அல்லாஹ்வின் பெயரால்…..
இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!
(2)
அபூ
பௌஸீமா
மற்றோர் இடத்திலே அந்த அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதைப் படித்துச்
சிந்தித்துப் பார்ப்பது நம் அனைவர் மீதும் கடமையாகும்.
“நபியே! நிச்சயமாக
நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி
வைத்திருக்கிறோம். இன்னும், அல்லாஹ்வின்பால்
–அவனின் அனுமதி கொண்டு- (ஜனங்களை) நீர் அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும்(உம்மை நாம் அனுப்பியுள்ளோம்). (ஸூரா அல்அஹ்ஸாப் 33:45-46)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்ல்ல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் விளக்காக இருந்து மனிதர்களுக்கு
வழிகாட்டுபவராக, நன்மையின்பால் அழைப்பவராக, அதே நேரத்தில் தீமைகளைவிட்டு எச்சரித்து அல்லாஹ்விடம் அஞ்சிக் கொள்ளும்படி
அனைவரையும் ஏவுபவராகவும் மற்றும் இவ்வனைத்திற்கும் சாட்சியாளராகவும்
அனுப்பியிருப்பதாகத்தானே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்! இது அந்தக் காலத்து மக்களுக்கு மட்டும் சொல்லிக் காட்டப்பட்ட ஒரு செய்தியா? அல்ல!
“உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது, தகப்பனாராக இருக்கவில்லை, எனினும், அல்லாஹ்வுடைய
தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார், அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும்
நன்கறிந்தோனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அஹ்ஸாப் 33:40)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களை அல்லாஹ் கடைசி நபியென்று மேற்கூறிய வசனத்தில்
குறிப்பிட்டிருப்பதன் மூலம் அவன் அவனுடைய படைப்பினங்களுக்கு அளிக்கும்
வாக்குறுதியின் மகத்துவத்தையும் அதன் தனித்தன்மையையும் யாரும் மறுக்கவோ அதில்
இரண்டாவது கருத்துக் கொள்ளவோ முடியாது.
அவன் காலத்துக்குக் காலம் அனுப்பி வந்த
தூதுத்துவத்திற்கு தனக்குத் தானே முத்திரையிட்டுக் கொள்கிறான். இனிமேல் அவன் ஒரு தூதரை அனுப்பப் போவதுமில்லை; பூர்த்தியாக்கிய மார்க்கத்தைப் புதுப்பிக்கப் போவதுமில்லை. உலகம் அழிக்கப்படும் நாள்வரை அந்த மார்க்கத்தின் மூலம் அவன் தந்துள்ள சட்டதிட்டங்கள், ஒழுங்குகள், பரிபூரணமானவை. திருத்தங்கள் தேவையற்றவை!
அகிலமெலாம் வியாபித்திருக்கக்கூடிய
மனிதர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அந்த உலகங்களுக்கெல்லாம் அதிபதியான அல்லாஹ்
சொல்வதைப் பாருங்கள். சிந்தியுங்கள்!
“(உங்களில்) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வையும்
அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில்
திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது.” (அல்குர் ஆன் ஸூரா
அல் அஹ்ஸாப் 33:21)
இறையச்சம் உள்ளத்தில் உள்ளவர்கள் மனித
அறிவுக்கு எட்டவில்லையே என்பதற்காக அல்லாஹ்வை, அவனது சட்டதிட்டங்களை, மறுக்கவோ சந்தேகிக்கவோ மாட்டார்கள். அவன் நமக்கெல்லாம் ஆணித்தரமாக அறிவுறுத்தியதென்ன என்பதைச் சற்று சிந்திப்போம்.
“விசுவாசங்கொண்டோரே! நீங்கள்
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய(தலை)வர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; ஆனால், யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால், அதனை
அல்லாஹ்விடமும், (அவனுடைய) தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள்; (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவர்களாக
இருந்தால், இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும்.” (அல்குர்ஆன் அந்நிஸா 4:59)
அல்லாஹ்வையும் அவன் தூதரையும்
பின்பற்றும்படி அல்லாஹ் அல்குர்ஆனிலே பல இடங்களில் திரும்பத் திரும்ப
கட்டளையிடுகின்றான். (பார்க்க: ஸூரா
ஆலஇம்ரான் 3:32, 132 ஸூரா அல்மாஇதா 5:92 அல்அன்ஃபால் 8:1, 20, 46 ஸூரா அந்நூர் 24:51, 54 ஸூரா முஹம்மத் 47:33 ஸூரா அல்முஜாதிலா 58:13 ஸூரா அத்தகாபுன் 64:12)
அதிகாரமுடையோருக்குக் கீழ்ப்படியும்படி
கூறிவிட்டுத் தொடர்ந்து மீண்டும் பிணங்கிக் கொள்ளும் இடங்களில் அல்லாஹ்விடமும்
அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும் திரும்பி அப்பிணக்குகளைத்
தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிடுகின்றான்.
இதன் மூலம் அவன் சொல்வது, அல்லாஹ்வின் கட்டளையும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வழிகாட்டலும் மட்டும்தான் பின்பற்றக் கூடியவை; பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு அங்கேதான் இருக்கின்றது என்பதை அறிவுரையாகவும்
கட்டளையாகவும் அறிவிக்கிறான்.
அத்தோடு நிறுத்தி விடாமல் அப்படி
அல்லாஹ்வுக்கும் அவன் தூதர் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும்
கீழ்ப்படிவதில் உள்ள பலனையும் கூடவே சொல்லிக்காட்டுகின்ற அழகையும் நளினத்தையும்
சிந்தித்தால் அல்லாஹ் தனது சிறப்புப் படைப்பான மனிதன் மீது எவ்வளவு அக்கறை
கொண்டுள்ளான் என்பதை விளங்க முடியும். மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக
இருந்தால் என்ற நிபந்தனையையும் குறிப்பிடுவதன் மூலம்
விசுவாசியின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறான்.
ஆகவே, நாம் இவ்வுலகிலே போர்முனையில் தோல்வி மேல் தோல்வியை எதிர்கொள்ளும்போது அந்த
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த போர்
ஒழுங்குகளைப் பற்றிய வழிகாட்டல்களை மறந்து விடுகிறோம். சாதாரண மனிதவுணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். அப்படி உணர்வுக்கு ஆட்படுகின்றமையால் எதையும் செய்யத் துணிந்து விடுகிறோம். இஸ்லாமிய வழிகாட்டல்கள் இன்றைய காலக்கட்டத்திற்குச் செல்லுபடியாகுமா என்ற
சந்தேகம், ஷைத்தானின் ஊசலாட்டம், மனதிலே வந்து விடுகிறது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
குறிப்பு: இத்தொடர் 2000-2002 காலப்பகுதியில் idhuthanislam.com என்ற இணையதளத்தில் பிரசுரமானது.
No comments:
Post a Comment