தெளிவற்று இருக்கின்றார்கள்.

“எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாகத் தூண்டிவிட வேண்டாம்.” மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் சொல்லியிருப்பது தெளிவில்லையா? ஒரு சமூகம் நமக்கிழைக்கக்கூடிய அனர்த்தங்களால் அந்தச் சமூகத்தின் மீதேற்படக்கூடிய விரோதம் நம்மை நீதமாக நடப்பதிலிருந்து வழிதவறி விடுவதற்குக் காரணியாகிவிடக் கூடாது.

அவர்கள் நமது மக்களைத் தாக்குகின்ற காரணத்தினால் நாமும் கண்ணை மூடிக்கொண்டு அவர்களைத் தாக்குவதும் அப்படித் தாக்கப்படும்போது சாதாரண பொது மக்கள், பெண்கள், பிள்ளைகள், கடைத் தெருவுக்குச் சாமான் வாங்கப் போகின்றவர்கள், பாடசாலைக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிறோம்.

இவையெல்லாம் யுத்த களத்தில் எதிரியைக் கொன்றதாகத்தான் கருதப்படும் என்று இன்று “அறிஞர்கள்” சிலர் சொல்வதைக் கேட்கின்றோம்.

இஸ்ரவேலர்களின் அராஜகமும் மனிதப் படுகொலைகளும் கண்டிக்கபட வேண்டியவை மட்டுமல்ல இந்த மாபாதகத்துக்கு எதிராக இஸ்லாமியரகள் அணிதிரண்டு போராட வேண்டுமென்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமிருக்க முடியாது.

ஆனால், அவர்கள் செய்யக்கூடிய பாத்கச் செயல்களுக்காக நாமும் அதே பாதகச் செயல்களை அவர்கள் யஹூதிகள் என்ற ஒரே காரணத்திற்காக செய்ய முடியுமா என்பது சிந்தனைக்குரிய விடயம். ஏன் சிந்தனைக்குரிய விடய்மென்றால் அதற்கான காரணம், மேற்குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளைதான்.

அந்த அறிஞர்களும் மேடைப் பேச்சாளர்கள் சிலரும் உணர்ச்சி வேகத்தால் கொதித்துப் போயிருக்கும் மக்களுக்கு உபதேசம் செய்கின்றார்கள்!

கோபத்திலாகி பழி தீர்க்க வேண்டுமென்ற ஆவேசத்திற்கு உள்ளானவர்களின் உணர்வுகளை உசுப்பி விடுகின்றார்கள். அதனால் அவர்களுடைய இந்தப் பேச்சுக்களும் உணர்வூட்டல்களும் இஸ்லாமிய அணுகு முறைகளுக்குப் பெரும் பாதகமாகி வருவதை அவதானிக்கின்றார்களில்லை.

மேற்கோள் காட்டிய அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் மாறுபட்ட உபதேசங்கள் இவை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.

சந்தேகமேயில்லை! இஸ்லாம் எந்தச் சமயத்திலும் பிள்ளைகளை, பெண்களை, யுத்த களத்திலில்லாத சாதாரண மனிதனைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கவில்லை.

எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்காக அதே அநீதியை அந்த அநீதியோடு சம்பந்தப்படாத ஒரு பொதுமகனை அழிப்பதன் மூலம் நிவர்த்திக்கப்படுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“எவர் நேர்வழியில் செல்கின்றாரோ, அவர் நேர்வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கே (தீங்கிழைத்துக் கொள்ளத்)தான், இன்னும் (பாவத்தைச்) சுமக்கக்கூடிய(ஒரு ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது, மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.” (அல்குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் 17:15)

இஸ்லாம் எந்தக் கட்டத்திலும் அப்பாவி மக்களைக் கொல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த போர்களிலும் அதன் பின்னால் நல்வழி நடந்த கலீஃபாக்களின் காலத்தில் நடந்த யுத்தங்களிலும் அப்படி நடந்தத்ற்கான எந்தச் சான்றும் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களில் பலர் அராஜகம் செய்கின்றார்கள் என்பதற்காக அந்த அராஜகத்தின் மூலமே ஏன் முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கக் கூடாது என்பதுதான் இந்தத் தலைவர்கள், அறிஞர்களின் வாதம்! இப்படி வாதம் செய்து உசுப்பி விடப்படும் போராளிகள் யாரைக் கொல்கிறார்கள்? அராஜகம் செய்தவர்களையா, அல்ல, அந்தக் கொடுமைகளுடன் சம்பந்தப்படாதவர்களைத்தான் தாக்குகிறார்கள்.

யாரோ செய்த கொடுமைக்கு யாருக்கோ தண்டனை!

மேலே மேற்கோள் காட்டிய் அல்குர்ஆன் வசனம் அல்லாஹ்வின் வாக்கு என்பதை ஏன் மறந்து விடுகின்றார்கள்? இந்த உலகத்தில் அந்த அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்களுக்குத் தண்டனை கொடுக்க முஸ்லிம்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

சடுதியாக வரும் உணர்வு வேகத்திற்கு மட்டும் ஆட்பட்டு தீர்ப்புக்கள் கொடுக்கப்படுமானால் இன்று ஒரு மனிதன் தன்னுடைய இனத்துக்கு, தன்னுடைய குடும்பத்திற்கு, தனக்கு, சார்பாக “நீதி” செலுத்தலாம் என்றாகிவிடும்!

இஸ்லாம் இதை வனமையாகக் கண்டிக்கின்றது.

“மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (அல்குர்ஆன் ஸூரா அந்நிஸா 4:58)

இந்த வசனத்திலே அல்லாஹ் சொல்வதை மறைக்காமல் நாம் வெளிக் கொணர்வோமானால் சிந்திக்கும் மக்களுக்கு அது ஒரு பெரும் அருட்கொடையாகத்தான் இருக்கும். அல்லாஹ் ‘மனிதர்களுக்கிடையில்’ என்ற சொற்பிரயோகத்தைத்தான் உபயோகித்திருக்கின்றான். ‘முஸ்லிம்களுக்கிடையில்’ என்று குறிப்பிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஹராமான இரத்தத்தைத் தொடாத வரை (யாரையும் அநியாயமாகக் கொலை செய்யாத வரை) ஒரு முஃமின் தமது தீனின் விஸ்தீரணத்தில் (தம் ரப்பின் ரஹ்மத்தின் ஆதரவில்) ஆகிவிடுவார்.” ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் தமிழாக்கம் ஹதீஸ் 220)

குற்றமிழைத்த ஒருவனின் இனத்தைச் சேர்ந்த காரணத்திற்காக மற்றொருவனைத் தண்டிக்க எந்தவொரு மனிதனுக்கும் அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறிய அறிவிப்பில் வருவது மிகத் தெளிவானது. அப்பாவியான ஒரு மனிதனைக் கொல்வது ஹராம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

“எங்கள் இனத்தவர்களைக் கொல்கின்றார்கள். செய்தவனைத் தேடிப்பிடிக்க முடியாது. அவன் உலக பொதுத்  தாபனங்களைத் தன்னதிகாரத்திற்குள் வைத்துக் கொண்டுள்ளான், நவீன ஆயுதங்களுடன் இருக்கின்றான்; அவனைத் தண்டிக்க எமக்குச் சக்தியில்லை; எப்படியோ ஒரு வகையில் அவனுக்குப் பாடம் புகட்ட வேண்டும்! எனவே, நாம் அவனுடைய இனத்தைச் சேர்ந்தவனை நம்மிடம் உள்ள ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொல்வது கொலையாக ஆகாது! அப்படி நமது தாக்குதலில் யார் இறந்தாலும் அவ்விறப்பு போர்க்களத்தில் எதிரியின் இழப்புத்தான்!” என்றிப்படிப் பேசும் அறிஞர்களும் சமூக நலன் விரும்பிகளும் தொண்டர்களும் நம்மிடையே இல்லாமலில்லை!
அவர்களிடம் ஒரு விநயமான வேண்டுகோள்! தயவு செய்து அதற்கான அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களக் காட்டுங்கள்.

ஆகவே, இன்று சர்வதேசரீதியில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கும்போது இஸ்லாமிய அறிஞர்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகிய இரண்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உணர்வு வேகங்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

தவறிழைக்கக்கூடிய தலைவர்களின் அராஜகங்களை எதிர்க்க வேண்டும். அந்த நாட்டு பொது மக்களை அநியாயக்காரர்கள் என்று விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித விமர்சனங்களுக்குப் பயந்து நீதி செலுத்துவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள ஒரு முஸ்லிமுக்கு அனுமதியில்லை. இதைத்தான் மேலெடுத்துக் காட்டப்பட்டுள்ள அல்குர்ஆன் வசனங்கள் நமக்குப் போதிக்கும் பாடம். அதுதான் அல்லாஹ்வின் கட்டளை!

நீதி நிலை நிறுத்தப்படுவது தத்ரூபமாகத் தெரியும்போதுதான் அல்லாஹ்வின் மார்க்கம் மனித இனத்துக்குப் பொதுவானது என்ற நிலை தாபிக்கப்படும். அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருக்கின்றார்கள். புதிதாகப் புகுத்துவதற்கு அங்கே எதுவும் குறைபாடுகள் இல்லை.

உணர்ச்சி ததும்பப் பேசுவதன் மூலம் மட்டும் இஸ்லாமிய சகோதரத்துவத்தை எப்படி ஏற்படுத்த முடியாதோ அப்படித்தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறி அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலைப் புறக்கணித்து அறிஞர்களின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நீதியை நிலை நாட்ட முடியாது.

அல்குர்ஆனும் அல்ஹதீஸும் மட்டுமே நீதி நிலை நாட்டப்பட வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன் தனிப்பட்ட வாழ்விலும்கூட தன்னுடைய உடல்ரீதியாக அதற்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் பாதுகாப்பது நீதியை நிலை நாட்டுவதாகும். அப்போதுதான் அவன் உடல், மனோரீதியாகத் தனக்குத்தானே அநியாயம் இழைக்காதவனாகலாம். அப்படியான பயிற்சிதான் அடுத்தவனின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு நீதியான சிந்தனைப் போக்கை அவனுள் ஏற்படுத்தும்.

இஸ்லாமிய நடைமுறைகள், வழிகாட்டல்கள், செயல்கள், வணக்கங்கள் யாவற்றிலும் நீதியின் அடையாளம் ஓங்கி பளிச்சென்று விளக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளதைத் தெளிவான சிந்தனையாளர்கள் காண்பார்கள்! உணர்வார்கள்!

நீதி நிலை நிறுத்தப்படுவதற்காகவென்றே ஏற்படுத்தப்பட்டது போன்ற கடப்பாடுகளை அன்றாட வாழ்க்கையில் இஸ்லாம் கொண்டு வந்துள்ளது.

Ø  கூட்டுத் தொழுகையின் போதுள்ள வரிசை, அதில் ஒருவர் மற்றவரைவிட விசேடப்படுத்தப்பட்டு முன்னுரிமை பெற முடியாமை.
Ø  ஏழை, பணக்காரன், ஆள்பவன், ஆளப்படுபவன், படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், அரபி, அரபியல்லாதவன், வெள்ளையன், கருப்பன் என்ற எந்தப் பாகுபாடும் காட்டப்படாமை.
Ø  ஆட்சியாளனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இடையில் நீதி செலுத்தும்போது எந்தப் பாகுபாடும் இல்லாமை.
Ø  கூட்டாகக் குற்றமிழைத்துவிட்டு அரசு தரப்புச் சாட்சியாக மாறி குற்றமற்றவன் என்ற நிலையைப் பெற இஸ்லாம் அனுமதியளிக்காமை.
Ø  குற்றமிழைத்தவன் குற்றத்தை உணர்ந்து திருந்தும்போது அல்லாஹ் நாடினால் அவனுக்கு மன்னிப்பு அல்லாஹ்வின் பக்கமேயுள்ளது.
Ø  குடும்பத்தில் ஒரு பிள்ளையைவிட மற்றொரு பிள்ளையை விசேடப்படுத்திக் கவனிக்க முடியாது என்ற விதிமுறையை ஏற்படுத்தியமை.
இவ்வாறு எந்த விடயமானாலும் நடவடிக்கையானாலும் முஸ்லிம்கள் நிலையான நீதியின் பக்கமே இருக்க வேண்டும். அது குடும்ப அங்கத்தவர்கள் சம்பந்தப் பட்டவையாயிருந்தாலும் சரியே! சம்பந்தப்பட்டவர் அதிக ஆதரவுக்கும் அன்புக்கும் உட்பட்டவராக இருந்தாலும் சரியே! விரும்பக்கூடிய ஒரு விடயமாக இருந்தாலும் சரியே! சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் சரியே!

அநியாயம் நடந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டால் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தைக்கூட விட்டு விடுவதுதான் மிகவும் நல்லது.

அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தினால் முஸ்லிம் அல்லாதோருக்குப் பாதிப்போ அல்லது அச்சுறுத்தலோ உள்ளது என்று முஸ்லிமல்லாதோர் மத்தியில் சந்தேகமுண்டாகி அதனால் இருதரப்பாருக்குமிடையில் பிரச்சினையுண்டாகும் என்ற நிலை உருவாகும் என்றிருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப் பட்டவைகள் தடுக்கப் பட்டவையாகும் – இது ‘ஷரீஆ’வின் ஒரு முக்கியமான மூலக் கொள்கைகளில் ஒன்றாகும் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான்: “(நம்பிக்கை கொண்டோரே!) நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு(பொருளை)க் கொடுக்குமாறும் (உங்களை) ஏவுகிறான், மேலும் மானக்கேடான காரியங்கள், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டவை, வரம்பு மீறுதல் ஆகியவற்றைவிட்டும் (உங்களை) அவன் விலக்குகிறான். (இவைகளை) நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்.” (ஸூரா அந்நஹ்ல் 16:90)

“நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்தபோதிலும், நீதியை நிலை நிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்கே சாட்சி கூறுபவர்களாக் இருங்கள்.” (அல்குர்ஆன் ஸூரா அந்நிஸா 4:135)

இப்படி நீதி செலுத்துதல் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இட்டிருக்கக்கூடிய கட்டளைகள் ஏராளம்.

முஸ்லிம்கள், ஆட்சியதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாத்தின் கொடியைத் தாங்கி இருக்கக் கூடியவர்கள் என்பதைக் கண்ணிமைப் பொழுதேனும் மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்துவிடாமல் இருப்பதற்கு முஸ்லிம்களுக்குள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் நம்பிக்கை பரிபூரணமாக இருக்க வேண்டும்.

அப்படி ஏகத்துவத்தின் நம்பிக்கை முழுமை பெறும்போதுதான் நம் மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவம் சந்தேகத்திற்கிடமின்றி இறுக்கம் பெறும். அந்த சகோதரத்துவத்தின் இறுக்கத்தில் நீதி நிறுவப்படும்போது நிச்சயமாக முஸ்லிம்கள் மற்றோருக்கு முன்மாதிரியான ஒரு சமூகம்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இதுவே சுட்டெரிக்கும் நரக நெருப்பிலிருந்து நம்மை மறுமையில் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ் நாடினால் ஒரு காரணியாக அமையும்.


வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!



குறிப்பு: இவ்வாக்கம் 2000 – 2002 காலக் கட்டத்தில் idhuthanislam.com என்ற இணையதளத்தில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.

No comments:

Post a Comment