அல்லாஹ்வின் பெயரால்....
லைலத்துல் கத்ர் எப்போது வரும்?
தஃலீம் ஓர் ஆய்வு (1)
-
அபூ பௌஸீமா –
ரமளான் எப்போதோ முடிந்து விட்டது. ஒவ்வோர் ஆண்டும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இவ்வாண்டு ரமளானைச் சந்தித்தவர்கள் மறு ஆண்டு சந்திப்பார்களா என்பது அல்லாஹ் மட்டுமே அறிவான்.
லைலத்துல் கத்ரை (கண்ணியமிக்க இரவை)த் தேடி ரமளான் மாதத்திலே ஒவ்வொரு காலக் கட்டத்தில் முயற்சி செய்தவர்கள் ஏராளம்.
சிலர் ரமளான் மாதம் முழுவதும் முயற்சிக்கிறார்கள். சிலர் முதற்பத்திலும் மற்றும் சிலர் நடுப்பத்திலும் இன்னும் சிலர் கடைசிப்பத்திலும் முயற்சிக்கிறார்கள். மேலும் சிலர் கடைசிப்பத்தில் ஒற்றைப்படவுள்ள இரவுகளில் முயற்சிக்கிறார்கள்.
பலர் 27ம் இரவுதான் லைலத்துல் கத்ர் என்று அடித்துச் சொல்லி அந்த இரவைக் கொண்டாடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஐயைகோ! என்று கைசேதப் படுபவர்களும் ஏராளம் இருக்கிறார்கள்.
இவர்கள் அடுத்த ரமளான் வரும்வரை காத்திருப்போம் என்று எண்ணிக் கொண்டு தம் அன்றாட வாழ்க்கையை எந்தவிதமான இழப்புக்கும் தாம் ஆளாகாதவர்கள்போல் அசாதாரணமாக இருக்கிறார்கள்.
இவ்வாறானவர்களுக்கு ஓர் ஆறுதலான தகவல் இருக்கவே இருக்கிறது. இத்தகவல் ரமளானில் மட்டுமல்ல ஏனைய மாதங்களிலும் லைலத்துல் கத்ர் வருகிறது என்று கூறுகிறது. இக்கருத்தை முன்வைத்திருப்பவர் இன்று தப்லீஃ ஜமாஅத்தினரின் காலம் சென்ற ஹஸ்ரத் முஹம்மத் ஜக்கரிய்யா சாஹிப் அவர்களாவார்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு நாளும் தவறாமல் வாசிக்கப்படும் தஃலீம் கிதாபின் அமல்களின் சிறப்புகள் என்ற பகுதியில் இத்தகவலைக் காணலாம்.
அந்தப் புத்தகத்தின் என்னிடம் இருக்கும் பிரதியின் 372ம் பக்கத்தில் ‘லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டது’ என்ற தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்தால் ரமளானில் லைலத்துல் கத்ருக்காக முயற்சிக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை!
அத்தகவலை இங்கு வாசகர்களின் வசதிக்காக மீள்பதிவு செய்கின்றேன்:
“ஷைகுல் ஆரிபீன் முஹ்யித்தீன் இப்னுல்
அரபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளதாவது: ‘ஆண்டு முழுவதிலும் லைலத்துல் கத்ர் மாறி மாறி வருகிறது என்பதுதான் என்னிடம்
மிகச் சரியான சொல்லாகும். ஏனெனில், நான் இரண்டு தடவை ஷஃபான் மாதத்தில் அதனைக் கண்டிருக்கிறேன். ஒரு தடவை பிறை பதினைந்தில், மற்றொரு தடவை பிறை பத்தொன்பதில், இன்னும் இரண்டு தடவை ரமலான் மாதத்தின் நடுப்பத்தில் பிறை பதின்மூன்றிலும், பிறை பதினெட்டிலும் கண்டிருக்கிறேன். இன்னும் ரமலான்
மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான எல்லா இரவுகளிலும் கண்டிருக்கிறேன். ஆகையால் லைலத்துல் கத்ரு ஆண்டு முழுவதிலுமுள்ள இரவுகளில் சுற்றிச் சுற்றி
வருகிறது என்பதுதான் என்னிடம் உறுதியான சொல்லாகும். ஆனால், ரமலான் மாதத்தில் அது அதிகமாகப்
பெற்றுக் கொள்ளப்படுகிறது’ என்று கூறியுள்ளார்கள்.
ஹஜ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளதாவது: ‘லைலத்துல் கத்ரு ஆண்டில் இரண்டு தடவை ஏற்படுகிறது. முதலாவது எந்த இரவில் அல்லாஹுதஆலாவுடைய சட்டங்கள் பூமிக்கு இறங்குகின்றனவோ
அந்த இரவாகும். இன்னும் அதே இரவில்தான் குர்ஆன் ஷரிப்
லவ்ஹுல் மஹ்பூஃள் பலகையிலிருந்து உலகிற்கு இறங்கியது. அவ்விரவு ரமலான் மாதத்தில் மட்டும் வருவதில்லை. ஆண்டு முழுவதிலும் மாறி மாறிச் சுற்றி வருகிறது. ஆனால், எந்த ஆண்டில் குர்ஆன் ஷரீப் உலகிற்கு
இறங்கியதோ அந்த ஆண்டு ரமலான் மாதத்தில் அது வந்தது. மேலும், ரமலான் மாதத்தில்தான் அது அதிகமாக
ஏற்படுகிறது.”
ஆகவே, ரமளான் மாதத்திலே லைலத்துல் கத்ருக்காக முயற்சி செய்யாதவர்கள் அதற்காகக்
கவலைப்படத் தேவையில்லை!
கவலைப்படத் தேவையில்லாதது மட்டுமல்ல, அவர்கள் எமது பள்ளி நிருவாகிகளுக்குப்
பெரிதும் கடமைப் பட்டுள்ளார்கள். இந்தப் புத்தகத்தை – மன்னிக்கவும் ‘கிதாபை’ - பள்ளிகளிலே வாசிக்க ஏற்பாடு செய்திருக்கின்றமைக்காக! இல்லாவிட்டால் இந்தப் பெரும் பாக்கியங்களை இழந்திருப்போமே!
நம் முன்னோர்கள், அவர்களின் முன்னோர்கள், தப்உத் தாபியீன்கள், தாபியீன்கள், ஸஹாபாக்கள், ஏன்,
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட
காட்டித் தராத ஒரு மகத்துவமிக்க இரவை இப்னுல் அரபீ அவர்களும், ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்! இந்த விபரத்தை முஹம்மத் ஜக்கரிய்யா ஹஜ்ரத் இந்தக் கிதாபில் பதிந்துள்ளார்.
இந்தக் கிதாபு பலருக்கு மிகவும் புனிதமான கிதாபாகும்! அல்குர்ஆனை ஓதி அதற்கு யாரும் பள்ளியில் விளக்கம் கொடுக்க முற்பட்டால் அவர்
தாறுமாறாக விமர்சிக்கப்பட்டு விரட்டியடிக்கப் படுவது எல்லோரும் அறிந்த ஓர் உண்மை!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே
அந்த கண்ணியமிக்க இரவு சரியாக இதுதான் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாமல்
போனாலும் இந்தப் பெரியார்கள் மூலம் அந்த இரவை அல்லாஹ் காட்டித்தந்து விட்டான். அவன் மகா கிருபையாளன்! அவனுடைய இறுதித் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அறியத்தர மறந்து போன ஒரு விடயத்தை அவனுடைய
இந்த இரு ஷைகுகள் ஊடாக அறியத்தந்து விட்டான்!
