Friday, November 28, 2014

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் - 6

அல்லாஹ்வின் பெயரால்…..

இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!

                              (6)


அபூ பௌஸீமா

அல்லாஹ்வின் கட்டளையொன்றை இங்கு எடுத்தாள்வது மிகப் பொருத்தம் என்று நினைக்கிறேன்: “(விசுவாசிகளே!) அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள்; அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக, விரோதத்தால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள்,” (அல்குர் ஆன் ஸூரா அல்அன்ஆம் 6:108 வசனத்தின் ஒரு பகுதி)

அல்லாஹ்வின் இக்கட்டளையை மனதில் இருத்தித் தொடர்வோம்.

ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கெதிராக, அல்லது யுத்தத்திற்கெதிராக அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவ்வார்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கர்கள். தம் நாட்டின் தேசியக் கொடி இவ்வாறு மிக மோசமான முறையிலே அவமதிக்கப்படுவதைப் பார்க்கும் அவர்கள் உணர்வுகளைச் சங்கடத்திற்குள்ளாக்குகின்றோம் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்!

உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கக்கூடிய ஓர் ஆர்ப்பாட்டத்தில் சவூதி அரேபியாவின் கொடியை அப்படிச் செய்ய முற்பட்டால் அதனை நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? (சவூதி அரேபியாவின் கொடியில் “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹி,” என்று அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க!)

நமக்குச் சுதந்திரம் இருப்பதைப் போலவே மற்றவர்களுக்கும் அந்தச் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறந்து செயல்படத் துணியக் கூடாது.

முஸ்லிம்களின் நம்பிக்கை, அதனோடு ஒட்டிய கடமைகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதனோடு மேற்கூறிய வசனம் ஒத்துப்போவதை உணரக் கூடியவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.

ஒரே வசனத்தில் எவ்வளவு விசாலமான வளமான அர்த்தங்களை உள்ளடக்கி முஸ்லிம்கள் தூர நோக்கோடு சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்ற அறிவுரையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

தேசியக் கொடிகளையும், தேசிய கீதங்களையும் தலை குனிந்து வணங்கி, எழுந்து நின்று மரியாதை செய்வதன் மூலம் இன்று அதிகமான நாடுகளில் அல்லாஹ்வுக்கு இணையாகத்தானே அவற்றைப் புனிதப்படுத்துகிறார்கள்!

எதிரியை இனம் காணாமல் கண்மூடிப் பின்பற்றும் தலைமைத்துவங்கள்

குவைத் ஆக்கிரமிப்பின் போதும் பக்தாதில் அன்றிருந்த அமெரிக்கத் தூதுவர் குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையில் சச்சரவில் இருந்த பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளும்படி அறிவுரை கூறியதாக ஒரு செய்தி வந்ததை ஞாபகப்படுத்துவது பொருத்தமென்றுணர்கின்றேன்.

சகோதரர்களுக்கிடையில் இருக்கக்கூடிய சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி பிளவுகளை உண்டாக்கி அதில் குளிர் காய்வதற்கே சிலர் இருப்பதைப் போலவே நாடுநாடுகளும் இருக்கின்றன.

ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு எங்கே போனது அறிவு? மூட்டி விட்டவனைக் குறை கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. கண்மூடிப் பின்பற்றியவன்தான் குற்றவாளி. இதை ஏனோ இன்று நமது சமூகத்திலே படித்தவர்கள்கூட உணர்கின்றார்களில்லை. வேதனைக்குரிய விடயம் இதுதான்!

நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை ஞாபகமூட்டிச் செய்யப்படும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் கையாலாகாத சிலரின் வேலை என்று விமர்சனங்கள் வரலாம். ஆங்காங்கே ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அல்லது ஒரு சொற்பிரயோகத்தை மேற்கோள் காட்டி இவர்களெல்லாம் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றும் அவர்களின் அடிவருடிகள் என்றும் முத்திரைகள் குத்தப்படலாம்!

இஸ்லாமியர்கள் மத்தியில் அநேக காலத்திற்குப் பிறகு அல்குர்ஆனும் அல்ஹதீஸும் மட்டுமே நாட்டின் சிறப்புவாய்ந்த சட்டங்களாக இருக்கும், அதையே இனிமேல் இந்நாட்டின் சட்ட ஒழுங்காகப் பிரகடனப் படுத்துகிறோம் என்று பாக்கிஸ்தான் நாடாளுமன்றம், அந்நாட்டின் மேல்சபை ஆகியவற்றில் ஓர் அரசியல் சாசன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அது சட்டமாகவும் ஆகியது.

என்ன ஆனது? பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் கைது செய்யப்பட்டார். அரசியல் சாசனம் இடை நிறுத்தப்படட்து. ஒரு பெரிய நாடகம் அரங்கேறி அந்த முயற்சி தோல்வி கண்டது. காரணங்கள் புனைந்துரைக்கப் பட்டன. இறுதியில், ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகள் ஆட்சிபீடத்தில்!


தேசியம், இனம், மொழிவெறி

56 நாடுகள் உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகள் என்று அறிமுகம்!

முஸ்லிம் நாடு என்றால் இஸ்லாமிய ஆட்சி இருக்க வேண்டும். எங்கே இருக்கிறது இஸ்லாமிய நாடு? ஆகையால், எங்கே இருக்கிறார் இஸ்லாமிய நாட்டுக்கான தலைவர் – கலீஃபா? அப்படி ஒருவர் இருந்தால்தானே உலக முஸ்லிம்கள் அவரின் கீழ் ஒன்றுபட முடியும். அப்போதும், வீஸா எடுத்துக்கொண்டுதான் ஒரு முஸ்லிம் அந்நாட்டிற்குள் செல்ல முடியும் என்ற சட்டம் வந்துவிடுமோ என்ற நிலைப்பாடு இல்லாமலில்லை.

அந்த அளவுக்கு இன்று முஸ்லிம்கள் மத்தியிலே தேசியமும், இனப்புழுக்கமும், மொழிவெறியும் புகுந்து நாசம் விழைந்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில்கூட பிரதேசவாதமும் மொழிவெறியும் முதலிடம் வகிப்பதை வேதனையோடு பார்க்கிறோம்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment