அல்லாஹ்வின்
திருப்பெயரால்..
இறையச்சத்தை (தக்வா) அடைவதெவ்வாறு?
-
அபூ பௌஸீமா –
அஸ்ஸலாமு
அலைக்கும்!
இறையச்சம்
என்றால் என்ன என்பது பற்றியே இன்று விளக்கமாகச் சொல்லியும் அதை விளங்கிக்
கொள்வதில் தெளிவற்ற நிலையில் இன்றைய பெரும்பாலான முஸ்லிம்கள் உள்ளனர்.
அல்-குர்ஆன் சொல்லக்கூடிய ஒரு விடயத்தை, ஒருவர் விளக்கமாகச் சொல்வதற்காக அந்த வசனத்தை,
அல்லாஹ்வுடைய கட்டளையைப் பின்பற்றி அவனுடைய பண்பு (ஸிஃபத்து)களில் எதைப்பற்றியும் கேள்வி கேட்காமல் அதை அப்படியே ஏற்று,
ஆய்வு செய்யப் புகுந்தால் அப்படிப் பட்டவரை மிக மோசமாக
விமர்சிப்பதற்கு சிலர் முன்வந்து விடுகிறார்கள்.
அதன் பலனாகத்தான் இன்று நம்மிடையே அறிஞர்கள் பலர்
ஸஹாபாக்கள் சொன்னவற்றைவிட இமாம்கள் சொன்னவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
வழிகாட்டியிருக்கிறார்களா என்பதைவிட ஸஹாபாக்களின் வழிகாட்டலுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள்.
அதனால்தான் நமது அறிஞர்களை உருவாக்கக்கூடிய மத்ரஸாக்கள்கூட “நபிவழித் தொழுகை”க்குப் பதிலாக “ஷாஃபி தொழுகை”யையும் “ஹனஃபி தொழுகை”யையும் பாடமாக்கியுள்ளார்கள்.
நபிவழித் தொழுகையைப் பற்றிப் பேசினால் அவர்களுக்குப்
பொல்லாத கோபம் வரும்.
இது இப்படியிருக்க,
இன்னும் சிலர் காலையிலிருந்து மாலை வரை
நோன்பிருக்கின்றார்கள். ஆனால், தத்தமது மனைவியையும் மக்களையும் மோசமான வார்த்தைகளால் தூசித்துக்
கொண்டிருக்கிறார்கள்; மற்றவர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள்;
வாய் திறந்தால் பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்;
பொய்ச் சத்தியம் செய்கிறார்கள்;
முறைகேடான தொடர்புகளை இன்பமாக நேசிக்கிறார்கள்;
குழந்தைகளுக்கான தேவைகளை மறுக்கிறார்கள் –
அவர்களைக் கவனிக்காமல்,
அன்பு செலுத்தாமல்,
நேர்வழி காட்டாமல் –
இப்படி இன்னோரன்ன விடயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“தக்வா” – இறையச்சத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு வசனம் சிந்திக்கும் மக்களுக்கு
ஒரு படிப்பினையாகும். இறையச்சமுள்ளவர்களாக ஆகுங்கள் என்று வெறுமனே கட்டளையிடாமல் அதை அடைவதற்கான
வழிமுறையையும் அல்லாஹ் நமக்குக் காட்டுகிறான்:
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது
கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு
கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்குர்ஆன் ஸூரா அல்பகரா 2:183)
நோன்பின் நோக்கம் இப்படிப்பட்டவர்களால் அடையப்படுகிறதா
என்றால் அது சந்தேகத்திற்குரியதுதான்.
அல்லாஹ்விடமுள்ள அச்சம் உள்ளத்தில் இருந்து நோன்பு நோற்கும்
யாருமே மேற்கூறிய எதையுமே செய்ய முற்பட மாட்டார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அல்லாஹ் எங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அவனுடைய
கட்டளைக்குப் பணிந்த சிறப்பான அந்தஸ்திலான ஆன்மிக வளர்ச்சியைத்தான்.
அதன் மூலம்தான், ஒரு மனிதன் தன்னைப் படைத்த இரட்சகனின் நோக்கத்தைப் பூர்த்தி செய்தவனாக ஆக
முடியும்.
அப்பழுக்கற்ற சிறந்த இபாதா-அமல்கள் மூலம்தான் அப்படிப்பட்ட ஆன்மிகவாதியாக ஒருவன் ஆக முடியும்.
நோன்பு மட்டுமல்ல, அன்றாடத் தொழுகை, ஸகாத், ஹஜ் ஆகிய ஒவ்வொரு கடமையிலும் அதைத்தான் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
சிந்திக்க வேண்டிய ஓர் அல்குர்ஆன் வசனத்தை இங்கு
குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.
படிப்பினை பெறுபவர்களுக்கு இது போதுமானது:
“(ஆகவே, விசுவாசிகளே!) உங்கள் இரட்சகனை மிக்க பணிவாகவும், (தாழ்ந்த குரலில்) மெதுவாகவும், (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப் பிரார்த்தனை செய்து)
நீங்கள் அழையுங்கள், நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க
மாட்டான்.”
(ஸூரா அல் அஃராஃப் 7:55)
“தக்வா” என்பது விசுவாசத்துடன் அல்லாஹ்விடம் தன்னைப் பரிபூரணமாகச் சமர்ப்பித்தலாகும்.
எவனிடம் நாம் நம்மைப் பரிபூரணமாகச் சமர்ப்பிக்கின்றோமோ
அவனிடமேதான் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்.
அப்படி நமது தேவைகளை அவனிடம் மட்டுமே கேட்பதென்பது
இறையச்சம் உடையவர்களல்லாது மற்றவருக்கு முடியாது.
தக்வாவின் அடிப்படையே ஓரிறைக் கொள்கைதான்.
அதைத்தான் மேற்கூறிய வசனத்திலும்கூட அல்லாஹ்
சிந்திப்பவர்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் காட்டுகிறான்.
தனக்குத் தேவையானவற்றைக்கூடப் பகிரங்கப்படுத்திக் கொண்டு
சப்தமிட்டு ஓலமிட்டுக் கேட்பதென்பது இறையச்சமுடையவர்கள் செய்யக் கூடியதல்ல.
அதை மேலும் விரிவாகச் சொல்வதானால் அது இரண்டு
விடயங்களுக்கிடையிலான ஒரு திரையாகும். ஓர் அடியான் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கமைய அவனுடைய கட்டளைகளை
நிறைவேற்றி அவன் சொன்னபடி நடந்து, அவன் தடுத்தவைகளைத் தவிர்ந்து, அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடக்கும்போது அவனுக்கும் அவனைப் படைத்த
அல்லாஹ்வின் தண்டனைகளுக்குமிடையில் அது ஒரு திரையாக இருக்கும்.
அதுதான் “தக்வா”.
சுருக்கமாகச் சொன்னால்,
அல்லாஹ்விடமே அனைத்தையும் சமர்ப்பித்தல்தான் இறையச்சம்!
மேலும்,
அல்லாஹ்வுக்கு அஞ்சுவது என்பதன் முதற்படி – ஒவ்வொரு செயலையும்
செய்யும் போது ஏற்படும் தூய்மையான எண்ணம்.
அந்த எண்ணம் எப்படிப்பட்டது என்றால் எந்தச் செயலாயிருந்தாலும்
அந்தச் செயல் நம்மைப் படைத்து நமக்கு உணவளித்துப் பரிபாலித்து நமக்கு நல்வழி
காட்டி இரட்சிக்கக் கூடிய அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தூய
எண்ணமில்லாமல் “தக்வா”வை எவராலும் அடைய
முடியாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே
அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான்
கிடைக்கிறது. ஒருவர் ஒரு இடத்தை விட்டுத் துறந்து செல்தல்
உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை
நோக்கமாகக் கொண்டிருந்தால் அவரது துறந்து செல்தல் எதை நோக்கமாகக் கொண்டிருந்ததோ
அதுவாகவே அமையும்.”
(அறிவிப்பவர்:
உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு. நூல்:
ஸஹீஹ் புகாரி)
நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டு
இருக்கின்றானோ அந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இப்படி எண்ணத்தின்
அடிப்படையில்தான் செயலின் பலன் உள்ளது என்று சொல்லியிருக்கின்றார்கள் என்றால்
அதுதான் “தக்வா”வுக்கான ஆரம்பப்
படி.
இந்த எண்ணத் தூய்மையைப்பற்றி அல்லாஹ் அல்குர்ஆனிலே
மனிதனுக்குச் சொல்லிக் காட்டுகின்றான்: “(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) அவற்றின்
மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைந்து விடுவதில்லை, இன்னும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்…” (ஸூரா
அல்ஹஜ் 22:37)
அறிஞர்கள் சிலரது கூற்றுப்படி, தக்வா என்பது
அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனது கட்டளைப்படி நடந்து அவன் தடுத்தவற்றிலிருந்து தவிர்ந்து
வாழ்வதாகும்.
உண்மை விசுவாசத்துடன் ஒன்றறக் கலந்த அறிவின் மூலம்தான்
தக்வாவை அடைய முடியும்.
நாங்கள் அறிவின்றி இருந்தால் உண்மையாக அல்லாஹ்விடம் பயப்படுதல்
என்பது பூஜ்யம்தான்.
அறிவின்றி என்று சொல்லும்போது சிலர் அதற்கு
எப்படியெப்படியெல்லாமோ விளக்கம் கொடுக்க முற்படலாம். இங்கே
பள்ளிக்கூடங்களில் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்குள் இருந்து கொண்டு சான்றிதழ்
பெற்று நான் அறிவாளி, அறிஞன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பற்றிக்
குறிப்பிட நான் விரும்பவில்லை.
அல்லாஹ்வின் ஏகத்துவத்தை சந்தேகத்திற்கு
இடமின்றி அவனுக்கே விசேடமான அவனுடைய பண்புகளைச் சரியாக அறிந்து
செயலாற்றுபவர்களைத்தான் அறிவுள்ளவர் என்று குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதில் நிச்சயமாக எழுதப் படிக்கத்
தெரியாதவர்கள்கூட இடம் பெறுவார்கள். அவர்கள் கண்மூடிப்
பின்பற்றுபவர்களல்ல, பகுத்தறிவுக் கண்ணைத் திறந்திருப்பவர்கள்.
அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் எங்களுக்கு
அவனை அஞ்சும்படி கூறியிருக்கின்றான். அப்படி அவன் சொல்லும்
போது,
அறிவின்றேல் எப்படி அல்லாஹ்வுக்கு அஞ்ச முடியும்? அவனைப்பற்றித் தெரியாது! அவன் கட்டளைகளைத் தெரியாது! அப்படியிருக்க அஞ்சுதல் என்பது வெறும் மாயையாகத்தான் இருக்க முடியும். அல்லாஹ்வை விட்டுவிட்டு சமூகத்திற்கு மற்றவருக்கு சுற்றத்தாருக்கு
அஞ்சுவதாகத்தான் அது இருக்கும்.
அவனை அஞ்சி அவனுடைய சட்டங்களை அமல்
படுத்துவதற்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். கட்டுப்பட்டவர்கள்
கட்டளைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றுவதற்கு
அறிவு வேண்டும். அறிவைச் சிலருக்கு மட்டும் காவு கொடுத்துவிட்டு
அவர்கள் எதைச் சொன்னாலும் பின்பற்றுவதென்பது நம்மைப் படைத்த அல்லாஹ்வுக்கு
அஞ்சுவதாக ஆக முடியாது.
அல்லாஹ் அல்குர்ஆனிலே நமக்கு நல்வழி காட்டி
எச்சரிக்கை செய்வதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
“விசுவாசிகளே! (ஃபாஸிக் எனும்) தீயவன்
உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் (அதை உடனே
அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற)
ஒரு சமூகத்தார்க்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதிருப்பதற்காக (அதன் உண்மையை
அறிவதற்காக அதனைத் தீர்க்க விசாரணை செய்து)
தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், (அவ்வாறு
நீங்கள் செய்யவில்லையென்றால்) பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கைசேதப்படக் கூடியவர்களாக ஆகி
விடுவீர்கள்.” (ஸூரா அல்ஹுஜுராத் 49:8)
இன்னின்னது அல்லாஹ்விடம் இருந்து வந்ததுதான்
என்று பரிபூரணமாக நம்பி அவற்றுக்குக் கீழ்ப்படிவதுதான் தக்வா. இப்படியிருக்க, இன்று முஸ்லிம்கள் மத்தியிலே எப்படிப்பட்ட
சட்டதிட்டங்கள் இஸ்லாத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ளன, நல்லமல்கள் என்ற பெயரிலே விதவிதமான சம்பிரதாயங்கள், சடங்குகள்
புகுத்தப்பட்டுள்ளன.
இப்படிப் புகுத்தப்பட்டுள்ளவற்றை மேலே அல்லாஹ்
தெளிவாக்கியுள்ள வழிமுறைக்கு முரணாக எந்தவிதமான கேள்வி பார்வைகள் இல்லாமல்
பின்பற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது.
உலமாக்கள் என்று தம்மை அறிமுகப்படுத்தி தாமே
குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் விளக்கமளிக்கத் தகுதியானவர்கள் என்று தம்மை ஆசாரிகளாக
ஆக்கிக் கொண்டுள்ள சிலர் இன்று இஸ்லாமியர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து
வழிகெடுத்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். தக்வா
உள்ளவர்கள் இதை நிச்சயமாகச் செய்ய மாட்டார்கள்.
பின்பற்றுபவர்கள்கூட தாம் கேட்டவற்றைச் சரியா
பிழையா என்பதை அறிய முற்படாமல் பின்பற்றுவதன் மூலம் தம்மைத் தாமே
வழிகேட்டிலாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தக்வாவுடையவர்களாக
ஆவதற்கு முக்கியமாகத் தேவை சந்தேகங்களைக் களைந்து கொள்வதுதான்.
தாம் கேட்டவை பிசகறத் தெளிவது கேட்டவர்
பொறுப்பென்று உணர்ந்து அதற்கான முயற்சிகளைச் செய்வதும் தக்வாவில் அடங்கும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் மற்றுமோரிடத்தில்
கூறுகிறான்: “(நபியே!) நீர் கூறும்: மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்தான்.” (ஸூரா அல்ஹஜ் 22:49)
அல்லாஹ், அவனது
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இப்படிச் சொல்லும்படி கூறுகிறானென்றால்
அதில் உள்ள பெரிய வழிகாட்டலும் தத்துவமும் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் இன்னும் பல இடங்களில் தெளிவாகச் சொல்லுகிறான், அவனுடைய
கட்டளைகளை ஏற்று அதன்படி நடக்கும்படியும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களைப் பின்பற்றும்படியும்! அப்படிச் செய்கிறவர்கள்தான் வெற்றியாளர்கள்.
ஆகவே, தினம் தினம் திருப்பித்
திருப்பி அல்குர்ஆனையும் ஹதீஸையும் படித்து ஆய்ந்து பிசகறப் பின்பற்றுவதன் மூலமே
தக்வாவை அடைய முடியும். அப்பழுக்கில்லாமல் எமது உள்ளங்களிலே தக்வா
அமைந்து விடுமானால் அதுதான் நாம் நரகத்திலிருந்து விடுதலை பெற்று சுவர்க்கத்தை
அடைய வழியாக அமையும்.
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு: இதுவும் 2000ம் ஆண்டில் நான் எழுதி அச்சிட்டு அக்குறணையில்
விநியோகித்த ஒரு துண்டுப்பிரசுரம். இப்பதிவு சில திருத்தங்களுடன். இதுவும் அந்தக்
காலக் கட்டத்தில் idhuthanislam.com என்ற இணையதளத்தில் பிரசுரமானது.
No comments:
Post a Comment