ஒரு வேளை, அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் மறந்து விட்டார்கள், அதனால் இந்த ஷைகுமார்களக் கொண்டு அறிவித்து அவனுடைய தூதரைக்
காப்பாற்றியிருக்கவும் கூடும்! அதன் முழு விபரமும்
முஹம்மத் ஜக்கரிய்யா ஹஜ்ரத்துக்கே வெளிச்சம்!
அல்லாஹ்வின் விசுவாசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது
என்பதை உணர வேண்டும். கொஞ்சம் கண்ணிமைத்தால்
அல்லாஹ்வின் பெயரை வைத்தே வழிகெடுத்துவிட எத்தனை ஷைகுகள் கிளம்பியிருக்கிறார்கள்
பார்த்தீர்களா?
இவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மீது சுமத்தும் இப்பாரதூரமான குற்றச் சாட்டை இன்று முஸ்லிம் சமூகம் ஏன் காணாமல்
இருக்கிறது?
கண்மூடிப் பின்பற்றும் சம்பிரதாயமும், உடையைப் பார்த்து கௌரவம் கொடுக்கும் மனோ நிலையும் தான் இதற்குக் காரணம். அல்குர்ஆனைப் படிப்பதை விடுத்து அதைப் பாராயணம் செய்வதில் மட்டும்
ஈடுபடுவதனால்தான் இந்த அவலம்! இதனால்தான் இப்படிப்பட்ட
சல்மான் ருஷ்டிகள் இன்று பள்ளிகளிலே முன்வரிசைகளிலே வலம் வருகிறார்கள். இந்த சல்மான் ருஷ்டிகள்தான் இன்று பள்ளி நிருவாக சபைகளிலே தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், அங்கத்தவர்கள்!
முஸ்லிம்கள் ஏன் இன்று அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அரபிப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களாக
இருப்பதனால்தான்! இஸ்லாமிய அகீதா இல்லை; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே குறை காண்கிறார்கள். இனி எப்படி கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்?
இப்னுல் அரபீ, ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிப் ஆகியோருக்குத் தெரிந்த லைலத்துல் கத்ர்
உலகத்திற்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்டதாக அல்லாஹ் அறிவித்த அந்த
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியவில்லை! அல்லாஹ்வும் சொல்லிக் கொடுக்கவுமில்லை! அப்படிச் சொல்லிக் கொடுத்தால் இந்த இரண்டு ஷைகுமார்களை உருவாக்க அல்லாஹ்வுக்கு
வேறு காரணம் தேட வேண்டி வந்திருக்குமே!!!
இந்தக் கிதாபுதான்
இன்று பள்ளிகளிலே மக்களுக்கு மார்க்கமாகச் சொல்லிக் கொடுக்க அனுமதியளிக்கப்பட்ட
கிதாபு! வீடுவீடாக அன்று முஹியத்தீன் மாலை வாசித்தது போல் வாசிப்பதற்கு ஊக்கமளிக்கும்
கிதாபு!
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக
நாம் (நம் வேதமாகிய) இதனை கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் எனும்) இரவில்
இறக்கி வைத்தோம். (நபியே!
அந்த)
கண்ணியமிக்க இரவு என்னவென்பதுபற்றி உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும்.
அதில் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும்
தங்கள் இரட்சகனின் கட்டளைப்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமித்தம் இறங்குகின்றனர்.
(அது) சாந்தியா(ன இரவா)கும்; அ(வ்விரவான)து அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.” (ஸூரா அல்கத்ர் 97:1-5)
லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அவனுடைய வேதத்தில்
சொல்லிக் காட்டினான். அதன் மகத்துவத்தைப்பற்றி
விளக்கினான்.
அந்த இரவு எப்போது வரும் என்பது பற்றி அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட அந்த இரவைப்பற்றி அல்லாஹ் அறிவித்தபின் அது எந்தக் காலத்தில்
வரும் என்பதுபற்றி தெளிவாக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான சில ஹதீஸ்களைப் பார்ப்போம்:
“நபித்தோழர்களில்
சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு
நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல்
கத்ர் காட்டப்பட்டது; அப்போது, நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்கள்
கனவுகள் கடைசி ஏழு நாட்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட
விடயத்தில்) ஒத்து
அமைந்திருப்பதை நான் காண்கிறேன்! ஆகவே, அதைத் தேடுபவர், (ரமளானின்) கடைசி ஏழு
நாட்களில் அதைத் தேடட்டும்!’ என்று
கூறினார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு
அன்ஹு.
நூல்: புகாரி)
மற்றுமொரு ஹதீஸில் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத்
தேடும்படி கூறப்பட்டுள்ளது: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் கடைசிப்
பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத்
தேடுங்கள்,’ எனக் கூறுவார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. நூல்:
புகாரி)
உபாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின்படி
ரமளானின் கடைசிப் பத்தின் ஒற்றைப்பட உள்ள இரவுகளில் தேடும்படி கூறப்பட்டுள்ளது. இதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அறிவித்துள்ளார்கள்: “ரமளானின் கடைசிப்
பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்,” என்று அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்:
புகாரி)
இப்படி லைலத்துல் கத்ர் பற்றிய அறிவிப்புகள் இன்னும்
இருக்கின்றன.
அவை அனைத்திலுமே லைலத்துல் கத்ரை ரமளானில்தான் தேட வேண்டும்
என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க, மேற்குறிப்பிட்ட கிதாபில் அதை வேறு மாதங்களிலும் அடைய முடியும், அடைந்திருக்கிறேன் என்று குறிப்பிடுவது இந்த ஹதீஸ்களை மறுப்பதாகத்தான்
இருக்கும்!
அல்லாஹ் தன் திருக்குர்ஆனிலே விடுத்திருக்கும் சவாலை
இவர்கள் நடை முறைப்படுத்துவதற்குச் சிறிது சிறிதாக வழி அமைக்கிறார்கள் என்றுதான்
எண்ணத் தோன்றுகிறது. ஒன்றா இரண்டா இப்படிப்பட்ட
எத்தனையோ கப்ஸாக்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
ஹதீஸ்களுக்கு முரணான கதைகளைக் கட்டி ஷைகுகளை முன்வைத்து
பித்ஆக்களை உருவாக்கி எதிர்காலத்திலே குர்ஆனையே மாற்றிவிட இவர்கள் முயற்சி
செய்கிறார்கள் என்பதுதான் இவற்றின் முன்னறிவிப்பாக இருக்குமோ என்று எண்ணத்
தோன்றுகின்றது.
ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து முதலில் முஸ்லிம்களைத்
தூரப்படுத்த வேண்டும்; அப்படியானால்தான்
குர்ஆனிலே கைவைக்க முடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்! நீண்ட காலமாக இந்தக் கிதாபு மக்களிடையே தனது விளையாட்டைக் காட்டியிருக்கிறது! இதன் தாக்கத்திற்கு மத்தியிலேதான் இன்று குர்ஆனின் சில ஸூராக்களோடு மேலும் பல
தூஆக்களோடு கூடிய மன்ஸில்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆகவே, இன்று முஸ்லிம்கள்
விழிப்பாயிருக்க வேண்டும். நல்ல செயல்கள் என்ற
பொர்வையில்தான் நம்மைக் கெடுக்க ஷைத்தான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றான். அவனுடைய பெரும் பங்குதாரர்கள்தான் யஹூதி நஸாராக்கள். அவர்களின் கைப்பிடிக்குள்ளாகி விடாமலிருக்க நாம் கவனமெடுத்து முயற்சிக்க
வேண்டும்.
அப்படி நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் நம்மை மாற்ற
மாட்டான்.
ஜின்கள் மற்றும் மனிதர்களில் இருக்கக்கூடிய ஷைத்தான்களின்
தீங்குகளை விட்டும் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment