Saturday, November 22, 2014

நரக விடுதலை பெறக் குறுக்குவழி!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நரக விடுதலை பெறக் குறுக்குவழி!
தஃலீம் ஓர் ஆய்வு! (2)

-    அபூ பௌஸீமா -

கிழக்காசிய நாடுகளிலுள்ள மிக அதிகமான பள்ளிகளில் அல்குர்ஆனை விட மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாசிக்கப்படும் கிதாபின் மற்றுமொரு கதையை இன்று பார்ப்போம்.

இன்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள செய்தி அமல்களின் சிறப்புகள் என்ற கிதாபில் திக்ரின் சிறப்புகள் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் 17 ஆகும். அதன் உபதலைப்பு: இந்த உம்மத்தினரின் பெருமை! இது என்னிடமுள்ள பிரதியில் 626-628ம் பக்கங்களில் காணப்படுகிறது. இங்கு நான் எடுத்தாளும் பகுதி பக்கம் 627ல் கடைசிப்பத்தியிலிருந்து என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“ஷைகு அபூயஜீத் குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற பெரியார் கூறுவதாவது: ஒருவர் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’வை
எழுபதினாயிரம் தடவை ஓதினால் அவருக்கு நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்” என்று நான் கேள்விப்பட்டு என் மனைவிக்காக எழுபதினாயிரம் தடவை ஓதி ஹதியாச் செய்தேன். எனக்காகவும் அதுபொன்று பல தொகைகளை ஓதி மறுமைக்காகச் சேமித்து வைத்துக் கொண்டேன்.

இந்நிலையில் எங்களுக்கு மத்தியில் வாலிபர் ஒருவர் இருந்து வந்தார். அவர் ‘கஷ்ப்’ (ஞான திருஷ்டி) உள்ளவர் என்பதாகவும், சுவர்க்கம், நரகம் சம்பந்தமான காட்சிகளும் அவருக்குத் தெரிகின்றன எனபதாகவும் அவரைப் பற்றிப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. அது பற்றி எனக்குச் சந்தேகம் இருந்து வந்தது. ஒரு நாள் அந்த வாலிபர் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகச் சப்தமிட்டு அலறினார், அவருக்கு மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது. “என்னுடைய தாயார் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறார், அக்காட்சி எனக்குத் தெரிகிறது” என்று கூறினார்.

குர்தூபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். “அவ்வாலிபருடைய திடுக்கத்தை நான் பார்த்தபோது, நான் ஓதி வைத்திருந்த கலிமாவிலிருந்து ஒரு எழுபதினாயிரத்தை அவருடைய தாயாருக்கு ஹதியாச் செய்துவிட்டால், எழுபதினாயிரம் தடவை கலிமாவை ஓதுவதினால் நரக விடுதலை கிடைக்கும் என்ற விஷயத்தின் உண்மையும், அவ்வாலிபருடைய கஷ்பு சம்பந்தமான சந்தேக நிவர்த்தியும் தெரிய வரும் என்று எண்ணி, அவ்வாறே ஹதியாச் செய்தேன். நான் ஹதியாச் செய்ததை எவரிடமும் கூறவில்லை; அது விஷயம் அல்லாஹ்வுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாலிபர் உடனே, “சிறிய தந்தையவர்களே! இப்பொழுது என் தாயார் நரக வேதனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்” என்று கூறினார். இச்சம்பவத்தினால் எனக்கு இரண்டுவிதப் பலன்கள் கிடைத்தன. முதலாவது, எழுபதினாயிரம் தடவை கலிமா ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என்று நான் கேள்விப்பட்டிருந்ததை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டாவது, அவ்வாலிபரின் கஷ்பு சம்பந்தமான உறுதியும் ஏற்பட்டது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை சம்பவங்கள் இந்த உம்மத்தில் நடைபெற்று இருக்கின்றனவோ யாரறிவார்.”

பராபரமே!

பள்ளிகளுள் இன்று அதிகமாக வாசிக்கப்படும் இந்தக் கிதாபுதான் மார்க்கத்தை அறிந்து கொள்ள மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஜக்கரிய்யா ஸாஹிப் இந்த மக்களை வழிகெடுப்பதற்கு இவ்வாறான கதைகளை இமாம்களின் பெயரால் சந்தைப் படுத்துகிறார். இந்தக் கதையை அபூ யஜீத் குர்தூபி சொன்னார் என்று அவர் மீது ஓர் அபாண்டத்தைச் சுமத்தி விட்டார்.

சொல்லப்பட்ட சம்பவம் பற்றிச் சிந்தித்தால் அதில் உள்ள அபத்தங்கள் தெளிவாகும். படித்தவர்கள், சிந்தனையாளர்கள் கூட இன்று இப்படிப்பட்ட போலிகளுக்குப் பின்னால் வலம் வருவதைப் பார்க்கிறோம்! அப்படிப்பட்டவர்களைக் காட்டி இந்தப் போலிகள் புத்தி குறைந்தவர்களை வழிகெடுக்கிறார்கள்! இதில் வேடிக்கை என்னவென்றால், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், போதனாசிரியர்கள், இப்படி சமூகத்தில் நற்கல்வி பெற்றவர்கள்கூட முட்டுக்கால் மடித்து, தலைகுனிந்து, தலையில் கைவைத்து இவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பதுதான்!

இந்தப் படித்தவர்கள் நிச்சயமாகத் தம் புத்தியைக் காவு கொடுத்தது சம்பந்தமாக நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: “மனிதனுக்கு அவன் அறியாதவற்றை எல்லாம் அவன் (அல்லாஹ்) கற்றுக் கொடுத்தான்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அலக் 96:5)

அறிவு என்பதும் புத்தி என்பதும் இரு வேறுபட்ட செல்வங்கள். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அறிவைப் பெறலாம். ஆனால், புத்தியின்றேல் அந்த அறிவின் தாக்கம் சமூகத்தை அடையாது. அறிவின் பலனைப் பெற வேண்டுமானால் புத்தியாக அதைப் பிரயோசனப்படுத்த வேண்டும். அதனால்தான் இன்று பல இடங்களில் ஏட்டறிவைப் பெற்றவர்களையும் புத்தகப் படிப்பில்லாத புத்திசாலிகள் விஞ்சி நிற்கிறார்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: “பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்; அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய காதுகள் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்; நிச்சயமாக, அவர்களுடைய (வெளிப்) பார்வைகள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சங்களிலுள்ள (அவர்களுடைய) இதயங்கள் குருடாகிவிட்டன,” (அல்குர் ஆன் ஸூரா அல்ஹஜ் 22:46)

அல்லாஹ் மனிதனைப் பார்த்து உலகத்தில் பிரயாணம் செய்து அவனுடைய படைப்பினங்களைப் பார்ப்பதன் மூலம் அவனுடைய வல்லமையை உணர வேண்டாமா என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றான்.

கவலைக்கும் வருத்ததிற்கும் உள்ள விடயம் என்னவென்றால் இந்தக் கப்ஸாக்களைத் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டு அதன் வழி நடப்பவர்கள் உண்மையில் பூமியில் பிரயாணம் செய்கின்றார்கள்! ஆனால், அல்லாஹ் எதிர்பார்த்தவாறு அவர்கள் தம் மனக் கண்ணைத் திறந்து கொண்டு அதைச் செய்கிறார்களில்லை!

அதனால்தான், அல்லாஹ்வுடைய கட்டளையைப் பற்றியோ அல்லது அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்ற வழிமுறைகள் பற்றியோ எந்தவித அக்கறையுமின்றி கண்மூடித்தனமாகப் புத்தி மழுங்கி ஷைகுகளையும் பெரியார்களையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமோரிடத்திலே அல்லாஹ்வின் எச்சரிக்கை இப்படிப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்: “(நபியே!) நிச்சயமாக நிராகரிக்கிறார்களே அத்தகையோர் – அவர்களுக்கு நீர், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும், அவர்களுக்குச் சமமே. அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய இதயங்கள் மீதும், அவர்களுடைய செவிப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இன்னும், அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிருக்கிறது, மேலும் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. (அல்குர்ஆன் ஸூரா பகரா 2:6-7)

திரும்பத் திரும்ப அல்லாஹ் உதாரணங்களையும், அவனுடைய படைப்பின் தாற்பரியங்களையும், அவனுடைய தூதர்களுடைய சரிதங்களையும், அழிக்கப்பட்ட சமுதாயங்களையும் பற்றிச் சொல்லிக் காட்டுகிறான். அவற்றிலிருந்து பாடம் படிக்கும்படி கட்டளையிடுகிறான். அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறான்.

70,000 தடவைகள் கலிமாவை ஓதி நரக விடுதலை பெற முடியுமென்றால்:
1.   அல்லாஹ்வின் தூதர் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் அன்று அந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டும்?
2.   அவர்களின் ஆணைக்காகக் காத்திருந்து தங்கள் சொத்துக்களை, குடும்பங்களை இழந்த, உயிர்த்தியாகம் செய்த அந்த நபித்தோழர்களுக்கு ஏன் அந்த இழப்புகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்?
3.   பிறந்த மண்ணை விட்டுத் துரத்தப்படுமளவிற்கு ஏன் அவர்கள் அவர்களுடைய சொந்தக்காரர்களால்கூட வெறுக்கப்பட்டிருக்க வேண்டும்?
4.   எதற்காக அந்த யுத்தங்கள்?

இப்படி 70,000க்கும் அதிகமான கேள்விகள் எழும்புகின்றன!!!

70,000 தடவைகள் கலிமாவை ஓதி நரக விடுதலை பெற முடியுமென்றால்:

§  தொழுகை எதற்கு?
§  நோன்பு எதற்கு?
§  ஸக்காத் எதற்கு?
§  ஹஜ் எதற்கு?
§  நஃபில் தொழுகைகள்தான் எதற்கு?
§  தான தர்மங்கள் எதற்கு?
§  உறவினர்களைக் கவனித்தல் எதற்கு?
§  அயலவர்களின் நலன் பேணுதல் எதற்கு?

23 ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ஏனிந்தக் கஷ்டத்தைக் கொடுத்தான்? உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்டதாக அல்லாஹ் சொல்லிக்காட்டும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த மகத்துவமிக்க வழிமுறையை ஏன் அவன் காட்டிக் கொடுக்கவில்லை? மறந்து விட்டானா அல்லது இந்த ஷைகுகளை அவனுடைய தூதரைவிட மகத்துவமிக்கவர்களாக ஆக்க வேண்டுமென்று தீர்மானித்தானா? ஜக்கரிய்யா ஸாஹிப் முஸ்லிம்களை எங்கு அழைத்துச் செல்கிறார்? தெளிவாக இவர் முஸ்லிம்களை வழிகேட்டின்பால்தான் அழைத்துச் செல்கிறார்.

இதைத்தான் சொல்கிறோம் இந்த தப்லீஃக் இயக்கம் தெளிவான வழிகேட்டில் இருக்கிறது என்று!

அல்லாஹ்வுக்காகச் செய்கிறோம் என்ற எண்ணம்கூட இந்த ஷைகுகளுக்கில்லை. எதை எடுத்தாலும் ஏதோ ஒரு பலனைக் குறிப்பிட்டுக் கதை கட்டித்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளை இது, அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் இது என்று கீழ்ப்படியும் தன்மை இல்லை. அப்படியிருக்க எப்படி அல்லாஹ்வின் பொருத்தம் அச்செயல்களில் கிடைக்கும்?

முஸ்லிம்களே! இன்று நமது ஈமானுக்கு வேட்டு வெளியிலிருந்து வரவில்லை. அது நமக்குள் இருந்தே வருகிறது என்பதை இவ்வாறான கதைகளிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். இஸ்லாமிய இறை நம்பிக்கையைக் கேவலம் இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்த்து விட்டு பள்ளிகளைத் தம் நிருவாகத்தின் கொண்டு வந்து உடையையும் தஸ்பீஹ் மணியையும் இஸ்லாமிய அடையாளமாக்கி முஸ்லிம் சமூகத்தை நரகின்பால் இட்டுச் செல்லும் இக்கூட்டத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!


வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment